`அரசியலில் விமர்சனம் வேறு; கூட்டணி வேறு!’ - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் | ADMK EX minister Vaithilingam speaks about PMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (23/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (23/02/2019)

`அரசியலில் விமர்சனம் வேறு; கூட்டணி வேறு!’ - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

`அரசியலில் ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியை விமர்சனம் செய்வது என்பது வழக்கமான ஒன்று. இது இன்று, நேற்று இல்லை ஆரம்ப காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அதேபோல் தேர்தல் என்று வந்தவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது வேறு. எனவே விமர்சனம் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு' என தஞ்சாவூரில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகர பகுதிகளை வகைப்படுத்தி 12 துறைகளின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி தஞ்சை நகரத்தின் மையப் பகுதியில் 2.3 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ.897.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டப் பணியாக சுமார் ரூ.191 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கான அடிக்கல் நடும் விழா தஞ்சை வெண்ணாறு தலைமை குடிநீரேற்று நிலையத்தில் நடந்தது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கலெக்டர் அண்ணாத்துரை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, ``தஞ்சை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தஞ்சை வளமான கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதால் பழைமை மாறாமல் இந்த நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக மொத்தம் ரூ.897.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்தப் பணிகளும் வரும் 2021-ம் ஆண்டில் நிறைவுபெறும் எனக் கூறி எந்தப் பணிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

பின்னர் வைத்திலிங்கம்  செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,``தஞ்சை நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது தி.மு.க தலைவராக இருக்கும் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்பொழுது  இதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பாதாளச் சாக்கடை திட்டத்தை தஞ்சை நகரப் பகுதியில் செயல்படுத்தியது தி.மு.க. இதில் உள்ள குறைபாடுகளை அ.தி.மு.க அரசு  களைந்து வருகிறது. 

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூ என்ற இடத்தில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே, ஒழுங்கு முறை ஆணையம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளது. எனவே, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் கனவு பலிக்காது. அ.தி.மு.க, தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கெனவே அறிவித்ததுபோல் இது ரகசியமாகவே இருக்கும். பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அறிவித்ததுபோல் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்.சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர்  அதற்கான அறிவிப்பு வெளிவரும். அரசியலில் ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று. இது இன்று, நேற்று இல்லை ஆரம்ப காலத்தில் இருந்தே  நடந்து வருகிறது. அதேபோல் தேர்தல் என்று வந்தவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது வேறு. எனவே, விமர்சனம் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close