Published:Updated:

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்
பிரீமியம் ஸ்டோரி
தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்

Published:Updated:
தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்
பிரீமியம் ஸ்டோரி
தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

ழப்பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்கு மான உறவு என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வநாயகம் பெரியாரைச் சந்தித்தது, அண்ணா காலத்திலேயே ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தி.மு.க. தீர்மானம் போட்டது ஆகிய வரலாற்றுப் பதிவுகள் இருந்தாலும், 80-களுக்குப் பிறகுதான் ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தில் உருவான ஆயுதக்குழுக்கள், 1983-ல் நடந்த ஜூலை இனப்படுகொலைகள் ஆகியவற்றின் விளைவாக, ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தமிழக மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்திராகாந்தி அரசும் பல்வேறு போராளி அமைப்புகளுக்கு ஆதரவு தந்து ஆயுதப் பயிற்சியும் அளித்தது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்து நிதியுதவியும் அளித்தார். தொடக்கக் காலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி,  ‘டெலோ’ ஆதரவாளராக இருந்தார். சபாரத்தினம் கொலை உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அவர் விமர்சித்தாலும், தி.மு.க-வினர் பெரும்பாலும் புலி ஆதரவாளர்களாகவும் இருந்தனர். 

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

அரசியலைத் தாண்டி ஈழ இயக்கங்களுக்கு ஆதரவுத் தளத்தை உருவாக்கியதில் மிகப்பெரும் பங்கு வகித்தவர்கள் பெரியாரிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் பிரபாகரன் என்று ஒரு குழந்தைக்குப் பெயர் இருந்தால், அந்தக் குழந்தையின் தந்தை தி.க. அல்லது தி.மு.க.காரராக இருக்க வேண்டும். பின்னாளில், விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டபோது, அதிகமும் நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் திராவிடர் இயக்கத்தவர்களே. ராஜீவ் கொலைவழக்குக் குற்றவாளிகளில் ஒருவராகத் தன் இளமையையும் வாழ்க்கையையும் தொலைத்து வாடும் பேரறிவாளனின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணி கொண்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இருவரும் ஈழ ஆதரவுக்காகத் தனிப்பட்ட முறையில் சந்தித்த இழப்புகளும் நெருக்கடிகளும் ஏராளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

தி.மு.க., ஈழப்போராளிகளுக்குப் பல உதவிகளைச் செய்தாலும், தமிழகத்தில் ஈழப்போராளிகளின் சகோதர மோதல், அதன் உச்சமான பத்மநாபா கொலை, ராஜீவ் படுகொலை, ஜெயின் கமிஷன் விசாரணை, சுப்புலெட்சுமி ஜெகதீசன் போன்ற தி.மு.க.வினர் கைது ஆகியவை கொடுத்த நெருக்கடிகள் காரணமாக, வெளிப்படையான ஈழப்போராட்ட ஆதரவைத் தி.மு.க கைவிட்டது. எம்.ஜி.ஆர் சாகசவாத மனநிலை யிலும் மனிதாபிமான அடிப்படையிலும் விடுதலைப்புலிகள் ஆதரவாளராக இருந்தாரே தவிர, ஈழ ஆதரவுக் கருத்தியலைத் தன் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை அவர் கொண்டுசேர்க்கவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா, ஈழப்பிரச்னையில்
எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் எதிர்த்திசையில் இயங்கினார்.  கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, ‘விடுதலைப் புலிகள் ஊடுருவல், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதுவும் தி.மு.க.வுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோ, தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டபோது, ‘கருணாநிதியைக் கொல்ல புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக’ உளவுத்துறை அறிக்கையே காரணமாக முன்வைக்கப் பட்டது.

2009-ல் ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தை எட்டியபோது, தி.மு.க தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் முக்கியப் பங்கு வகித்தபோதும், தி.மு.க-வால் இனப்படுகொலைகளைத் தடுக்க முடிய வில்லை. அதற்கான பின்னணிக் காரணங்களாகப் பல விஷயங்கள் பல தரப்பால் முன்வைக்கப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. கருணாநிதியின் குடும்ப அரசியல், மாநில அரசின் வரையறுக்கப்பட்ட எல்லைகளைச் சுட்டிக்காட்டாமல் நடந்த அரசியல் நாடகங்கள் ஆகியவை கருணாநிதியின் அரசியல் பிம்பத்துக்குக் களங்கம் சேர்த்தன.

முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு, தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் புத்துயிர் பெற்றது எனலாம். ராஜீவ் படுகொலையை ஒட்டி, புலி ஆதரவாளர்களுக்கு இருந்த தடைகள் குறைந்து, பிரபாகரன் படத்துடன் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அதுவரை தீவிர புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, ‘தமிழீழமே தீர்வு’ என்றார். 2011-ல் முதல்வரான பிறகு, ‘இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’, ‘இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்’, ‘ராஜீவ் கொலைவழக்குக் குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும்’ போன்ற தீர்மானங்களைக் கொண்டுவந்தார். இவை, ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு நற்பெயரைத் தந்தது. இன்னொரு பக்கம் கருணாநிதியும் தி.மு.க.வும் பல தீவிர ஈழ ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் படுகொலைப் புகைப்படங்கள் வெளியான போது, தமிழகம் கொதிநிலையடைந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, தமிழக ஈழ ஆதரவாளர்களின் அரசியல் நகர்வுகள் இரு திசைகளை நோக்கி நகர்ந்தன. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிட்டுப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும், அவை போதிய வெற்றிய டையவில்லை. தி.மு.க. எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எதிர்ப்பாகி, சாதியத்தை ஆதரிக்கும் குறுந்தேசியப் போக்கும் உருவானது. இதன் விளைபொருளாக, சீமானின் அரசியலைச் சொல்லலாம். தொடக்கக் காலங்களில் பெரியாரிய இயக்க மேடைகளில் பேசி அறிமுகமான சீமான், முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பிறகு, திராவிட எதிர்ப்பு, தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களை வெளியே நிறுத்தும் தூயதேசியவாதம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே இந்திய அரசியல் சட்டகத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் அரசியலில் இறங்கினார். இனப்படுகொலைக்கு நீதி கேட்பது மறைந்துபோய், புலிகளுடனான உறவை மிகைப்படுத்திப் பேசி கற்பனாவாத சாகச அரசியலை முன்வைத்தார். ஏற்கெனவே திராவிட அரசியல் கட்சிகளின் ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றால் வெறுப்புற்ற இளைஞர்கள் பலர் இந்த அரசியலால் ஈர்க்கப்பட்டனர். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு இது எந்தவகையில் நன்மை செய்யும் என்று தெரியவில்லை.

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

இனப்படுகொலை முடிந்த பத்தாண்டுகளில், ஈழ ஆதரவாளர்கள் முன்நிற்கும் முக்கியமான கேள்விகள் இவை.

* இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படும் சாத்தியங்கள் எவை?

* விடுதலைப்புலிகள்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும், சிங்களப் பேரினவாத அரசை எதிர்கொள்ளும் தமிழர் தரப்பாய்ப் புலிகள் இருந்தனர். வலுவான பிரதிநிதிகள் அற்ற தமிழ்ச் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் என்ன?

* ஜனநாயக மறுப்பு, சகோதரப் படுகொலைகள் போன்ற ஆயுதப் போராட்டத்தின் பக்கவிளைவுகள், ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளி ஆகியவற்றை இனிவரும் புதிய அரசியல் போக்குகள் கவனத்தில்கொள்ளுமா?

* இன்றைய உலகமயச் சூழலில், வளர்ந்த நாடுகள் இலங்கையைத் தங்கள் வணிக நலன்களுக்கான சந்தையாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலில், தமிழர்களின் நிலை என்ன?

* பௌத்த பேரினவாதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல்கள், சமீபத்தியக் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கமொன்று பொறுப்பேற்றது ஆகியவை இலங்கை அரசியல் சூழலிலும் ஈழத்தமிழர் வாழ்விலும் என்ன தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன?

என்ன சொல்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்?

பழ.நெடுமாறன்
   (தமிழர் தேசிய முன்னணி)


“ராஜபக்‌ச, மனித உரிமைகளை மீறியுள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தும், சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவர் நிறுத்தப்படவில்லை. முக்கியக் காரணம், சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள 144 நாடுகளில் ஏதோவொன்று புகார் அளிக்க வேண்டும். இந்தியா உட்பட எந்த நாடும் இலங்கைமீது இதுவரை புகார் அளிக்கவில்லை. மனித உரிமை கமிஷன், இலங்கைமீது எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றும் முயற்சியையே இந்தியா செய்தது. அந்தக் கொடூரம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும், தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் அகற்றப்படவில்லை. ஈழத்தமிழர்களிடமிருந்து பறிக்கப் பட்ட விவசாய நிலங்கள் திரும்ப அளிக்கப்படவில்லை. மீன் பிடிக்க விதித்துள்ள தடை, நீக்கப்படவில்லை. சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் என்னவானார்கள் என்பது இதுவரை சொல்லப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்களுக்கு, தமிழக அரசு மூலம் இந்திய அரசு உதவிகள் செய்கிறது. ஆனால், அவை போதாது. ஐ.நா அகதிகள் ஆணையம் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு ஏற்ற உதவிகளைச் செய்துவருகிறது. அதையும் ஈழத்தமிழர் அகதி முகாமில் நடைமுறைப்படுத்த இந்தியா அனுமதிக்கவில்லை. இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும்”

தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

“இனப்படுகொலையை விசாரிக்க தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும். இதுதான் 2009-ல் வைக்கப்பட்ட முதல் கோரிக்கை. இதன் அடிப்படையில்தான் 2010-ல் நாடு கடந்த தமிழீழ அரசு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கு உட்பட்டு, அமைதியான முறையில் தாயக மீட்பு எனும் கோரிக்கையோடு, அதன் பிரதமராக உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல், பல அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. 2010-ல் ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குச் சென்று, ராஜபக்‌சவைச் சந்தித்து, ‘இக்குற்றம் தொடர்பானவர்களை விசாரிக்க வேண்டும் என்பதாக’ கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  அப்போது அதிபர் அமைத்த நல்லிணக்க ஆணையம் நம்பகம் இல்லை என்று, பான் கி மூன் வேறோர் ஆணையத்தை அமைத்தார். 2009-ல் ஐ.நா மன்றத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தீர்மானம் இயற்றி, விசாரணை கோரிக்கையை நிராகரித்தார்கள். ஆனால், அடுத்தடுத்து வரும் தீர்மானங்களில் பெரும் மாற்றம் வந்தபடியே இருக்கிறது. அது இலங்கைக்கு ஒரு நெருக்கடியைத் தருகிறது. 

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

2015-ம் ஆண்டு, OISL எனும் அதிகாரபூர்வமான விசாரணைக் குழுவை ஐ.நா அமைத்தது. இந்தக் குழு, 2016-ல் அறிக்கை ஒன்றைத் தந்தது. போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன. மனித விரோதமான குற்றங்கள் நடந்திருக்கின்றன. 70,000 குடும்பங்கள் மாட்டிக்கொண்டிருந்தை  70,000 பேர் என்று கணக்கு காட்டி, அவர்களுக்கான தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை மறைத்தது. பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியது, வெளியேற நினைத்த வர்களையும் தாக்கியது உள்ளிட்டவை இந்த அறிக்கையில் நிரூபணமாயின. அதேபோல, புலிகள் யுத்தத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள், மக்களைத் தடுத்தார்கள் என்பது அதில் சொல்லப்பட்டிருந்தன. ஆனால், புலிகள்மீது எவ்விதமான பாலியல் குற்றச்சாட்டுகளும் இல்லை. அதிகாரத்தின் மேலிருந்து கீழ்வரை உத்தரவிடப் பட்டு, திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம் என்று அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. இதை நீட்டித்துப் பார்த்தால், இனப்படுகொலை எனச் சொல்ல முடியும். அப்போது, மனித உரிமை ஆணையரிடம் (Zeid raad al Hussein), ‘இதை ஏன் இனப்படுகொலை என்று சொல்லவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘இனப்படுகொலை இல்லை என்றும் நான் சொல்ல வில்லையே’ என்றும் ‘நாங்கள் நடத்தியிருப்பது மனித உரிமை விசாரணைதான். இதைத் தாண்டியும் கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் யார் யார் குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். அதற்குப் பன்னாட்டு குழு அமைக்க வேண்டும்’ என்றும் கூறினார். இதன் அடிப்படையில்தான், 2016 அக்டோபரில், ஐ.நா மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பன்னாட்டு விசாரணை என்பது தமிழர்களின் கோரிக்கை, உள்நாட்டு விசாரணை என்பது இலங்கை அரசின் கோரிக்கை. இதை இரண்டையும் கலந்து, உள்நாட்டு விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், புலனாய்வு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியது. இதை இலங்கையும் ஏற்றுக்கொண்டு இரண்டு வருடங்கள் காலக்கெடு கேட்டது. அது முடிந்ததும் மீண்டும் காலக்கெடு கேட்டார்கள். இப்போது இலங்கையின் அயலுறவு துறை அமைச்சர், ‘இப்படி விசாரிப்பதற்கு எங்கள் நாட்டின் சட்ட விதிகளே இல்லை’ என்கிறார்.  தற்போதைய ஐ.நா மனித உரிமை உயர் ஆணையரான சிலி நாட்டைச் சேர்ந்த மிஷேல் (Michelle Bachelet Jeria), ‘இலங்கை அரசு, ஐநாவின் தீர்மானத்தைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், மனித உரிமை பேரவை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறது. எத்தனை வருஷம் தள்ளிவைத்தாலும் எந்த விசாரணையும் நடத்தப் போவதில்லை என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடு. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2009-ல் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதைப் பல இயக்கங்கள் நம்பவில்லை. ‘உயிரோடு இருக்கிறார்’ என்றுதான் சொல்லிவந்தார்கள். அது அவர்களின் நிலைப்பாடு. இறுதி யுத்தத்திலேயே அவர் கொல்லப்பட்டார் எனும் நிலைப்பாட்டை அப்போதே நான் எடுத்துவிட்டேன். அவரின் மரணத்தைக்கொண்டு, தமிழகத்தில் பெரும் எழுச்சியைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், அவருக்கு உரிய மரியாதையையும் செய்யாததோடு, அவரின் தியாகத்தை, இயக்கங்கள் ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. 2010-ல் மாவீரர் தினத்திற்கு சுவிட்சர்லாந்துக்குச் சென்றபோது, புலிகள் இயக்கத்தின் தளபதி குலம், “பிரபாகரன் படத்திற்கு விளக்கேற்றுகிறேன்” என்று சொன்னார். அதற்காக அவரை உள்ளேவிடாமல் கூட்டத்தை நடத்தி னார்கள். புலிகளுக்கு உலகமெங்கும் சொத்துகள் இருக்கின்றன. அதை வைத்திருப்பவர்களில் சிலர், ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால்தான், அந்தச் சொத்துகளை வைத்திருக்கலாம்’ என்பதற்காகவும் அப்படிச் சொல்கிறார்கள்.

கொளத்தூர் மணியை அமைப்பாள ராகக்கொண்டு ஈழத்தமிழர் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக, மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்துகிறோம். அதற்கு திருமாவளவன், வைகோ, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 2009-க்கு முன், ஈழ ஆதரவு என்பது, அங்கு நடக்கும் அழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத அனுதாபமாகவும், புலிகள் வெற்றி பெறுவதைவைத்து உருவாகும் ரசிக மனப்பான்மையாகவும் இருந்தன. அது ஒரு விடுதலைப் போராட்டம் என்ற புரிதலோடு, சர்வதேச முடிச்சுகளையும் புவிசார் அரசியலையும் உள்வாங்கிக் கொண்டு, அதில் தமிழகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற புரிதல் கொண்டோர் சிலரே. மே 2009 பேரழிவுக்குப் பின், தமிழ்நாட்டு இளைஞர்களில் ஈழ அரசியல் புரிதல் பரவி, தமிழ்த் தேசிய ஆற்றலும் வளர்ந்திருக்கிறது. ஆனால், அவற்றை உள்நாட்டு அரசியலுக்குப் பயன்படுத்தும் போது, ஒற்றுமையைக் கெடுக்கிறது. அதனால்தான், நாங்கள் இந்தத் தேர்தல் அரசியலைவிட்டு ஒதுங்கி நின்று பணியாற்றுகிறோம்.”

திருமுருகன் காந்தி (‘மே 17’ இயக்கம்)


“ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக இருந்ததால், அதை முறியடிப்பது மேற்குலக நாடுகளின் நோக்கமாக இருந்தது. மேலும், இலங்கை நிலப்பரப்பு இரண்டு தேசங்களாக மாறுவதை மேற்குலகம் விரும்பவில்லை. இலங்கை சந்தையாக அல்லாமல் ராணுவ கேந்திரமாகவே பார்க்கப்பட்டது.

ஈழ விடுதலை என்பது இந்தியாவின் தேசிய இனங்களின் விடுதலைக்கு ஊக்கமளிக்கும் என்பதுவும், ஈழத்திலிருந்த முற்போக்குத் தமிழ்த் தேசியம் சாதி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற முற்போக்கு அம்சங்கள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் மநுவாதக் கொள்கைக்கு எதிராக இருப்பதுவும் இந்தியாவின் கவனத்துக்கும் எச்சரிக்கைக்கும் உரிய விஷயமாக இருந்தது. இந்து தேசியத்தைக் கேள்வி கேட்கும் தத்துவார்த்த வலிமை தமிழ்த் தேசியத்துக்கு உண்டு. இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வடிவம், இந்திய ஆட்சிப் பரப்புக்குள் வந்துவிடக் கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்திய அரசின் நலன்களும் மேற்குலக நலன்களும் எதிரும் புதிருமாக இருந்தது எண்பதுகள் வரை. அதனால்தான், மேற்குலக நலனுக்கு எதிரான முடிவாக, போராளிக் குழுக்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 90-களில் அமெரிக்கக் கொள்கையோடும், 2000-களில் அமெரிக்காவின் ராணுவக் கொள்கையோடும் இணக்கம் ஏற்படுகிறது. பொருளாதார, ராணுவக் கொள்கைகள் ஒரே கோட்டில் நின்றபோதுதான் இந்த இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டது.

ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையைத் தடுக்கும் வலிமையான அமைப்புகள் அப்போது தமிழ்நாட்டில் இல்லை. அதேபோல, தமிழினப் படுகொலை வலியைப் பற்றி, ஒரு சில ஈழப்படைப்புகள் தவிர வேறெந்த தமிழ்ப் படைப்புகளிலும் பதிவுசெய்யப்படவில்லை. இந்திய அரசை நோக்கிக் கேள்வியெழுப்பாமல், காங்கிரஸ் கட்சியோடு மட்டுமே முடித்துவிட்டார்கள். காங்கிரஸுக்குப் பெரும்பங்கு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தியாவின் கொள்கை முடிவுகள் காங்கிரஸ் ஆண்டாலும் பா.ஜ.க ஆண்டாலும் ஒன்றாகவே இருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பாக மட்டுமே பார்க்கப்பட்டதால், 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஈழம் தொடர்பான வீரியமான போராட்டம் தளர்ந்தது. புவிசார்ந்த அரசியலை நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம். எங்களைவிட வலிமையான அமைப்புகளும் பேசியிருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளும் முன்னெடுக்காமல் போனது வருத்தமே!

இலங்கையைப் பாதுகாக்க அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து, புரட்சிகர அமைப்புகள் தீவிரமான உரையாடலையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. நாங்கள், பல புரட்சிகர அமைப்புகளிடம் பேசி, ‘ஒரு கூட்டமைப்பு உருவாக்கி, நீங்கள் முன்னெடுக்க வேண்டும்’ எனக் கேட்டோம். ஆனால், அவர்கள் அதில் உடன்படவோ, கூட்டமைப்பை உருவாக்கவோ விரும்பவில்லை. தீவிர இடதுசாரிகள், அரசியல் கட்சிகள், மாற்று அரசியலை முன்வைக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் எனத் தமிழகத்தின் எந்தத் தளத்திலும் ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் செயல்பாடு வரவில்லை.

2008-09, இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, தீவிரமாகப் போராட்டக்களம் கண்டவர்கள் பெரியாரியவாதிகள். குறிப்பாக, பெரியார் திராவிடர் கழகத்தினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள். முள்ளிவாய்க்கா லுக்குப் பின், பெரியாரியவாதிகளின் மொத்த உழைப்பையும் அத்தனை ஆண்டுக்கால பங்களிப்பையும் சுரண்டி, கொச்சைப் படுத்துவதைப் பார்க்க முடிந்தது. துரோகம் செய்த இந்திய தேசியத்தை நோக்கிக் கேள்வி எழுப்பாமல், இங்குள்ள பெரியாரியவாதிகளை நோக்கி திசைதிருப்பிக் கொச்சைப்படுத்தினார்கள். இதனால், உள்ளுக்குள் குழப்பத்தையும் பிரிவையும் தீவிரமாக உருவாக்கிவிட்டது. தி.மு.க-வை விமர்சிப்பது வேறு, ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களையும் விமர்சிப்பது வேறு என்ற வாதங்கள் புறந்தள்ளப்பட்டன. யாவும் திராவிட இயக்கம் மீதான வெறுப்பாகக் கட்டமைக்கப்பட்டது. ஈழ விடுதலைக்காகக் களமாடி, சித்ரவதைப்பட்ட திராவிட இயக்கத் தோழர்களின் பங்களிப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, அவர்களைத் துரோகிகளாகக் காட்டப்படும் நிலையை உருவாக்கினார்கள். அப்படியான சூழலை உருவாக்கியவர்கள், 2009 -ல் பெரியார் திராவிடர் கழகம் எடுத்த தீவிரமான போராட்டத்தின் அளவுக்குக்கூட முன்னெடுக்கவில்லை. இதனால், 2009 -ல் ஏற்பட்ட எழுச்சி, முன்னகராமல் இரண்டு மூன்றாகச் சிதறியது.”

கொளத்தூர் மணி  (திராவிடர் விடுதலைக் கழகம்)

“2012-ல் ஐ.நா-வில் அமெரிக்கா ஈழப் பிரச்னை தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவந்தது. தமிழகத்தில் சில அமைப்புகள் எதிர்த்தன. நாங்கள் இப்படியாவது ஈழம் ஒரு பேசுபொருளா கட்டும் என அதை ஆதரித்தோம். இனப்படுகொலைக்குப் பிறகுதான், தமிழகத்தில் தமிழ்த் தேசிய ஆதரவு அதிகரித்தது. ஆனாலும், நாம் அதை முழு வீச்சோடு மக்களிடம் கொண்டுசேர்த்ததாகச் சொல்ல முடியாது.

இந்தியா முழுக்க ஈழ ஆதரவுச் சக்திகளைத் திரட்டுவதில் இரண்டு முயற்சிகள் நடந்தன. ஒன்று, ‘சேவ் தமிழ்ஸ் அமைப்பு’, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கனா மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள செயல்பாட்டாளர்களை, எழுத்தாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது. அடுத்தது, பி.யு.சி.எல், இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்களைத் திரட்டி கூட்டம் நடத்தியது. மேற்கு வங்கத்தில் ஈழத்திற்காகப் பெரிய ஊர்வலமே நடத்தப்பட்டது. இவை போன்று சில தவிர, தமிழகத்தைத் தாண்டி இந்தப் பிரச்னையை நாம் கொண்டுசெல்ல வில்லை. போர் நடந்தபோது, இங்கு ஈழ ஆதரவை பெரும் எழுச்சியாகக் கொண்டுசென்றதைப்போல, போருக்குப் பின்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகத் திரட்டவில்லை.”