Published:Updated:

`திராவிட இயக்கம்தான் எனக்குத் துணிச்சலைத் தந்தது' - தஞ்சை மாநாட்டில் திருமாவளவன் பேச்சு!

விகடன் விமர்சனக்குழு
`திராவிட இயக்கம்தான் எனக்குத் துணிச்சலைத் தந்தது' - தஞ்சை மாநாட்டில் திருமாவளவன் பேச்சு!
`திராவிட இயக்கம்தான் எனக்குத் துணிச்சலைத் தந்தது' - தஞ்சை மாநாட்டில் திருமாவளவன் பேச்சு!

தஞ்சை திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டின் இரண்டாம் நாள் காலை அமர்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா.சற்குணம், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஹெச்.காந்தராஜா மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி போன்றோர் பங்கேற்றனர். டாக்டர் அம்பேத்கர், அண்ணா, காமராசர், கருணாநிதி போன்ற தலைவர்களின் படத்திறப்பு நிகழ்வுடன் விழா தொடங்கப்பட்டது. மாநாட்டு சிறப்பு அழைப்பார்கள் சிறப்புரையாற்றினர்.

எஸ்.ரா.சற்குணம் பேசுகையில், ``தமிழகத்தைக் காக்கும் சக்தியாக கறுப்புச் சட்டைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமையடைகிறேன். நான் கறுப்புச் சட்டை அணியாவிட்டாலும் உள்ளத்தில் அந்த சிந்தனையோடுதான் வாழ்கிறேன். யார் சொன்னது, ஒரு பிஷப் பெரியாரியவாதியாகவோ, அம்பேத்கரியவாதியாகவோ இருக்கக் கூடாது என்று. நான் பிஷப்பாக இருப்பது எனது தொழில் என்றுகூடச் சொல்லலாம். மக்கள் ஒருவித மன அமைதிக்காகக் கடவுளை வழிபடுகிறார்கள். என்னைப்பொறுத்தமட்டில் தமிழக மக்கள் பெரியாரையும், அண்ணாவையும் வழிபடுங்கள் என்றுகூட பிரகடனப்படுத்துவேன். மேலும், பைபிள் ஒரு சமூக நீதி நூலாகும். பெரியாரிய கருத்துகளும், தலித்திய கருத்துகளும் அன்றே பைபிளில் கூறப்பட்டுள்ளது. தலித் என்ற அர்த்தமுடைய வார்த்தை பைபிளிலும் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஹெச்.காந்தராஜா பேசுகையில், ``சமூக நீதி என்பது முறையாக இங்கு விளக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற ஓர் வழக்கின் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்து வெவ்வேறு மக்களிடையே உள்ள முரண்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் முறைப்படுத்துவதுதான் சமூக நீதி. என்னைப்பொறுத்தவரைச் சமூக நீதி என்பது, குடும்பச் சொத்து அனைவருக்கும் சமமாக பகிர்ந்துகொடுப்பது போன்றது. ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. அப்படி, கிடைப்பதுதான் சமூக நீதியின் வெற்றி.

நமது அரசமைப்பு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசமைப்பு விதியின் துணைகொண்டு சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். மேலும், இல்லாத சட்டங்களை உருவாக்க வேண்டும். பெரியாரின் போராட்டத்தினால் நிகழ்த்தப்பட்ட முதல் சட்டத்திருத்தம்தான் இந்தியா முழுவதும் கல்வி இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பாக அமைந்தது. அதுபோன்ற அக்கறையும் போர் குணமும் தாழ்த்த மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் இருக்க வேண்டும்.ஏனெனில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி பற்றிய புள்ளி விவரங்களை அரசு வெளியிடாமல் மறுத்து வருகிறது. அரசியல் சட்ட திருத்தம் 73,74-ன் படி பிற்படுத்த மக்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு, கல்வியில் சமூக நீதி பாடத்திட்டத்தை உருவாக்கும் உரிமையைப் பெற வேண்டும்.

தொல். திருமாவளவன் பேசுகையில், ``சமத்துவம் வென்றெடுக்க அடிப்படைத் தேவையாக சுயமரியாதை ஓர் முன் நிபந்தனை. சுயமரியாதைக்கான கருவியாக சமூக நீதியைக் கையாள வேண்டும். சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி இவை மூன்றும் அடங்கியதே திராவிடக் கொள்கை. இவற்றின் அடிப்படை புரியாதவர்கள், திராவிடத்தால் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக அரை வேக்காட்டுத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறார்கள். திராவிடக் கோட்பாடு சனாதனத்துக்கு எதிராகச் சாதி, பாலினம், வர்க்கம் அனைத்திலும் சமத்துவத்தை முன்னிறுத்தி போராடக் கூடியது. சமூக நீதிக்கு ஆதாரமான அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற சனாதன அமைப்புகள் அரசியலமைப்பைக் குழிதோண்டி புதைக்கப் பொருளாதார இடஒதுக்கீட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

சமூகம், கல்வியில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் கிரீமிலேயர் கொண்டுவந்தது முதல் பொருளாதார இட ஒதுக்கீடு என்பது வரை, இட ஒதுக்கீடு பொருளாதாரத்துக்கு தான் கல்வி, சமூகத்துக்கு இல்லை என்று பின்னாளில் சமூக அநீதியை ஏற்படுத்தும். திருமாவளவனுக்கு ஏதோ தனிப்பட்ட தொகுதியில் நின்று வெற்றிபெறுவது நோக்கமல்ல. சனாதானியங்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து நாட்டில் சமூக நீதியைக் காப்பதே நோக்கமாகும். இம்மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள திராவிடக் கொள்கை அறிக்கை, இந்திய அளவில் விளிம்பு நிலை மக்களுக்கான ஆயுதம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் உண்டு, குறிப்பிட்ட சாதிய, மதவாத சக்தியை எதிர்த்துப் பேசும் துணிச்சலை திருமாவளவனுக்கு கொடுத்தது" என்றார்.

இட ஒதுக்கீட்டுக்கான சட்டம், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், நீதித்துறை மற்றும் தனியார்த்துறையில் இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, கிரீமிலேயர் மட்டும் நீட்டை நீக்குவது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.