Published:Updated:

மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?

மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?
பிரீமியம் ஸ்டோரி
மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?

தவமுதல்வன்

மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?

தவமுதல்வன்

Published:Updated:
மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?
பிரீமியம் ஸ்டோரி
மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?

றப்போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, பல ஆண்டுகள் நீடித்து ரத்தச்சேற்றில் ஈழப்போராட்டம் மூழ்கடிக்கப்பட்டதை உலகம் அறியும்.  2009, மே மாதம் முடிவுக்குவந்த போருக்குப் பின், பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். கடந்த சில வருடங்களாகத்தான் இலங்கையின் விடுதலைப் போராட்டம் பற்றிய பேச்சு கொஞ்சம் தமிழகத்தில் குறைந்திருக்கிறது. என் வாழ்நாளில், தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டதாக அவதானித்த விடயங்களில் ஒன்று, இலங்கையில் நடைபெற்ற வடகிழக்கு தமிழர்களின் போராட்டம் பற்றியதே. நான் அங்கே பிறந்து ஏழு வயதாக இருக்கும்போதே குடும்பத்துடன் தமிழகம் வந்துவிட்டோம். எங்களை ‘தாயகம் திரும்பியோர்’ என அழைக்கிறார்கள். உண்மை அதுதானா என்றால் இல்லவே இல்லை, திருப்பி அனுப்பப்பட்டோம். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாங்கள் வெளியேற்றப் பட்டோம். ஓராண்டு ஈராண்டு அல்ல, 150 ஆண்டுகளுக்கு மேல் அந்த மண்ணில் வாழ்ந்து, அந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும் தேயிலையால் கட்டியெழுப்பிய நாங்கள் திருப்பி அனுப்பப் பட்டோம். 1948-ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது மட்டுமே எல்லோருக்கும் தெரியும். ஆனால், அன்றிலிருந்துதான் பத்து லட்சம் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர். அந்த மலையகத் தமிழர் பற்றி எவருக்கும் இங்கே தெரியாது. தெளிவாகச் சொன்னால், வெள்ளைக்காரனிடம் இலங்கை குடியுரிமையுடையவர்களாக இருந்து, சிங்களப் பேரினவாதிகளிடம் நாடற்றவர் ஆக்கப்பட்டோம். பின் 1964-ல், இன்னொரு துரோக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அன்றைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவும், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் செய்துகொண்ட அந்த ஒப்பந்தம் எங்களை இந்தியாவிற்கு நாடுகடத்தியது. இரண்டு நாள்களில் பல லட்சம் மக்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டது, இன்றுவரை அந்த வாழ்க்கை அல்லாடிக்கொண்டிருக்கிறது.

மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ?

வீடு சொந்தமில்லை, காணி சொந்தமில்லை, குடியுரிமை இல்லை... இதுதான் அன்றைய நிலைமை. பல முன்னெடுப்புகளுக்குப் பிறகு, இப்போது குடியுரிமை இருக்கிறது. ஆனாலும்,  ஏனைய சமூகங்களோடு ஒப்பீடு செய்யும்போது மிகவும் பின்தங்கிய நிலைமையே இன்னும் நீடிக்கிறது, 200 ஆண்டுக்கால இலங்கையில் மலையக வாழ்க்கை. இந்த வாழ்வோடுதான் வடகிழக்குத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டமும் நடந்துகொண்டிருந்தது. சமூகப் பொருளாதார வாழ்வில் நிலம் உடையவர்களாகவும், கல்வி, அரசு வேலைவாய்ப்பில் சற்று முன்னேறியவர் களாகவும் உள்ள - குறிப்பாக அடிப்படைத் தேவையை அடைந்திருக்கிற - அவர்களின் கோரிக்கையும், அதுகூட இல்லாமல் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிற மலையக மக்களின் கோரிக்கையும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொழி ஒன்றுதான் இருவருக்கும். நிலம், கலாசார நடவடிக்கைகள், தொழில் போன்றவற்றில் பாரிய வேறுபாடுகள் உள்ளதை எவரும் பேசுவதே இல்லை. சரியாகச் சொன்னால், இப்படி ஒரு வரலாற்றைக்கொண்ட மக்கள் அங்கு வாழ்வது தமிழக அரசியலின் பொதுப்புத்தியில் இல்லை. நிலைமை இப்படியிருக்க ஈழப்போர், மலையகத் தமிழர் மனதில் எந்தவித தாக்கத்தை உருவாக்கியிருக்கும்? ‘மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது’ என்பார்களே அதுதான் இன்றைய மலையக மக்களின் நிலைமையும்கூட.

இன்றைக்குப் பெருந்தோட்டங்கள், பெரும்பாலும் பராமரிப்பின்றி விடப்பட்டு அதில் வேலைசெய்த பல லட்சம் பேர் வேலையிழந்து நகரங்களுக்குச் சென்று விட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைத் தவிர, எல்லோரும் கொழும்பில் ‘அன்றாடங் காய்ச்சி’ பிழைப்புதான். வேறு சில மாவட்டங்களில் (களுத்துறை, காலி மாத்தளை, மொனராகலை, ரத்னபுரா) நாம் சொல்லிக்கொள்கிற நவீனச் சமூகத்தின் எந்த வசதியும் அற்ற (அத்திப்பட்டு) கிராமங்களே உள்ளன. சிங்கள மக்களோடு இரண்டறக் கலந்து, திருமணம் முடித்து வாழும் எளிய குடும்பங்களும் அங்கே உள்ளன. உடை, மொழியெல்லாம் சிங்களமயமாகி தமிழை மறந்த மக்களையும் காணமுடியும். வன்னிப் பகுதியில் குடியேறிய மக்களின் நிலைமையோ இன்னும் மிக மோசம். 1957, 1983 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர், வன்னிப் பகுதியில் குடியேறி அங்குள்ள நிலங்களைப் பண்படுத்தப் பணிக்கப்பட்டனர். பலருக்கு வடகிழக்கு மக்களின் காணிகளைப் பிரித்துக்கொடுத்து அதில் வாழப் பணிக்கப்பட்டனர். ஆனால், போர் முடிந்த பிறகு, அதன் சொந்தக்காரர்கள் அதையும் திருப்பி வாங்கிக்கொண்டனர். அது மட்டுமல்ல, போருக்கு முகம்கொடுத்து, பல்லாயிரம் பேரையும் இழந்த மலையக மக்களையும் இன்னும் ‘தோட்டக்காட்டான்’ என்கிற அளவில் நடத்துகிற வடகிழக்கு மனநிலையை என்னவென்று சொல்வது. நகராட்சி, மாநகராட்சி போன்ற நிர்வாக அலகுகளில் சாதாரண பொறுப்புகளுக்குக் கூட அங்கே இவர்கள் வர இயலாது. காரணம், பிரதேசவாதம். எவரிடம் அவர்கள் இதை முறையிட?

பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவே இதைச் சொல்கிறேன். இதைச் சொல்வதால் ‘பிரதேசவாதி, காட்டிக்கொடுப்பான், இனவிரோதி’ என்று முத்திரை குத்தி தப்பிப்பது வழமையான ஒன்று. ஒன்றுபடத் தடையாக இருக்கும் எதையும் எவர் செய்தாலும் கண்டிப்பதுதானே முறை. ஏனெனில், சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரை தமிழர் என்ற ஒரு கோணத்தில் நின்றுதான் தாக்குதலைத் தொடுக்கிறது. மலையக மக்களும் அப்படித்தான் நடத்தப் படுகின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு உடலையும் உழைப்பையும் தவிர எதுவுமில்லை. வாக்குச்சீட்டு அரசியல், தொழிற்சங்கம், தோட்டம் இதற்குள்ளேயே அவர்கள் வாழ்வு முடங்கியுள்ளது. சமூகப் பொருளாதார வாழ்வில் ஏனைய சமூகங்களுடன் சமவுரிமையோடு வாழ ஓர் அரசியல் நிலைப்பாடு தேவை. அதைப் பற்றிப் பேசுவதற்கான சூழலைப் போருக்குப் பின்னரான இந்த காலம் உருவாக்கும் என நம்புகிறேன். நிறைகுறைகள் பல இருப்பினும், சமீபகாலமாக மலையகம் பற்றி ‘எல்லோரும் பேசும்’ நிலைமை இப்போது இருக்கிறது. போரைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்ட பலரின் கருத்துகள் பொதுவெளிக்கு வருகின்றன.

“எங்களப் பத்திப் பேசத்தான் எந்த நாதியும் இல்லையே?” தேயிலைத் தொழிலாளியின் இக்குரலை எங்கும் நீங்கள் கேட்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!