Published:Updated:

`இரண்டே மணி நேரத்தில் கூட்டணியை முடிவு செய்தார்' - கனிமொழியைப் புகழும் கே.எஸ். அழகிரி!

விகடன் விமர்சனக்குழு
`இரண்டே மணி நேரத்தில் கூட்டணியை முடிவு செய்தார்' - கனிமொழியைப் புகழும் கே.எஸ். அழகிரி!
`இரண்டே மணி நேரத்தில் கூட்டணியை முடிவு செய்தார்' - கனிமொழியைப் புகழும் கே.எஸ். அழகிரி!

காங்கிரஸ் மதத்தால் கட்டப்பட்ட கட்சி. ஆனால், மதவாத கட்சியல்ல எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.

தலைவராகப் பதவியேற்ற சிறிது நாள்களிலேயே சுமுகமாக முடிந்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி, மதம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பார்வை உட்படப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்டு பேசியவர், ``தலைவரான உடனேயே 10 தொகுதிகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள். தொகுதி பிரிப்பது என்பது நீண்ட இழுபறியாக இருக்கும். ஒன்பது தொகுதியா பத்து தொகுதியா பதினோரு தொகுதியா என்பது முக்கியமில்லை. 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெற வேண்டும். அதைக் கருத்தில் கொண்டே கூட்டணிப் பேச்சுவார்த்தை அன்பாகவும் அக்கறையுடனும் நடத்தப்பட்டது. 

தலைவர் ராகுல் காந்தியிடத்தில் கனிமொழி பண்பாகவும், அடக்கமாகவும் பேசி 2 மணி நேரத்தில் கூட்டணியை முடிவு செய்தது வரலாற்றில் முக்கியமான ஒப்பந்தம். மதவாதத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேரும்பொழுது, சமூகநீதி கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி சனாதன கூட்டத்தில் சேருவது சந்தர்ப்பவாதம். இதன் மூலம் பா.ம.க தனது கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது. பா.ம.க-வுக்கு அரசியல் கருத்து முக்கியமல்ல, `மற்றவைதான்' முக்கியமாக உள்ளது. மேலும், வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரு கட்சிகளிடம் பேரம் பேசிய கட்சி பா.ம.க மட்டுமே. முஸ்லிம் லீக் போன்ற மத அடிப்படையிலான கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது, பொய்யான மதச்சார்பின்மைதானே என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். 

தி.க., தி.மு.க, பொதுவுடைமை கட்சிகள் மத நம்பிக்கையற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி கடவுளால் மதத்தால் கட்டப்பட்டது. நாத்திக  கட்சியல்ல. ஜின்னா பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக அறிவித்தார். ஆனால், ராம பக்தர், ஆன்மிகவாதி இறக்கும்போதுகூட ஹேராம் என்ற காந்தியடிகள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார். மதம் எனக்கு என் குடும்பத்துக்கு இருக்கலாம். ஆனால், அரசிடம் இருக்கக் கூடாது. இன்னொருத்தர் மீது திணிக்கக் கூடாது என்றார். சுதந்திரத்துக்குப் போராடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள். ஆனால், பிற மதத்தைக் கொச்சைப்படுத்துவதில்லை. அதேபோல், நாங்கள் மதத்தை ஏற்கிறோம், ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே வழிபாடு என்று பேசும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவை ஏற்கவில்லை. காந்தி கையில் ராமர் இருக்கும்பொழுது ஒற்றுமை இருந்தது. இவர்கள் கையில் இருக்கும்பொழுது மசூதி இடிப்பு, கலவரம் போன்ற ரத்தக் களரிகளாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எங்கள் தத்துவம்'' என்றார்.

இதேபோல், `தம் தொண்டர்களிடம் தேர்தல் முடியும் வரை ஏதும் பேசாதீர்கள் என்று சொல்லியுள்ளார் ராமதாஸ், பேசினால் பல விஷயங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் போகும். இதிலேயே பா.ம.க-வின் நிலை தெரிந்துவிடும். என் குடும்பத்தில் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என்றும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் சபதம் எடுத்தவர் இன்று செய்ததற்கு பெயர் என்ன?' என்று வினவினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

பெரியாரையும் சமூகநீதி கொள்கையையும் ஏற்றதன் அடிப்படையில் திராவிடர் கழகம் தி.மு.க-வுக்கு மட்டும் தாய் கழகம் அல்ல. முஸ்லிம் லீகிற்கும் தாய் கழகம்தான். மோடி தமிழகத்துக்கு வந்தாலே #GoBackModi என்று உலக அளவில் பிரபலமாவதாகச் சொல்கிறார்கள். அது வார்த்தையில் மட்டும் இருக்கக் கூடாது. வரும் தேர்தலில் வாக்கிலும் இருக்க வேண்டும். சமூகநீதியின் திராவிடக் கொள்கை, திராவிட பாரம்பர்யத்தைக் காக்க மதவாத சக்திகளை தோற்கடிப்போம்' என்று கூறினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்.