Published:Updated:

`நான் பி.ஜே.பி-யின் பி டீம் இல்லை; தமிழகத்தின் ஏ டீம்' - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு!

`நான் பி.ஜே.பி-யின் பி டீம் இல்லை; தமிழகத்தின் ஏ டீம்' - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு!
`நான் பி.ஜே.பி-யின் பி டீம் இல்லை; தமிழகத்தின் ஏ டீம்' - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல்பேசும்போது, ``திருநெல்வேலின்னு சொன்னாலே அல்வாவும் அருவாவும்தான் நினைவுக்கு வரும். அதன் காரணமாகதான் வாளைப் பரிசளித்தார்கள். இத்தனை நாளாக உங்களுக்கு அல்வாவைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நீங்கள் அல்வா கொடுக்க வேண்டும். உங்கள் பெயரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். சாதனை என்பது சொல் அல்ல… செயல்! அதைச் செய்து காட்டுவார்கள் என் தொண்டர்கள். தலைவன் என்று வாய் விட்டுச் சொல்ல விரும்பாத நானே விரும்பும் தலைவர் காந்தி. அவர் இனி மனிதர் அல்ல. அவர் ஒரு உணர்வு. அதை உணர்ந்தால் அறத்தின் வழி நடக்க இயலும். பல நல்ல மனிதர்கள் வாழும் தமிழகத்தில் அவர்களை வெளியே வர விடாமல் முக்காடிட்டு உக்கார வைத்திருக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் வாரிசு அரசியல் விரும்பாதவர் ஆக இருக்க வேண்டும். புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவராக இருக்க வேண்டும். மக்களுக்குத் தொண்டாற்றுபவர் ஆக இருக்க வேண்டும். தகுதியானவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. கொள்கை என்ன என்று தொடர்ந்து கேட்கிறார்கள்? அதை மொத்தமாகப் புத்தகமாகப் போட்டுத் தந்து விடுகிறேன். உங்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். இதுவரை கொள்கையைப் பார்த்தா ஓட்டுப் போட்டீர்கள். மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை. தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம். சாதி களைவோம். மதச்சார்பின்மை போற்றுவோம். சமத்துவம் காப்போம். அரசு இயந்திரங்களின், இயக்கங்களின் முறைகேடுகளை அறவே ஒழிப்போம். கல்வியில் சமத்துவமும் சர்வதேச தரமும் எய்துவோம். இவை தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள். 

காசு சேர்க்காமல் விட்டு விட்டீர்களே என்று கேட்கிறார்கள். சாகும்போது இந்த சொத்து, காசு எல்லாம் நம் கூட வராது. எவ்வளவு சேர்ந்து என்ன? ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு இருக்கும்போது ஏதாவது உதவியதா? இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் கவனிக்காமல் விட்ட அடிமட்டத் தொண்டர்கள்தான் வாசலில் வந்து நின்றார்கள். அந்தத் தொண்டர்களை அவர்கள் கவனிக்கவில்லை. ஆனால், என் முதல் கவனமே அந்தத் தொண்டர்கள்தான். அறிஞர் அண்ணா சொன்னதுபோல் தற்பொழுது தெற்கு தேய்ந்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள். இந்தச் சம்பவம் நடந்தது என்ன… வெகு தொலைவிலா? இங்கிருந்து மிக அருகில் தானே நடந்தது. இந்தச் சம்பவம் நடந்ததும் ஓட்டு வரவில்லை என்பதற்காகத் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்று பேசுகிறார்கள். 

உங்களுக்குத் தேவை என்றால் இலவசங்களை வழங்குவதற்காக 60 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாகப் பட்டியல் போடுகிறீர்கள். வெட்கம் இல்லையா உங்களுக்கு! இலவசம் என்பது உங்கள் பாட்டன் சொத்தா? நீங்கள் கையோடு கொண்டு வந்தீர்களா? மெகா கூட்டணி என்று அழைக்கிறார்களே தேர்தல் முடிந்த பிறகு சிதறிப் போய் விடும் கூட்டணி அது. மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழகம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழக உரிமையை நாம் கேட்டுப் பெற முடியும். என்னைப் பார்த்து பி.ஜே.பி-யின் பி டீம் என்கிறார்கள். இந்தக் கெட்ட வார்த்தையெல்லாம் கேட்டால் கடும் கோபம் வருகிறது.

நாங்கள் தான் தமிழகத்தின் ஏ டீம். மக்களிடம் இருந்து நிதி பெற்று தான் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஓட்டுக்குப் பணம் பெறுவது தான் குற்றம். உங்கள் எதிர்காலத்தின் மீது செய்யும் முதலீடு எங்களுக்கு நீங்கள் அளிக்கும் நன்கொடை. மய்யம் இணையதளத்தில் உங்கள் நிதியை அளிக்கலாம். எதிர்வரும் தேர்தலில் பெருவெற்றியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்" என்றார்.