Published:Updated:

`என் சாவுக்கு மம்தா தான் காரணம்!' - இறந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் பகீர் வாக்குமூலம்

`என் சாவுக்கு மம்தா தான் காரணம்!' - இறந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் பகீர் வாக்குமூலம்
`என் சாவுக்கு மம்தா தான் காரணம்!' - இறந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் பகீர் வாக்குமூலம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கௌரவ் தத்தா கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன் வீட்டில் யாரும் இல்லாத  நேரத்தில் மணிக்கட்டை கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதிக ரத்த போக்கு காரணமாக அதிகாரி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கௌரவ் தத் 1986-ம் ஆண்டு பேட்ச்சில் இணைந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானவர். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாவலரும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கோபால் தத்தின் மகன் ஆவார். கௌரவின் தற்கொலைக்குப் பிறகு அவரது அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் தன் தற்கொலைக்கு முழு காரணம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது அந்த மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகாரிக்கும் முதல்வருக்கும் இடையேயான மோதல்

சில வருடங்களுக்கு முன்னால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஐ.பி.எஸ் அதிகாரி கௌரவ் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என மம்தா பானர்ஜி அப்போதிலிருந்தே அவர் மீது கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய சக ஆண் காவலரை ஐ.பி.எஸ் அதிகாரி கௌரவ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அதனால் அவர் சில நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தற்கொலைக்கு முன் கௌரவ் எழுதிய கடிதம்

 ‘என் மீது உள்ள இரண்டு வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அதை முடித்து வைக்க மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். ஒரு வழக்கு வேண்டுமென்றே மேற்கு வங்க அரசு முடித்து வைக்காமல் உள்ளது. இன்னொரு வழக்கில் ஊழல் செய்ததாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்குகளை முடித்துவைக்கச் சொல்லி டி.ஜி.பி கூட பரிந்துரை செய்தார், இருந்தும் மம்தா அதை கண்டுகொள்ளவில்லை. கடந்த பத்து வருடங்களாக மம்தா என்னை ஒரு குற்றவாளியை போல் பார்க்கிறார். அவர் ஒற்றை மனத்துடன் ஒரு தலையாக மட்டும் என்னைப் பற்றி தெரிந்துகொண்டதுதான் இதற்குக் காரணம். 

என் மீதுள்ள வழக்கு முடியாததால் இதுவரை எனக்கு வரவேண்டிய எந்த ஓய்வூதியத் தொகையும் வரவில்லை. அதை வராமல் தடுப்பதற்காகவே வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளார் மம்தா. பல வருடங்களாக நான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த  பல லட்சம் ரூபாய் பணம் அனைத்தும் இதுவரை என் கைக்கு கிடைக்கவில்லை. அற்ப விஷயத்துக்காக, என்னைப் பழிவாங்கும் நோக்கில்தான் அவர் இப்படிச் செய்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் அரசை எதிர்த்துப் பேச பயப்படுவர். அதையும் மீறி பேசினால் ஆளும் கட்சியிலிருந்து உடனடி பழிவாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்குள்ள அனைவரும் அடிமைகளைப் போல், கைதிகளைப் போல் உள்ளனர். இந்த நச்சு தன்மை நிறைந்த தீய நரகம் போன்ற சூழல் மேற்கு வங்க அரசு மூலம்தான் உருவாக்கப்பட்டது. அதே சமயம் தனக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு மேற்குவங்க அரசு கார், இடமாற்றம் போன்ற பல பரிசுகளையும், சலுகைகளையும் வழங்கும். வெளிப்படையான எந்த காரணங்களும் இல்லாத நிலையில் என்னை இழிவுப் படுத்தி பழிவங்க நினைக்கும் அணுகுமுறை ஒரு தேசிய தலைவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் இல்லை. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையே ஒற்றுமையில்லாத காரணமும் என் தற்கொலைக்கு ஒரு காரணம்.

ஒரு நேர்மையான அதிகாரி சந்தித்த இன்னல்களை என் தற்கொலை வெளி உலகத்துக்குக் காட்டும் என நம்புகிறேன். இது என் சுய நினைவுடன் சொந்தமாக எழுதியது. யாருடைய வற்புறுத்தலும், தூண்டலும் இல்லாமல் எழுதப்பட்டது. சுய மரியாதையை இழந்து வாழ்வதற்குச் சாவதே மேல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரி கௌரவின் இந்த கடிதம் மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 
 

News Credits : The Print