தாமரை கோலமிட்டால் ரூ. 1000 கிடைக்கும்? -கும்பகோணத்தில் பரவிய தகவலால் பரபரப்பு | Fake News spread in kumbakonam regarding BJP's lotus symbol

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (28/02/2019)

கடைசி தொடர்பு:10:05 (28/02/2019)

தாமரை கோலமிட்டால் ரூ. 1000 கிடைக்கும்? -கும்பகோணத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

கும்பகோணத்தில், வீட்டு வாசலில்  பெண்கள் தாமரை கோலமிட்டு அகல் விளக்கை ஏற்றிவைத்தால், ரூ.1000 தரப்படும் என பி.ஜே.பி-யினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாமரை

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வர இருக்கிறது. அ.தி.மு.க, பி.ஜே.பி, பா.ம.க ஆகிய கட்சிகள்  கூட்டணி அமைத்துள்ள நிலையில், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்காக பேசிவருகிறார்கள். இந்த நிலையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி  போட்டியிடப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியும் வருகிறது. இதையடுத்து, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், வீட்டு வாசலில் தாமரை சின்னத்தை கோலமாக வரைந்து, அதன் நடுவில்  நாங்கள் தரும் விளக்குகளை ஏற்றி வைத்தால்,    ரூ 1.000 தரப்படும் என்று கூறியதாகவும், அதன்படி ஆணைக்காரன்பாளையம் பகுதியில், பல பெண்கள் தங்கள் வீடுகளில் தாமரை சின்னத்தை கோலமிட்டதாகவும் கூறப்படுகிறது. 

கோலம்

மேலும், பி.ஜே.பி-யினர் கொடுத்த அகல் விளக்கையும் ஏற்றினார். இதைப் பார்த்த மற்றவர்கள், 'எந்தத் திருநாளும் இல்லை, ஏன் வாசலில் அகல்விளக்கை ஏற்றுயுள்ளீர்கள்' எனக் கேட்டுள்ளனர். அதற்கு, கோலம் போட்ட பெண்கள் விவரத்தைக் கூறியுள்ளனர். ஆனால், சொன்னது போல் யாருக்கும் பணம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கும்பகோணம்

இதுகுறித்துப் பேசிய சில பெண்கள், வாசலில் தாமரை கோலம் வரைந்து, அதில் அகல்விளக்கு ஒன்றை ஏற்றிவைக்கச் சொன்னார்கள். அதன்படி செய்தால், பணம் தருவதாகவும் கூறினார்கள். தேர்தல் வர இருப்பதால், அதற்கு முன்னதாகவே இதுபோன்று செய்யச் சொல்லி பணம் கொடுக்கிறார்கள் என நாங்களும் செய்தோம். ஆனால், ஒரு பைசாகூட யாரும் தரவில்லை என்றனர்.

இதுகுறித்து பி.ஜே.பி-யின் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் தலைவர் ராஜாவிடம் பேசினோம், ``பி.ஜே.பி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் தாமரை சின்னத்தை பிரபலபடுத்தும் வகையில் வாசலில் கோலமிட்டு அகல் விளக்கை ஏற்றச் சொன்னோம். இதுபோன்று தமிழகம் முழுவதும் செய்துவருகிறோம். பைக் பேரணி உள்ளிட்டவையும் நடத்திவருகிறோம். இதன்மூலம் மக்கள் மனதில் தாமரை நன்கு பதியும், வாக்கும் கிடைக்கும் என்பதற்கே இந்த ஏற்பாடு. ஆனால், பணம் தருகிறோம் செய்யுங்கள் எனச் சொல்வதுபோல் அனைவரையும்  செய்யச் சொல்லவில்லை. எங்க கட்சியைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் இதை செய்ய வலியுறுத்தினோம்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close