Published:Updated:

`எனக்கு விருந்தும் கொடுக்கத் தெரியாது; தோட்டமும் கிடையாது' - திருமாவளவன் விளாசல்!

`எனக்கு விருந்தும் கொடுக்கத் தெரியாது; தோட்டமும் கிடையாது' - திருமாவளவன் விளாசல்!
`எனக்கு விருந்தும் கொடுக்கத் தெரியாது; தோட்டமும் கிடையாது' - திருமாவளவன் விளாசல்!

பழங்குடியினர்களுக்கு மனைப்பட்டா, சாதிச்சான்று வழங்க வேண்டும். திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் எனும் 22 கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் நேற்று (23.2.19) இரவு “மனைப்பட்டா - சாதிச்சான்று பழங்குடியினர் மாநாடு” நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, பழங்குடியினர் இருளர் சங்கத்தின் தலைவர்கள் கல்யாணி, டில்லிபாபு அவர்களுடன் கொளத்தூர் மணி, ப.சிவகாமி ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

மாநாட்டில் பேசிய கல்யாணி ``நான் பேராசிரியராக பணியாற்றியபோது என் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது, என்னைப் பணி இடமாற்றம் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டது. அப்போது என்னுடன் பணிபுரிந்த பொன்முடி கலைஞர் வரை கொண்டுசென்று அந்தப் பணி இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார். அப்படி அவர் அன்று செய்யவில்லை என்றால் நான் இன்று உங்கள் மத்தியில் பேசியிருக்க முடியாது. நான் கடவுளை வணங்குவது கிடையாது. ஆனால், பழங்குடி, இருளர் மக்களுக்காகப் போராடுபவர்களை வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் அரசியல் இல்லை ஆனால், ஓர் அரசியல் உண்டு. இந்த மாநாடு இருளர் மற்றும் பழங்குடி மக்களுக்காக நடத்தப்படுவதால், இதைப் பழங்குடி, இருளர் மக்கள்தான் நடத்த வேண்டும் எனக் கூறி வீட்டுக்கு 100 ரூபாய் வீதம் வசூலித்துத் தான் இந்த மாநாடு நடக்கிறது. அதைத் தவிர எந்த அரசியல் நிதியோ, நன்கொடையிலோ நடக்கவில்லை. அப்படி வாங்கி நடத்தினால் வருங்காலங்களில் வழக்கு பதிவு செய்வார்கள். அதைச் சந்திக்க வேண்டும். இப்போது யார் வழக்கு போட்டாலும் பயப்படவேண்டியதில்லை” என்று அவர் பேசினார். 
 
நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றிய அனைவருக்கும் நன்றி கூறி மாநாட்டின் இறுதியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ``பழங்குடிகளைப் பற்றி பேசினால் நேரம் எழும், உணர்ச்சிமிகு வார்த்தைகள் பொங்கி எழும். எந்த ஒரு சமூகமும் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு முதலில் செய்ய வேண்டிய வேலை அமைப்பாய் திரள வேண்டும். அமைப்பாய் திரள்வதே பாதுகாப்பதற்கான முதல்படி, முதல் அடி. ஆட்சியாளர்கள் யார்? அரசியல் வர்க்கத்தினர் யார்? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்வது அரசியல் ரீதியாக நம்மை வலிமைப்படுத்துவது ஆகும். அப்படி ஓர் இயக்கமாகத்தான் இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவாகியிருக்கிறது. பழங்குடி சமூகம் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகம், பட்டியலினத்தவர்கள் என அழைக்கப்படும் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், பூர்விக குடிகள். அரசியல் ரீதியாக நீண்ட நெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு கிளைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக, மாவட்ட பொறுப்பாளராக பெரிய அரசியல் கட்சிகளில் வந்துவிட முடியாது.

பட்டியலினத்தவர்களும், பழங்குடிகளும் அரசியல்ரீதியாக புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால், இவர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இணைய முடியும், உங்கள் குடியிருப்புப் பகுதிகளில் கிளைகளை உருவாக்க முடியும், கொடியேற்ற முடியும், தேர்தல் களத்தில் நீங்கள் பணியாற்ற முடியும், வாக்களிக்க முடியும், வாக்காளராக இருக்க முடியும். ஆனால், அந்த அரசியல் கட்சிகளின் கட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. எந்தச் சூழலிலும் அது அமைந்ததில்லை, அமையவும் வாய்ப்பில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேர்தல் அரசியலே வேண்டாம் என்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாத தேவை ஆகிவிட்டது என்பதைக் கருதி இந்த களத்தில் அடியெடுத்து வைத்தோம். நான் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்திருந்தால் என் வாழ்நாளில் ஒன்றியச் செயலாளராக கூட வந்திருக்க முடியாது.

ஒரு பெரிய அரசியல் கட்சியில் கட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. கட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாத அவர்களால் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. கட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாத அவர்களால் பொருளாதார அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாது.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாமனிதர்களின் வரவுக்குப் பிறகுதான், அவர்களுடைய சமூக விழிப்புணர்வுக்குப் பிறகுதான் ஒரு அரசியல் கட்சியை துவங்க முடியும் எனும் தெம்பு திருமாவளவனுக்கு வந்திருக்கிறது. ஒரு கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று வழி நடத்தமுடியும் என்ற ஆளுமை எங்கிருந்தோ நான் கடன் வாங்கிவிடவில்லை. எனக்குள் புதைந்து கிடந்ததை ஊற்றெடுக்க வைத்தது அண்ணல் அம்பேத்கரின் களப்பணிகளும், தந்தை பெரியாரின் பங்களிப்பும்.

எனவே, பழங்குடிகள் என்றால் ஆற்றல் இல்லை என எண்ணி விடக்கூடாது. அச்சத்தைத் தகர்ப்பதற்கு முதலடி அமைப்பாய் திரள்வதுதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்பதில்லை பிரச்னை ,எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறோம் என்பதில்லை பிரச்னை. மைய நீரோட்ட அரசியலில் நமது பங்களிப்பு என்ன என்பதுதான் பிரச்னை. வெற்றிதான் முக்கியம் என்றால் பாரதிய ஜனதாவையும் நம்மோடு சேர்ந்துகொள்ள முடியும். பாட்டாளி மக்கள் கட்சியுடனும் கைகோத்துக்கொள்ள முடியும். பாரதிய ஜனதா இருக்கிற அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது. எந்தக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார்கள், சமூகவலைதளங்களில் பேசியிருக்கிறார்கள். நண்டு, நத்தைகளை நசுக்கினால் கூட ஐயோ பாவம் எனக் கூறுவதற்கு ஆள் உண்டு.
ஆனால், பழங்குடிகளையும், பட்டியலினத்தவர்களையும் யாரும் எந்த நேரத்திலும் தாக்க முடியும், கொல்ல முடியும், கொடூரமாக வதைக்க முடியும், கட்டி வைத்து சித்ரவதை செய்யமுடியும், விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து இரவு பகலாக அடிக்க முடியும். எவனும் கேட்கமாட்டான் தண்டிக்கமாட்டான். இதுதான் இந்த தேசத்தின் வரம்.

விடுதலைச் சிறுத்தைகள் வருகைக்குப் பின் என்ன சாதித்திருக்கிறோம் என்றால், மீசையை முருக்குவதற்கு, நல்ல சட்டையை போடுவதற்கு, நெஞ்சுயர்த்தி தலைநிமிர்ந்து நடப்பதற்கு, அச்சமில்லை எனச் சொல்வதற்கு தைரியம் வந்திருக்கிறது. இவை பழங்குடி சமூகத்துக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் எங்கு திருட்டுப்போனாலும் எங்கே கொள்ளை போனாலும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு வக்கில்லாத கும்பல் காக்கிச்சட்டை கும்பல். குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்னும் நெருக்கடியின்போது அப்பாவி குறவர், இருளர் சமூகத்தின் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு செய்யாததைச் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். முதல் முதலாக இந்தப் பிரச்னையில் தலையிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். காவல்துறையின் ரெக்கார்டில் இருக்கும், இந்த தவற்றை இவர் இவர்தான் செய்வார்கள் என்று. ஏதேனும் தவறு நடந்தால் போலீஸார் ரெக்கார்டில் இருக்கும் நபரைக் குறிவைத்து தான் முதலில் பணியை துவங்குவார்கள்.

சிலர் சைக்கிள் திருடுவான், வேறு ஏதும் திருட மாட்டான். சில பைக் திருடர்கள் இருக்கிறார்கள், பின்னர் போராளிகளாக, மாவீரர்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் எல்லாம் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள், நாமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள். இப்படி நேர்மையாய் வாழக்கூடியவர்கள், உழைத்து வாழக்கூடியவர்கள் எல்லாம் சத்திரியர்கள் நாம் சாதாரணமானவர்கள். சாதாரணமானவர்களுக்கு பைக் திருடத் தெரியாது, பேரம் பேசத் தெரியாது. எத்தனை கோடி தருவாய் கூட்டணிக்கு வர, என எங்களுக்கு கேட்கத் தெரியாது. நாங்கள் தி.மு.க கூட்டணியில் தான் இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் சாதாரணமானவர்கள். நான் சத்திரியன் கிடையாது. ஏன்னா, எனக்குப் பேரம் பேசத் தெரியவில்லை. எனக்கு விருந்து கொடுக்கவும் தெரியாது. ஏன்னா, என்னிடம் தோட்டம் கிடையாது. முதலமைச்சரும் வரமாட்டார். நான் இருப்பது வேளச்சேரியில் பத்துக்கு பத்து ரூம்ல அங்கு முதலமைச்சர் வருவாரா? ஏன்னா, எனக்குச் சத்திரிய தர்மம் தெரியாது. ஆனால், போலீஸ் பார்வையில் அவர்கள் திருடர்கள் கிடையாது. உழைத்து வாழும் பழங்குடியினர், இருளர் மக்கள் மட்டும் குற்றப் பரம்பரையாகத் தெரிய காரணம் அதிகார வர்க்கம்.

என்னைச் சிலர் கேட்பதுண்டு, ‘நீங்கள் ஏன்? நான் தான் அடுத்த முதல்வர் எனக் கூறுவதில்லை’ என்று.
ஏனெனில் நான் வடிவேலு இல்லை. நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்னைக் கைது செய்யுங்கள் எனக் கூறுவதற்கு. எனவே மக்களே அரசியல் அமைப்பாய் திரள வேண்டும். நான் இரவெல்லாம் கண்விழித்து விடிய விடிய அண்ணல் அம்பேத்கருடைய பெயரை கொட்டை எழுத்தில் மதுரையில் உள்ள சுவர்களில் எழுதியிருக்கிறேன். முழக்கங்களை எழுதியிருக்கிறேன். அப்படி தான் எழுந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் தேர்தலுக்காக இந்தக் கூட்டம் நடத்தவில்லை. தேர்தலுக்கு பின்பும் நான் ஒன்றிணைவோம் மக்களே” என அவர் மாநாட்டில் பேசினார்.