Published:Updated:

`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்

`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்
`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்

'அ.தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்களெல்லாம் மண்ணைப்போன்று இருப்பவர்கள்' என்று முன்பு ராமதாஸ் விமர்சித்ததையும், இப்போது அவர்களோடே கூட்டணி வைத்திருப்பதைப் பற்றியும் கேட்கிறீர்கள். ராமதாஸ் நினைத்தால், மண்ணையும் பிள்ளையாராக மாற்றுவார்" என்று அதிரடியாகப் பேசினார்,பா.ம.க கட்சியின் மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா.

கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளம் பெண்கள் அணி மற்றும் மகளிர் அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம், அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.பாக்கியலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணைத் தலைவர் எஸ்.புனிதா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பா.ம.க மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினர். இந்தக் கூட்டம் முடிந்ததும், கவிஞர் திலகபாமா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பா.ம.க மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது என்பதையே, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி காட்டுகிறது. மகளிர் சக்தி மகத்தான சக்தி என்பதை நிரூபித்துக் காட்ட, மகளிரணி நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா' என்று நீங்கள் கேட்கிறீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி, தேர்தலுக்கான கூட்டணி. தொடரும் கூட்டணி அல்ல. பாட்டாளி மக்கள் கட்சிக்கு உறுதிசெய்துள்ள 7 தொகுதிகள் எதுவென்பதை கட்சிதான் முடிவுசெய்யும். எங்கள் கூட்டணியைப் பார்த்து எதிரணிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தரக் குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். அ.தி.மு.க அரசை தொடர்ந்து ராமதாஸ் எதிர்த்தார். அவர்களோடு இப்போது கூட்டணி வைக்கலாமான்னு கேட்கிறீங்க. இது, இப்போதைய தமிழக சூழலைப் பொறுத்த கூட்டணி. அதுவும் ராமதாஸ் கூட்டணி வைப்பதற்காக 10 கோரிக்கைகளை வெளியிட்டு, யாரும் செய்யாததைச் செய்து, டிரெண்ட் செட்டராக மாறியிருக்கிறார்.

 தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசு, அமைச்சர்கள் மண் போன்றவர்கள்' என்று விமர்சித்த பா.ம.க, இப்போது அவர்களோடு கூட்டணி அமைத்துள்ளதைப் பற்றி கேட்கிறீர்கள். இப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளை நாங்கள் வாபஸ் பெறவில்லை. புகார் உள்ள அமைச்சர்கள் மீது அரசும், நீதிமன்றமும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.  ஒரு நிர்வாகத்தை சரியாகச் செயல்படுத்தாததால் ஏற்பட்ட  கோளாறு, ஊழல் நடைபெறுவதற்கான காரணம். தற்போதைய அ.தி.மு.க-விடம் அதிகாரமும் பணமும் மட்டுமே உள்ளது. எங்களுடன் சேர்ந்துள்ளதால், தற்போது நிர்வாகத் திறமையும் சேர்ந்து ஊழலற்ற ஆட்சி வழங்க முடியும். மண்ணையும் பிள்ளையார் ஆக்குவார் ராமதாஸ்.  அவரின் வழிகாட்டுதலின்படி இயங்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது பா.ம.க-வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அ.தி.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, வெற்றிக் கூட்டணி. மக்கள் நலனுக்காக பா.ம.க, அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.