Published:Updated:

`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை!’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை!’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை!’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பாகிஸ்தானுடனான பதற்றமான சூழலில் இந்திய இறையாண்மையைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கின்றன. 

Photo: ANI

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளங்கள் மீது இந்திய விமானப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தி, விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்தது.

இதுகுறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை, ராணுவ தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும், இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிர்ஷ்டவசமாக இழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், போர் ஆபத்தானது என்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தத் தயார் என்றும் அறிவித்தார். அதேபோல், இருநாடுகள் இடையிலான பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என்று குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

Photo Credit: ANI

இந்தநிலையில், இருநாடுகள் இடையிலான பதற்றமான சூழல் குறித்து விவாதிப்பதற்காகக் காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தி.மு.க சார்பில் திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 21 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். 

அந்தக் கூட்டத்தில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதோடு, வீரர்களின் தியாகத்தை அரசியல் லாபத்துக்காக ஆளும்கட்சி பயன்படுத்தி வருவது குறித்து கவலையும் தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காததையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன. 

Photo Credit: ANI

வெளியுறவுத்துறையின் விளக்கத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர்கள், பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அதேபோல், மாயமான விமானப்படை வீரரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மாயமான இந்திய விமானப்படை வீரரின் பாதுகாப்பு குறித்து 21 கட்சிகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.