Published:Updated:

`ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நான் நினைத்திருந்தால்..!'- திவாகரன் சொன்ன ரகசியம்

`ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நான் நினைத்திருந்தால்..!'- திவாகரன் சொன்ன ரகசியம்
`ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நான் நினைத்திருந்தால்..!'- திவாகரன் சொன்ன ரகசியம்

``ஓ.பி.எஸ்ஸுக்கு சங்கடத்தைக் கொடுத்து சிலர் அவரை வெளியேற்றினர்'' என்று சசிகலா சகோதரர் திவாகரன் பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா திராவிட கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட அண்ணா திராவிட கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  திவாகரன் தலைமையில் மன்னார்குடி தேரடியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட அண்ணா திராவிட கழகத்தினர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்துக்கான மேடை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களான தூத்துக்குடி சுப்ரமணியன் மற்றும் அரியலூர் சிவசந்திரன் ஆகிய இருவர்களின் பெயரில் மேடை அமைக்கப்பட்டது. பின்னர் அதைத் தொடர்ந்து முதலாவதாக புல்வாமா மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று முதலில் பேசிய அண்ணா திராவிட கழகத்தின் மாநில இளைஞர் அணி மற்றும் மாணவரணி செயலாளர் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், ``நம்ம  தமிழ்நாட்டிலிருந்து கூலி வேலைக்கோ மற்ற வேலைகளுக்கோ வடமாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் மக்கள் செல்வதில்லை. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு மட்டுமே மற்ற மாநிலத்துக்குச் செல்கின்றனர். இதுதான் தமிழகம். திராவிட அரசியலைத் தமிழகத்திலிருந்து புறக்கணிப்பது தமிழகத்துக்கு ஆகாத வேலை. மனிதர்களுக்குத் தான் கேன்சர் வரும். தற்போது தமிழக அரசியலுக்கு கேன்சர் வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதே அரசியலுக்கு வந்துள்ள கேன்சர்'' என்று விமர்சனம் செய்தார்.

மேலும், `முதலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைப் புறக்கணித்தாலே போதும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது நின்றுவிடும். இளைஞர்கள் தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைச் சரிசெய்ய இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், இதே நிலை இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால் நம்முடைய வருங்கால  சந்ததியினருக்கு கல்லாப்பெட்டியை கொடுக்க முடியாது. சவப்பெட்டியை மட்டும் தான் கொடுக்கமுடியும்" எனக் கூறி முடித்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணா திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் பேசுகையில், ``அண்ணா திராவிட கழகத்தில் அதிக அளவில் 80 சதவிகிதம் புதியவர்கள், இளைஞர்கள்தான். 20 சதவிகிதம் பழைய அரசியல்வாதிகள். ஏனென்றால் வருங்கால அரசியல் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்புக்கு கர்நாடகாவுக்குச் சென்றபோது அங்கு வந்த கர்நாடக மக்கள் நீங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லுங்கள் என்றனர். ஆனால் ஜெயலலிதா நான் தமிழகத்தைச் சேர்ந்தவள். கர்நாடகத்தை சேர்ந்தவர் என நான் கூறமாட்டேன் எனக் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து தாக்குதல் எதிர்ப்புகள் வந்தன. அப்போது முதன் முதலாக ஜெயலலிதாவுக்காக ரிங் ரவுண்ட் என்ற பாதுகாப்பு வளையம் மன்னார்குடியிலிருந்து எனது தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் ராஜீவ் காந்திக்கே ரிங் ரவுண்ட் பாதுகாப்பு அமைக்கப்பட்டது. பலமுறை ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறேன். தலைமைச் செயலகத்தை கைப்பற்ற முதன் முதலில் ஜெயலலிதாவுடன் சென்றபோது லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. இவற்றை எல்லாம் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அன்று முதலமைச்சர் ஆகப்போகிறார். இவ்வளவு பெரிய ஆளுமைக்கு வரப்போகிறார் என எண்ணி நான் செய்யவில்லை. ஜெயலலிதாவை எனது மூத்த சகோதரி என்று எண்ணியே பாதுகாத்தேன். 

1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின்னரும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தபோதும் வியாபாரிகள் சிலர் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்படக் கட்சிக்குள்ளே நுழைந்தனர்.  நல்லது நடந்தால் அவர்களுக்கு, கெட்டது நடந்தால் எங்கள் தலையில் வைப்பது என்று ஆட்சி செய்பவர்கள் செயல்பட்டனர். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்த பின்னர் பதவியேற்ற அமைச்சரவையில் நான் நினைத்திருந்தால் சில அமைச்சர்களைக்கூட மாற்றியிருக்க முடியும். கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவையை பொறுப்பேற்க வைத்தேன். பின்னர் ஓ.பி.எஸ்ஸுக்கு சங்கடத்தைக் கொடுத்து சிலர் அவரை வெளியேற்றினர். பின்னர் 10 நாள்களில் தீர்ப்பு வரவுள்ளதைத் தெரிந்துகொண்டே அவரைத் தவறாக வழிநடத்தினர்.

ஆட்சி அமைக்கத் தன்னை ஆளுநர் அழைக்க வேண்டும் என சசிகலாவை சொல்ல வைத்தனர். தொடர்ந்து சசிகலா சிறைத் தண்டனை பெற்றபின்னர், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை பாதுகாப்பாகத் தங்க வைத்து இந்த ஆட்சி அமைய மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர்கள்தான் பல நாள்கள் கண்விழித்துக் கிடந்தார்கள். இதற்கெல்லாம் நான் எவ்வளவு உழைத்திருக்கின்றேன். இதையெல்லாம் ஆண்டவன் ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான். போகிற போக்கில் ஒருவரை சசிகலா அடையாளங்காட்டினார். அவர் இன்று அ.தி.மு.கவையே அழிப்பேன் என்று சுற்றி வரத் தொடங்கிவிட்டார். இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா. என்னால் ஜெயலலிதாவுக்குப்  பிரச்னை ஏதேனும் வந்துள்ளதா, பினாமி என்ற இடத்தில் என் பெயர் ஏதேனும் உள்ளதா. நான்  நிமிர்ந்த நன்னடையுடன் இருந்தேன். கோழிக் கூண்டில் இருப்பதைப்போல அடைபட்டிருந்தேன். என்னை இருக்க விடவில்லை என்னை ஏமாற்றினார்கள். மேலும், அண்ணா திராவிடர் கழகம் 6 மாதக் குழந்தை. இது பருவமடைந்தால்தான் தேர்தலைப் பற்றி சிந்திக்கும். நேரம் வந்தால் போட்டியிடுவதா ஆதரவு தெரிவிப்பதா என முடிவெடுப்போம்" என கூறினார்.