Published:Updated:

நெருங்கும் தேர்தல்... தயாரிப்பில் கட்சிக் கொடிகள்! வேகம் காட்டும் திருப்பூர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், மறுபக்கம் அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் தொழிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

நெருங்கும் தேர்தல்... தயாரிப்பில் கட்சிக் கொடிகள்! வேகம் காட்டும் திருப்பூர்!
நெருங்கும் தேர்தல்... தயாரிப்பில் கட்சிக் கொடிகள்! வேகம் காட்டும் திருப்பூர்!

ந்தியாவின் மிக முக்கியமான பின்னலாடை தொழில் நகரம் திருப்பூர். இங்குத் தயாராகும் பின்னலாடைகளுக்கு உலகம் முழுக்க வியாபாரம் இருக்கிறது. பின்னலாடைகளை ஏற்றுமதி செய்வதன்மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதில் திருப்பூருக்கு முக்கியப் பங்கு உள்ளது. தற்போது ஆளும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக திருப்பூரின் தொழில் துறை சின்னாபின்னமாகிப் போயிருந்தாலும், முடிந்தவரை மூச்சை இருக்கப் பிடித்துக்கொண்டு தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள், திருப்பூர் தொழில் துறையினர். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என பின்னலாடைத் துறை இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் களம் திருப்பூர் தொழில் துறையின் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு நல்லதொரு வியாபார வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள், டி- சர்ட்கள், தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி. அப்போது, அவரை வரவேற்று  நாடு முழுவதும் எழுப்பப்பட்ட  "மீண்டும் மோடி - வேண்டும் மோடி" என்ற கோஷம் பரவலாக எல்லோராலும் மனதிலும் இடம்பிடித்தது. அந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை தயாரித்துக் கொடுப்பதே திருப்பூர் மக்கள்தான் என்று மோடியும் பேசியிருந்தார். அந்த அளவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்துக்கான தேவைகளைத் திருப்பூர் பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் கட்சிகளின் கொடிகள், தொப்பிகள் தயாரிப்பதிலும் திருப்பூரே முன்னணியில் இருக்கிறது. 

திருப்பூரில் கொடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் கொடி மகேஷ் என்பவரிடம் பேசினோம். "எங்களது குடும்பம் கடந்த 30 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் ஆர்டர்களை எடுத்துச் செய்து வருகிறோம். குறிப்பாக,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி ஆர்டர்கள்தான் அதிகளவு கிடைக்கின்றன. பிரபலமான கட்சிகளின் கொடிகளை எப்போதுமே ஸ்டாக் வைத்துக்கொள்வோம். மற்றபடி புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகள், சிறிய அளவிலான அமைப்புகள் போன்றவற்றுக்கு ஆர்டர்களைப் பொறுத்து வேலைகளை முடித்துக் கொடுப்போம். சமீபத்தில்கூட எம்.ஜி.ஆர் நம்பி என்பவர் சென்னையில் புதிதாகக் கட்சியைத் தொடங்கினார். அவருக்கும் இங்கிருந்துதான் கொடிகள் தயாரித்து அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் திருப்பூர், கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில்தான் இந்தக் கொடி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகின்றன. முதலில் ஸ்கிரீன் பிரின்டிங் முறைதான் இதில் இருந்தது. தற்போது மெஷின் பிரின்டிங் என்ற நவீன முறை வந்துவிட்டது. ஒருநாள் முழுவதும் ஆகும் பிரின்டிங் வேலையை, 1 மணி நேரத்திலேயே முடித்துவிடக்கூடிய அளவுக்கு டெக்னாலஜிகள் வந்துவிட்டன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் இருந்தே தொழில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதற்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். தேர்தல் காலம் தவிர, மற்ற நேரங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவைக்காகவும் கொடி ஆர்டர்கள் வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், ஓர் ஆண்டு முழுவதும் ஆகும் விற்பனையை ஒரு தேர்தல் சீசனிலேயே பார்த்துவிடலாம். ஆனால், கடந்த காலங்களில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் எங்களது வியாபாரத்தில் லேசான மந்தம் ஏற்பட்டிருந்தது. இந்தமுறை எப்படியிருக்கப் போகிறதோ தெரியவில்லை" என்றார்.