Published:Updated:

`பாகிஸ்தான் எங்கு, எப்படி பதிலளிக்கும் எனத் தெரியாது; ஆனால்...' - ஓமர் அப்துல்லா எழுப்பும் கேள்வி!

`பாகிஸ்தான் எங்கு, எப்படி பதிலளிக்கும் எனத் தெரியாது; ஆனால்...' - ஓமர் அப்துல்லா எழுப்பும் கேள்வி!
`பாகிஸ்தான் எங்கு, எப்படி பதிலளிக்கும் எனத் தெரியாது; ஆனால்...' - ஓமர் அப்துல்லா எழுப்பும் கேள்வி!

பாகிஸ்தான் பதிலளிக்கும் வரையில் விமானப்படை தாக்குதலில் என்ன நடந்தது எனத் தெரியாது எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது 1000 கிலோ குண்டுகள் வீசப்பட்டன. இதில், பால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. 

இதை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ``இன்று இந்தியா தாக்கியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் ஆகும். இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த முகாமை வழிநடத்தியவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர், மவுலான யூசஃப் அசார்” என்றார். இந்தத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் தாக்குதல் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், ``கைபர் கணவாய் அருகே உள்ள பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இது இந்திய விமானப்படையின் ஊடுருவல் ஆகும். ஊடுருவி நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். அதேவேளையில் பூஞ்ச் செக்டார் அருகே உள்ள பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் உண்மையிலேயே இது மிகப்பெரிய தாக்குதல்தான். பாகிஸ்தான் பதிலளிக்கும் வரையில் விமானப்படை தாக்குதலில் என்ன நடந்தது என நமக்கு முழுமையாகத் தெரியாது. அவர்கள் பதிலளிக்கும் வரை அங்கு என்ன சேதங்கள், உயிரிழப்புகள் நடந்தது என எதுவும் தெரியாது. பாகிஸ்தான் பதிலளிப்பதை பற்றிச் சிந்திக்காது. பாகிஸ்தான் பதில் அளிக்கும். ஆனால் எந்தவகையில், எங்கு, எப்போது பதில் அளிக்கும் என்பது தெரியாது. அப்படி பாகிஸ்தான் அளிக்கும் பதிலுக்கு இந்தியா பதில் தெரிவிக்குமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.