``இதுபோன்ற கொத்தடிமை கூட்டத்தை இதுவரை தமிழகத்தில் பார்த்தது இல்லை” - கி.வீரமணி கடும் தாக்கு! | veeramani speech in thanjavur event

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (25/02/2019)

``இதுபோன்ற கொத்தடிமை கூட்டத்தை இதுவரை தமிழகத்தில் பார்த்தது இல்லை” - கி.வீரமணி கடும் தாக்கு!

``தமிழகத்தில் கொத்தடிமைகளின் ஆட்சி நடக்கிறது. இது போன்ற கொத்தடிமை கூட்டத்தை நாம் இதுவரை தமிழகத்தில் பார்த்தது இல்லை. இனியும் இது போன்ற ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் வரவிடக் கூடாது. மற்றவர்களுக்கு இது தேர்தல் ஆனால் எங்களுக்கு வரும்காலச் சந்ததியினரின் எதிர்காலம்” என கி.வீரமணி தஞ்சாவூரில் தெரிவித்தார்.

வீரமணி

தஞ்சாவூரில் கடந்த இரண்டு நாள்களாக திராவிடர் கழக சமூக நீதி மாநில மாநாடு நடைபெற்றது. இதில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற நிறைவு உரையில் அதன் தலைவர் வீரமணி பேசினார். அப்போது, ``உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன் சிலையை கோயிலின் உள்ளே வைக்க வேண்டும் என்று கலைஞர் முயற்சி செய்தார். ஆனால், கோயிலை தொல்லியல்துறை பராமரித்து வருவதால் அவரது சிலையை உள்ளே வைக்க முடியாது என்று கூறியதால் சிலை கோயிலின் வெளியே வைக்கப்பட்டுள்ளது. கோயிலைக் கட்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள். வெளியே இருக்க வேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.

ஸ்டாலினுடன் வீரமணி

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான அரசு சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகநீதி என்பதே இருக்காது. அவர்கள் செய்வது எல்லாம் வித்தைகள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 103 -வது சட்ட திருத்த மசோதாவை எரித்து அதன் சாம்பலை மூட்டை, மூட்டையாக கட்டி டில்லிக்கு அனுப்பும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். அவர்களுக்கு பல்லாக்கு தூக்கும் அ.தி.மு.க அரசு நன்றாக சிந்தனை செய்து பார்க்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி சமூக நீதி காத்த காவலர் என்று தி.க சார்பில் பட்டம் கொடுக்கப்பட்டது. யார் என்ன சாதனைகள் செய்தாலும் தி.க பாராட்டாமல் இருக்காது. சமூக  நீதியைக் காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் நிறைய உள்ளது. சமூக நீதியை நோக்கிச் செல்ல வேண்டிய பாதை நிறைய உள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கை வந்த போது அதை ஆர்எஸ்எஸ்தான் முதலில் எதிர்த்தது.

கூட்டம்

கடைசி கறுப்புச் சட்டைகாரன் இருக்கும் வரை எத்தனை முசோலினி அவதாரம் எடுத்தாலும் பா.ஜ.க ஒரு போதும் வெற்றி பெறாது.  சமூக நீதிக்காகப் போராடி நாம் பெற வேண்டிய வெற்றிகள் நிறைய உள்ளது. இதுபோன்ற கொத்தடிமை கூட்டத்தை நாம் இதுவரை தமிழகத்தில் பார்த்தது இல்லை. இனியும் இது போன்ற ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் வரவிடக் கூடாது. அவர்கள் தரும் பணத்திற்காக உங்களை விற்பனை செய்து விடக் கூடாது. இது மற்றவர்களுக்கு தேர்தல் ஆனால் எங்களுக்கு சந்ததியினரின் எதிர்காலம். கண்ணுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர்கள் பிடிங்கிச் செல்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும். பணத்திற்கு ஆசை பட்டால் நாம் செத்துப் போய்விடுவோம். வாக்களிக்கும் நேரத்தில் பொத்தானை அழுத்தினோம். நமக்கு ரூ.5,000 கிடைத்து விட்டது என்று நினைக்கக் கூடாது. இந்தத் தேர்தல் நமது சந்ததியினர் எதிர்காலம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close