Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

முதல் உலகப்போர், உலகளாவிய வகையில் கடவுள் எனும் கருத்தாக்கத்தின் மீது பெரும் கேள்வியை, சந்தேகத்தை, மறுப்பை உண்டாக்கியது. உங்களை இப்போதும் கடவுள் நம்பிக்கையாளர் என்றே அறிகிறேன். முள்ளிவாய்க்கால் போன்ற பெருங்கொடுமைக்குப் பின்னும் ஒரு கடவுள் நம்பிக்கையாளராக தங்களால் எப்படித் தொடரமுடிகிறது? உங்களின் கடவுள் நம்பிக்கை, சமயம், ஆன்மிகம் குறித்து விளக்க முடியுமா? 

அகரமுதல்வன்


‘வான்முகில் வழாது பெய்க’ என்று பிரபஞ்சம் செழிக்க பதிகம் ஓதும் சைவ வழிபாட்டு முறையுடையவன் நான். இப்படியொரு மானுடப் பேரழிவிற்குள் உயிர் தப்பிய பின்னும் அந்தக் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த மறுப்பும் உருவாகவில்லை. அழிவும் ஆக்கமும் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் இயக்க விதியாக இருக்கிறது. அழிவில் தோன்றும் ஆக்கமும், ஆக்கத்தில் தோன்றும் அழிவும் இப்புவியில் நடைமுறை. அப்படியாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், எனக்குள் முன்னைய காலங்களைவிடவும் கூடுதலாகக் கடவுள் நம்பிக்கை ஒரு ஆக்கமாகத் துலங்குகிறது. நீங்கள் குறிப்பிடும் முதல் உலகப்போர் காலகட்டத்தில், உலகளாவிய வகையில் கடவுள் எனும் கருத்தாக்கம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது
போலவே நானும் கேள்விக்கு உட்படுத்து கிறேன். ஆனால், அது தரவல்ல ஆக்கச் சிந்தனையை வேறெதிலும் அடையமுடியாதுள்ளது. கடவுளர்களின் கண்டமென்று அழைக்கப்படும் ஆசியச் சிந்தனை மரபில் இருப்பதால்கூட எனக்கு இப்படித் தோன்றலாம். யுத்தத்தின் குரூர வெளியிலிருந்து உயிர் தப்பிய ஒருவனுக்கு இருக்கும் ஆன்மிகம் சார்ந்த கோட்பாடுகள் குறித்து உலகம் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும். அவன் ஒருவனாலேயே உலகத்திற்காகவும் உயிர்களுக்காகவும் அப்பழுக்கற்று சிந்திக்க இயலும். வாழ்வின் உண்மைகளைத் தேடும் கருத்தியல்களை அவனால் புத்தனைப்போல புதிதாகவும் பிரசவிக்க முடியும். என்னுடைய வாழ்வு ஒரேயொரு பரபிரம்மத்தை நம்புகிறது. கணபங்கவாதத்தையும் ஏற்கிறது.

கேள்வி பதில்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்களத்தில் வாழ்ந்த நாள்களில் எனது கைகளில் தேவாரப் பதிகங்கள் இருந்தன. என்னுடைய நண்பனின் தந்தையார் பைபிளோடு இருந்தார். என்னுடைய சித்தி, நெற்றியில் திருநீற்றோடு கையில் ஜெபமாலையை வைத்துக்கொண்டு ‘கடவுளே... கடவுளே...’ என்று ஜெபித்துக்கொண்டிருந்தாள். அவரவர்க்குச் சிந்தையில் தோன்றுகிற கடவுளரை, பேர் சொல்லிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும், எம்மைப் பேரழிவு விழுங்கியது. ஊழியின் தீக்கங்குகளில் எங்களுயிர், காய்ந்த விறகுகளாய் மிளாசி எரிந்தன. இத்தனை அழிவுகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து மிஞ்சியிருக்கும் தொல்குடியான ஈழத்தமிழர்கள், கடவுளை ஏன் நம்பவேண்டுமென்று கேட்பதில் இருக்கும் முற்போக்கு வாதம், அவர்கள் வேறு யாரைத்தான் நம்பமுடியும் என்றும் பதிலுரைக்க வேண்டும்.

நான் தத்துவங்கள் மீதும் உலகத்தின் நீதி மீதும் நம்பிக்கையற்ற ஒருவனாகிவிட்டேன். என்னளவில், உலகின் அரசியல் தத்துவங்களைவிடவும் கடவுள் எனும் கருத்து நிலை மோசமில்லை. மதுரையில் கோபமுற்ற கண்ணகி, நந்திக்கடலில் வந்திறங்கினாள் என்று சொல்கிறது ஈழத்தின் ஒரு கலைவடிவம். அவளைத்தான் ஈழத் தமிழர்கள் ‘வற்றாப்பளை கண்ணகி’யாக வழிபடுகிறோம். ஈழத்தமிழர்களின் கடவுள் எனும் கருத்தியல், அறம் சார்ந்த சக்தியொன்றின் மீதான நம்பிக்கையாகவே இருக்கிறது என்பதை இதன் வழியாகவும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறுதி யுத்தத்திற்குப் பிறகான ஈழ மக்களின் வாழ்க்கை குறித்து, புதிய படைப்புகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. பெரும்பாலும் அவை, ஆண் மைய எழுத்துகளாகவே அமைந்திருக்கின்றன. பெண் அணுகுமுறையில், மொழியில் இன்னும் சொல்லப்பட வேண்டிய, எழுதப்பட வேண்டிய விசயங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

தமிழ்நதி


“ஈழத்தில் ஏறத்தாழ 90,000 பெண்கள் போரில் கணவனை இழந்தவர்களாக இருக்கிறார்கள்; இன்னும் பல பெண்களது உறவுகள் சிறையிலடைக்கப்பட்டும் காணாமலடிக்கப்பட்டும் விட்டநிலையில், தனித்தோ பிள்ளைகளுடனோ வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வெறுமை, தனிமை, நிராதரவு, பாதுகாப்பின்மை, ஏழ்மையால் எதிர்கொள்ள நேரும் அவமானங்கள் மற்றும் கணவன், தந்தை, மகன், சகோதரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என அறியாது, ஒவ்வொரு நாளையும் காத்திருப்பில் கழிப்பது என அனைத்து உத்தரிப்புகளையும் சகித்துக்கொண்டு, பெண்கள் வாழ்ந்து தீர்த்தாக வேண்டியிருப்பது பற்றி எழுத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும்.

ஆண் தலைமைத்துவக் குடும்ப அமைப்புக்குப் பழக்கப்பட்ட சமூகத்தில், பெண் தலைமைத்துவம் எதிர்நோக்கும் சவால்களும் எழுதப்பட வேண்டியவையே. தவிர, ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் கடந்தாக வேண்டிய உளச்சிக்கல்கள் மற்றும் பொருள் தேட்டத்தில் தாய் தனித்து ஈடுபட வேண்டிய சூழலில், கூடுதல் பொறுப்பினைச் சுமக்கும் குழந்தைகள் தமது குழந்தைமையை முழுமையாக அனுபவிக்க முடியாது போவது ஆகிய விடயங்களும் பேசப்படல் வேண்டும்.

முன்னாள் பெண் போராளிகள் சமூகத்தால் எங்ஙனம் எதிர்கொள்ளப் படுகிறார்கள் என்பது பற்றி உரையாடல் தொடங்கியிருக்கிறது. எந்த மக்களுக்காக அவர்கள் போராடினார்களோ அந்த மக்களே முன்னாள் போராளிகளை ஐயத்தோடும் இழப்புகளால் விளைந்த கடும்போக்கோடும் அணுகும் துர்பாக்கியம் பற்றி இன்னுமின்னும் எழுதப்படவும் பேசப்படவும் வேண்டும். அவர்கள் மேன்மையோடும் பெருமிதத்தோடும் வலம்வந்த ‘வீரயுகம்’ அழிக்கப்பட்டுவிட, போரில் எஞ்சிய மனிதர்களிடையே வேதனை தாங்கி வாழவேண்டியிருப்பது பற்றியும், போராட்ட காலத்தில் விடுவித்துக் கொண்டிருந்த கலாசாரத் தளைகளில் தம்மை மீண்டும் பொருத்திக் கொள்ள வேண்டியிருப்பது பற்றியும் எழுதப்படல் வேண்டும். மேற்குறித்த அகச்சிக்கல்களை அவற்றுள் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலன்றி, அவ்வாழ்வுக்கு வெளியிலிருக்கும் ஒருவரால் அல்லது பெண்களின் உலகைத் தம்மால் துளியும் குறைவுபடாது சித்திரித்துவிட முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிற ஆண்களால் எழுத்தில் வெளிக்கொணர்வது கடினம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து இத்தனை ஆண்டுகளான பிறகும் அதைக் குறித்து இன்னமும் படைப்புகள் வந்தபடியுள்ளன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளே ஆகியுள்ளன. எமது காயங்கள் இன்னமும் ஆறவில்லை; வலிகளிலிருந்து இன்னமும் எமது நிலம் மீண்டெழவில்லை. ஆனாலும், ஒப்பீட்டளவில் ஈழத்தவரிடமிருந்து காத்திரமான படைப்புகள் வெளியாகி யுள்ளன. நீங்கள் கூறியதுபோல அவற்றுள் பெரும்பாலானவை ஆண்களது பார்வை யிலேயே எழுதப்பட்டுள்ளன. வெற்றிச்செல்வி போல, போருள் வாழ்ந்த பெண்கள் அந்தப் போதாமையை நிரவ முன்வர வேண்டும்.