Published:Updated:

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

பத்திநாதன்

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

பத்திநாதன்

Published:Updated:
ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள்.

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

அந்தக் காலகட்டத்தில், இவ்வளவு பெரிய கூட்டம் இலங்கையிலிருந்து இடம்பெயர வேண்டுமென்கிற அரசியல் தேவை இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இருந்தது, இந்திய அரசுக்கும் இருந்தது. கொல்லப்பட்டவர்களைவைத்து எப்படிப் போர் உரையாடல் நடக்குமோ, அதுபோல அகதிகளைவைத்தும் உரையாடல் நடத்த விரும்பினார்கள். ஆனால், சிங்கள அரசாங்கம் அகதிகளாக மக்கள் செல்வதை விரும்பவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அது சாதகமாக இருக்கவில்லை.

1990-ம் ஆண்டில் நான் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், கோழிப்பண்ணைகளில் என, கிடைக்கிற இடத்தில் தங்கவைக்கப் பட்டோம். நான் கோழிப்பண்ணையில்தான் தங்கவைக்கப்பட்டேன். தொண்டு நிறுவனங்களும் கிறிஸ்தவ அமைப்புகளும் அரசும் உதவிசெய்து எங்களுக்கு ஒரு தற்காலிக வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதுதான் இன்றுவரை தொடர்கிறது.

கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகள் என இம்மாதிரி பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது. அப்போது நான் மதுரையிலுள்ள அகதிகள் முகாமிலிருந்தேன். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் எந்த நேரத்திலும் வந்து முகாம்களிலுள்ள எங்களைத் தாக்கலாம் என்கிற நிலை இருந்தது. ஓலைக்கொட்டகைகளைத் தீவைத்துக் கொழுத்திவிடுவார்கள் என்ற பயமிருந்தது. அன்றிரவு யாருமே தூங்கவில்லை. உயிர் பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அப்போது எங்களுக்குப் போடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

அதற்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முற்றிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் கடுமையான மனநிலையிலிருந்தார். ‘ஃபிளெமிங்கோ ஆபரேஷன்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து, அகதிகளாக இல்லாமல் தனிப்பதிவில் இருந்த ஈழத்தமிழர்களை வளைத்துக்கட்டி சிறப்பு முகாம்களில் அடைத்தார்; கூடுதலான சிறப்பு முகாம்கள் உருவாக்கினார். கடலோரப் பகுதிகளிலிருந்த முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றினார்கள்.

1991 - 1995 காலகட்டத்தில், ஜெயலலிதா கிட்டத்தட்ட 54,000 அகதிகளைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கே திருப்பி அனுப்பினார். அதற்குப் பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். சில சலுகைகள் கொடுக்கப்பட்டாலும் இன்றுவரை அகதிகள் முகாம் கட்டுப்பாடுகள் அப்படியேதான் இருக்கின்றன. அதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்கிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருந்ததில்லை.

முகாம்களில் வசிக்கும்போது, குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள்ளே மட்டும் வாழ நிர்பந்திக்கும்போது ஏற்படுகிற மனநெருக்கடி துயர் மிகுந்தது. அனுமதி வாங்கிவிட்டுத்தான் இன்றுவரை பக்கத்து மாவட்டத்திற்குக்கூட செல்ல முடியும். வாங்கிச் சென்ற அனுமதியை அங்கே போய் பதிவுசெய்ய வேண்டும். ஓர் ஆத்திர அவசரத்திற்குச் சென்றால்கூட இது அத்தியாவசியமான நடைமுறை. நான் இருந்த முகாமில் காலையில் கையொப்பமிட்டு மாலை வந்து கையொப்பமிட வேண்டும். இப்படிப் பல கடுமையான விதிகள் இருந்தன. 2009-க்குப் பிறகு, அவை சற்று கண்டுகொள்ளப் படாமலிருக்கிறது. ஆனாலும், மாநில எல்லைகளில் இருக்கக்கூடிய முகாம்களில் இன்னும்  இந்த  விதிகள்  பின்பற்றப்படுகின்றன.

இன்னொன்று பொருளாதாரப் பின்னடைவு. ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குப் போக இயலாது. பெரும் நிறுவனங்கள், அகதி என்றால் வேலை தரத் தயங்குவார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும், முகாம் கட்டுப்பாடுகளால் தொடர்ந்து வேலை செய்யமுடியாது. அசையும் அசையா சொத்து எதுவும் வாங்க இயலாது. தமிழகத்தில் உள்ள அகதிகளின் பிள்ளைகளுக்கு மருத்துவம், விவசாயம் படிக்க இப்போதும் அனுமதி இல்லை.இதனால், கல்லூரி வரை படித்த அகதிகள்கூட இங்கே உடல் உழைப்பு சார்ந்த வேலைக்குப் போகிற கட்டாயம் எழுகிறது. இன்று அகதிகளின் தேசியத் தொழில் ‘பெயின்ட் அடிப்பது’ என்றாகிவிட்டது. 

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

மாதத்தில் முதல் ஞாயிறு, மூன்றாவது ஞாயிறு, உதவித்தொகை கொடுக்கும்போது என மாதத்திற்கு மூன்று முறை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்வார்கள். அப்போது குடும்பத்தில் உள்ள அத்தனை
பேரும் வந்தாக வேண்டும். இதனால், வெளியூரில் வேலைக்குச் சென்றவர்கள்கூட அவசரமாக முகாமிற்குத் திரும்புவார்கள். இந்த நடைமுறைகள் அகதிகளுக்கானது இல்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர் களுக்கானது. இதுதான் அகதிகளிடம் இன்று மிகுந்த மனஉளைச்சலை உருவாக்கும் விடயமாக இருக்கிறது.

உலகமயமாக்கலின் விளைவு, தமிழ்ச் சூழலை மாற்றியதுபோல் முகாமிற்குள்ளும் தாக்கம் செய்தது. குறிப்பாகக் கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்த மிக முக்கியமான விஷயம் என நான் குறிப்பிட விரும்புவது, தமிழக மக்களுக்கு அவர்கள் கொண்டுவந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் படிப்படியாகத் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களுக்கு உள்ளும் கொண்டுவந்தார்கள். அது அகதிகளின் வாழ்விலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அகதிகளின் உடல் உழைப்பும் அரசின் சமூகநலத் திட்டங்களும் இன்றைக்கு அகதிகளைச் சிரமமில்லாத வாழ்க்கையை நோக்கி நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்கான சுதந்திரமான ஜனநாயக வெளி அமையாதவரை அவர்கள் அரசின் உதவியை நம்பவேண்டியிருக்கிறது.

அகதிகள் இடப்பெயர்வில் முக்கியமானது ஆவணங்கள் பிரச்னை. ஆவணங்களின் அடிப்படையில்தான் ஓர் அரசு செயல்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மிக மோசமான ஒரு தருணத்தில்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் அகதிகளாக வெளியேறுகிறார்கள். ஆவணங்கள் தொலைந்துபோயிருக்கும், எரிந்து போயிருக்கும், கடலில் போயிருக்கும்... அந்தச் சூழலில் எப்படி ஆவணங்களைப் பத்திரமாக எடுத்துவர முடியும்? ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் அரசு அதிகாரிகள் மிகமோசமாக இன்று வரை அகதிகளை அலைக்கழிக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

போர்ச்சூழல் காரணமாக இடப்பெயர்வு ஆகும் மக்களின் தகவல்களை வாய்மொழி அடிப்படையில் பதிவுசெய்ய வேண்டும் என்பது மனிதாபிமான அடிப்படையில் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் அதிகாரிகளிடம் அந்த மனிதாபிமானம் இருக்கிறதாவென சந்தேகம் எழுகிறது. மோசமான அலட்சியத்தால் சில அதிகாரிகள், கடுமையான மனஉளைச்சலை உருவாக்கி விடுகிறார்கள்.

இன்றைக்கு முகாமில், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் வந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய வம்சாவளி ஈழத்தமிழர்களாக இருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை குறித்து ஆர்வம் காட்டாத, தெரியாத புதிய தலைமுறை முகாம்களுக்குள் உருவாகியிருக்கிறது. இந்தியக் குடியுரிமை வேண்டுமென்கிற குரல் அவர்களிடமிருந்து எழ ஆரம்பித்து விட்டது. மிகச் சொற்பமானவர்கள்தாம் இங்கிருந்து போக வேண்டுமென நினைக்கிறார்கள். ‘இங்குதான் அகதிகளுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றனவே. போரும் முடிந்துவிட்டதே, இலங்கைக்குத் திரும்ப வேண்டியதுதானே?’ இன்று பலர் கேட்கக்கூடிய கேள்வி இது.

இலங்கை அரசாங்கம் முறையான மீள்குடியேற்றத்தைத் திட்டமிட்டுச் செய்யவில்லை. இங்கு இருக்கிற உடைமைகளை விட்டுச்சென்று அங்கு போய் மீண்டும் அகதி வாழ்க்கை வாழ யார் விரும்புவார்கள். நிலமில்லாத, வீடில்லாத, ஏன்... முகவரிகூட இல்லாத மக்களும் இருக்கிறார்கள். போக முடியாதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இங்குள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் ஊருக்குப் போவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சார்ந்து இயங்கக்கூடியவர்கள் உடனடியாக அவற்றை விட்டுச் செல்லவும் முடியாது.

படிப்பைப் பாதியில் விட்டு அங்கே செல்ல இயலாது. இவர்களுக்கெல்லாம் இந்திய அரசு, குடியுரிமை வழங்க வேண்டும். ஆவணங்களைக் காட்டி பயமுறுத்தக் கூடாது என்று சொல்கிறேன். குறிப்பாக, இரண்டு நூற்றாண்டுக் காலமாக அலைக்கழிக்கப்படும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தப்படி வந்தவர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு குடியுரிமை கொடுக்க சட்டமிருக்கிறது; ஏற்கெனவே கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி வந்தவர்கள் ஏன் இத்தனை ஆண்டுக்காலம் அகதிகளாக முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்? இவர்களுக்கும் ஈழப்பிரச்னைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? மிகுந்த
மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை அரசுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அகதிகளிடையே அதிகமாக ஒலிக்கக்கூடிய குரல், ‘இந்தியக் குடியுரிமை வேண்டும்’ என்பதுதான். ஏனென்றால், 35 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களின் மனநிலையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்தியாவுக்கு தார்மிகமான ஒரு பொறுப்பும் இருக்கிறது. இந்திய அரசு இதைத் தட்டிக் கழித்துவிடவே முடியாது. வரலாற்றில் இப்படி இடம்பெயர்ந்தவர் எல்லோருமே தாயகம் திரும்பிவிடுவதில்லை. இப்படியே இந்த முகாம்களை வைத்திருப்பதும் நியாயமில்லை. விரைவாக அகதிகள் முகாம்களுக்கு முடிவுகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ராஜீவ்காந்தி மரணத்தைக் காட்டி இன்னும் எத்தனை வருடங்கள் கட்டுப்பாடாக வைத்திருக்கப் போகிறீர்கள். இலங்கையில் போர் முடிந்த 2009 ம் ஆண்டு வரை வைத்திருந்ததைக்கூட ஒருவகையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்னும் ஏன் இந்தக் கட்டுப்பாடு. ராஜீவ்காந்தி மரணமோ, மற்ற மற்ற சம்பவங்களோ இதில் எதிலுமே எந்த அகதியும் சம்பந்தப்படவில்லை. எந்தத் தீவிரவாதச் சம்பவங்களிலும் தொடர்பில்லாத சாமானியர்கள்தான் இங்கே அகதிகளாக இருந்துகொண்டிருக் கிறோம்.

‘அகதி’ என்பது சொல்லாடல் களுக்குத்தானே தவிர அப்படி நாங்கள் நடத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நடத்தும் சட்டத்தை அடிப்படையாக வைத்துதான் எங்களை இந்திய அரசாங்கம் நடத்துகிறது; அந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறது. அந்த அரசாணைதான் இப்போதுவரை மத்திய அரசிடம் இருக்கிறது. அதை மாற்றினால் மட்டும்தான் தமிழகத்திலுள்ள அகதிகளை செட்டில் செய்வதைப் பற்றி யோசிக்க முடியும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, வளர்ந்த நாடுகளில் எங்கேயும் போர் நிகழவில்லை. வளரும் நாடுகளில்தான் வளர்ந்த நாடுகள் போரைச் செய்து பார்க்கிறார்கள். அகதிகள் உருவாக்கமும் பெருக்கமும் வளரும் நாடுகளில்தான் நிகழ்கிறது. ஆக, வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரம் மற்றும் புற காரணிகளையும் கவனத்தில்கொண்டு அகதிகளுக்கான சட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே ஐ.நா-வால் உருவாக்கப்பட்ட அகதிகள் சட்டம், மேற்கத்திய நாடுகளால் மேற்கத்திய நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. அகதிகள் உருவாக்கத்தைத் தவிர்க்க வேண்டும், போர்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பது பேரவாவாக இருந்தாலும், தவிர்க்க முடியாமல் உருவாகும் அகதிகளுக்கும் நாடற்றவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பும் உத்தரவாதமான கௌரவமான வாழ்க்கையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மனிதச்செயல்.

எங்களால் இலங்கைக்கும் போக முடியவில்லை, இங்கேயும் சுதந்திரமாக வாழ முடியவில்லை, மற்ற நாடுகளுக்கும் போக இயலவில்லை. கதவில்லாத அறையில் அடைத்துவைத்த மனநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க முடியும். வெளியே போக இயலாது!

அகதியாக ஆக்கப்படுவதற்கு அகதி காரணமில்லை. அந்தச் சூழலை உருவாக்கியவர்கள், தொடர்ந்து நாங்கள் அகதியாக இருக்க வேண்டுமென விழைந்து அரசியல் செய்பவர்கள், இலங்கையிலிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள், இயக்கங்கள், இலங்கை, இந்திய அரசுகள், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு எனச் சொல்கின்ற கட்சிகள், இங்குள்ள சட்டங்கள் என எங்களைச் சுற்றி இருக்கும் அத்தனை பேர்மீதும் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. நாங்கள் அகதிகளாக உருவாக்கப்பட்டு அடைபட்டு வாழ்வதற்கு, இவர்கள் அத்தனை பேரையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

ஈழத்தில் பதற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்கி, எங்களை வெளியேற்றினார்கள். இத்தனை லட்சம் பேர் வெளியேற்றப் பட்டால் அதைவைத்து டிமாண்ட் செய்யலாம் என்கிற அரசியல் அப்போது இலங்கையில் செய்யப்பட்டது. அந்த அரசியலே இப்போது பயனில்லாமல் போய்விட்டது. அதன் விளைவாக இங்கே நாங்கள், காலையில் எழுந்து ஒரு டீ குடிக்க வேண்டுமென்றால்கூட ஆவணங்களை உடன் எடுத்துப்போக வேண்டியிருக்கிறது. வண்டியில் சுதந்திரமாகப் போக இயலவில்லை. திரையரங்கில் இரவுக் காட்சி பார்க்க முடியவில்லை. லைசன்ஸ் இல்லை என்பதால் வாகனம் ஓட்ட முடியவில்லை. இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்போல உங்களுக்குத் தெரியலாம். ஆனால், இந்தச் சின்னச் சின்ன விஷயங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் பிரச்னை மிகப்பெரியது.

விமர்சனத்துக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறை இன்று உலகம் முழுதும் இருக்கிறது. நாங்கள் குடியுரிமை சட்டத்தின்கீழ் வராததால், ஓட்டு போடுவது என்கிற ஜனநாயகப் பங்களிப்பு மறுக்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வாழ்கிற நாட்டில், எங்களை யார் ஆள வேண்டும், எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கத் தகுதி அற்றவர்களா? ஜனநாயகம் எல்லோருக்கும் பொதுவானதுதானே? நாங்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறோம். குடியுரிமை யற்றவர்கள் மற்றும் நீண்ட காலமாக இங்கேயே வாழும் பிறநாட்டவர்கள், நாடற்றவர்களும் வாக்களிக்கும் உரிமையை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உருவாக்க வேண்டும். ‘நோட்டா’ போல அது மொத்த உலகத்துக்கும் முன்மாதிரியாக இருக்கும். இது அவர்கள் பிரச்னைக்கான தீர்வையும் கொடுக்கும்.

சமூகச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இவர்களெல்லாம் சர்வதேச அளவில் இது குறித்துப் பேசவேண்டும். ஜனநாயகம் வலியவர்களுக்கானது மட்டுமல்ல, எங்களுக்கும்தான்!