Published:Updated:

வைகோவுக்கும், தி.மு.க.வுக்கும்தான் கூட்டணி - வசந்தகுமார் புது விளக்கம்!

வைகோவுக்கும், தி.மு.க.வுக்கும்தான் கூட்டணி - வசந்தகுமார் புது விளக்கம்!
வைகோவுக்கும், தி.மு.க.வுக்கும்தான் கூட்டணி - வசந்தகுமார் புது விளக்கம்!

அ.தி.மு.க.வினரை படு கேவலமாக விமர்சனம் செய்தவர் அன்புமணி ராமதாஸ். இப்போது அவர்கள் பணத்துக்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளார்கள் எனக் காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் வசந்தகுமார் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே  நான் கடந்த முறை போட்டியிட்டதன் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாம். அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி திடீரென ஏற்பட்டதல்ல. திட்டமிட்டு பணத்துக்காக சேர்க்கப்பட்ட கூட்டணி.  பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி என்பதை யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று. ஏனென்றால் அ.தி.மு.க.வை பற்றியும், அவர்களது ஆட்சியைப் பற்றியும்  விமர்சனம் செய்து புத்தகம் எழுதியவர்தான் ராமதாஸ். இன்னும் சொல்லப்போனால் அ.தி.மு.க.வினரை டயர் நக்கிகள் என்று படு கேவலமாக விமர்சனம் செய்தவர் அன்புமணி ராமதாஸ். இப்போது அவர்கள் பணத்துக்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

நேற்று வரை கழகங்கள் இல்லா தமிழகம் என்றும் கூறிய பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசையும், இன்று அ.தி.மு.க.வோடு எந்த அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அரசியலில் ஸ்திரத்தன்மை என்பது பா.ஜ.க.வினருக்கு கிடையாது. உலக வரலாற்றில் ஒரு அரசின் தலைமைச் செயலாளரை அவரது அலுவலகத்திலேயே சி.பி.ஐ. சோதனை செய்தது என்பது தமிழகத்தில்தான். அது தமிழகத்துக்கே அவமானம், அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதை மறைப்பதற்குத் தான் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காங்கிரசை பற்றி அவதூறாக ஏற்கெனவே பேசியிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க.தான் கூட்டணியின் தலைமை. அவர்கள் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியிருக்கிறார்கள். வைகோவுக்கும், தி.மு.க.வுக்கும்தான் கூட்டணியே தவிரக் காங்கிரஸோடு அல்ல. இந்தியாவிலேயே முதன்முதலாக எங்கள் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் என்று முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின். எனவே, ஸ்டாலின் கூறுவதை நாங்கள் கேட்போம். அவருக்குக் காங்கிரஸ் என்றும் துணைநிற்கும். ஒரு வேளை ம.தி.மு.க. சார்பில் வைகோ போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரைப் பிரசாரம் செய்ய அழைத்தால் நாங்கள் சென்று பிரசாரம் மேற்கொள்வோம்.

தமிழக அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வறுமைக் கோடு பட்டியல் கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் இன்று மக்கள் எதிர்கேள்வி கேட்கத் தயாராக உள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு வசந்த் அன் கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சியின் சார்பில் மார்ச் 2-ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரியில் கலைவிழா நடைபெறுகிறது" என்றார்.