திருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க! | Thirunavukkarasar's master plan stuns DMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (22/02/2019)

கடைசி தொடர்பு:12:01 (16/03/2019)

திருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க!

அரசரின் ஆட்டம் கூட்டணிக்கு ஆப்பாக மாறிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள். 

திருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க!

தி.மு.க கூட்டணிக்குள் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆடும் அரசியல் விளையாட்டைப் பார்த்து அதிர்ந்து கிடக்கிறது தி.மு.க தலைமை. ஏற்கெனவே திருநாவுக்கரசர் மீது கடுப்பில் இருக்கும் தி.மு.க தலைமை, இப்போது மீண்டும் காங்கிரஸ் தலைமைக்கு ஓலை அனுப்பும் வேலையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்த திருநாவுக்கரசரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது காங்கிரஸ் தலைமை. அதற்குப் பிறகும் திருநாவுக்கரசர் ஆடும் அரசியல் ஆட்டத்தைப் பார்த்து தி.மு.க தலைமை அதிர்ந்துகிடக்கிறது. 

திருநாவுக்கரசர்- விஜயகாந்த்.

திருநாவுக்கரசருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் நம்மிடம், “நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை தன்னை தலைவர் பதவியிலிருந்து எடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார் திருநாவுக்கரசர். ஆனால், அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் திருநாவுக்கரசர் இருப்பதாக தி.மு.க தலைமை கருதியது. அதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தரப்பிடம் திருநாவுக்கரசர் காட்டிய நெருக்கமும் தினகரன் தரப்போடு அவருக்கு உள்ள தொடர்பும் தி.மு.க தலைமை அவர் மீது சந்தேகம்கொள்ளச் செய்தது. தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. டெல்லியில் ராகுலிடம் இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டே சென்னை திரும்பினார் அரசர். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கிவிட்டால், அவர் கிட்டத்தட்ட செல்லாக்காசாகவே  மாறிவிடும் நிலையே இருந்துவந்தது. ஆனால், அரசர் அவ்வாறு இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், அ.தி.மு.க கூட்டணியில் செல்வதற்குப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை நேரடியாகச் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பை தி.மு.க தரப்பு ரசிக்கவில்லையாம். ஏற்கெனவே தே.மு.தி.க, அ.தி.மு.க தரப்புடன் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. திருநாவுக்கரசர் வேறு, நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து அரசியல் பேசியதாக வெளியே சொல்லியது யாருக்கு வைக்கும் செக் என்று தி.மு.க தரப்பு நினைக்கிறதாம். நேற்று இரவே, தி.மு.க தலைமையிலிருந்து டெல்லிக்கு, திருநாவுக்கரசர் அத்துமீறிச் செல்கிறார் என்ற ரீதியில் ஒரு புகாரைத் தட்டிவிட்டுள்ளது தி.மு.க தலைமை. விஜயகாந்த்தை சந்தித்துப் பேசியது குறித்தும் இப்போது தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

ஸ்டாலின் - அரசர்

விஜயகாந்த்தை சந்தித்து தி.மு.க அணிக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தாலும், தி.மு.க தலைமை சந்தோஷப்பட்டிருக்கும். ஆனால், தே.மு.தி.க-விடம் திருநாவுக்கரசர் கொடுத்த ஆலோசனையே வேறு. `இரண்டு திராவிடக் கட்சிகளையும் விட்டுவிட்டு நீங்கள் தினகரன் பக்கம் போங்கள். தமிழ்நாட்டில் தினகரன் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகுவார்’ என்று சொல்லியிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. இதனால், ஏகத்துக்கு அப்செட்டாக உள்ளார்கள் தி.மு.க தரப்பினர்.

அதேபோல் திருநாவுக்கரசர் சம்பந்தி இசக்கி சுப்பையாதான் தினகரனுக்கு வலதுகரமாக இப்போது உள்ளார். திருநாவுக்கரசர் ஏக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். அவர், தேர்தலில் நின்றால் செலவு செய்யும் பணியைச் சம்பந்தியான இசக்கி சுப்பையாவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தேர்தலில் ஜெயித்தால் காங்கிரஸ் கட்சியில் காலம் தள்ளுவார் அரசர். தேர்தல் முடிவு வேறுமாதி்ரியாக வந்தால் மீண்டும் திருநாவுக்கரசர் அணி மாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். உண்மையில், அவரது அரசியல் எதிர்காலம் காங்கிரஸ் கட்சியில் எப்படி இருக்கும் என்று தெரியாமல் உள்ளது. அதை அவரும் உணர்ந்துதான் அரசியல் காய்களைக் கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டார். தினகரன், விஜயகாந்த், ரஜினிகாந்த் இவர்கள் ஒன்றுசேர்ந்தால் தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவாகிவிடுவார்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் திருநாவுக்கரசர் சொல்லிய தகவல் தி.மு.க தலைமைக்கு எட்டி அதிர்ந்துகிடக்கிறது” என்கிறார்கள். 

அரசரின் ஆட்டம் கூட்டணிக்கு ஆப்பாக மாறிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close