Election bannerElection banner
Published:Updated:

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்
‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

நாளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் 66-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வரும் பிறந்தநாளுக்கு செய்யவேண்டியவை குறித்து தன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எப்போதும் என் பிறந்தநாள் கலைஞரின் வாழ்த்துகளுடன்தான் தொடங்கும். கோபாலபுரம் இல்லத்தில், தந்தையின் முன் தனயனாக, தலைவரின் முன் பணிவு நிறைந்த தொண்டனாக நின்றிடுவேன். அன்னை தயாளு அம்மையார் அருகில் இருக்க, என் வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளும் சூழ்ந்திருக்க, உறவுகள், உடன்பிறப்புகள்  குழுமியிருக்க, கலைஞர்  எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை உச்சிமுகர்ந்து முத்தமிட்டு, உவகை பொங்க வழங்குவார். அந்த  அன்பும் அரவணைப்பும்  கலந்த வாழ்த்து தரும் தெம்பு என்பது, அடுத்து வரும் மார்ச் 1-ம் தேதி வரை நீடிக்கும். மக்கள் பணியிலும்  கட்சிப் பணியிலும், உள்ளத்தில் எந்த நேரத்திலும் எதற்காகவும் சோர்வு வராமல் தடுத்து, ஓய்வின்றி உழைத்திடுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் அளித்திடும் உன்னத  கலைஞரின் வாழ்த்துகள் அமைந்திடும். 

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

80 ஆண்டுகளைக் கடந்த கலைஞரின் பொதுவாழ்வில், அவர் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை, பார்க்காத துரோகங்கள் இல்லை, பழிதூற்றல்களுக்கும் பஞ்சமில்லை. அதனையெல்லாம் கடந்து, தன் அயராத உழைப்பால், அரசியல் வியூகங்களால், மாற்றாரும் வியந்து போற்றுகின்ற  அளவுக்கு தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமின்றி, இந்தியாவின் இணையிலாத்  தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரிடம் பெறுகின்ற வாழ்த்து என்பது, அவரது  ஆற்றலின் ஒருசிறு துளியைப் பெறுவதைப் போன்ற உணர்வைத் தரும்.  இயற்கையின் சதியால் இப்போது கலைஞர்  நம்மிடையே இல்லை. அவரிடம் நேரில் சென்று வாழ்த்துப் பெறுகின்ற வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. 

என் பிறந்தநாளில், கலைஞர் எனும் உதயசூரியனின் ஒளிர்முகம் காணமுடியாத நிலையில் இருக்கிறேன். அப்பா என்று வாய்நிரம்ப  அழைக்க முடியாத மகனாக இந்த ஆண்டு எனக்கு அமைந்துவிட்டது. அதனால், தி.மு.க தொண்டர்கள், பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதைத் தவிர்த்திடுங்கள். பேனர்கள் வைக்காதீர்கள். ஆடம்பர விழாக்கள் அவசியமில்லை. மாணவர்களின் பொதுத்தேர்வு நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள்  கட்டாயம் வேண்டாம். அதற்குப் பதிலாக, அமைதியான-ஆர்ப்பாட்டமில்லாத வகையில் இயன்றவரை எளிய மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை அளித்திடுங்கள். ஏற்கெனவே, மாலைகள்-சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக அளிக்க வலியுறுத்தியிருந்தேன். எனவே, மாணவர்களுக்கும் பள்ளி நூலகங்களுக்கும் நல்ல புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள். 

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையை இருள் கவ்வும் வகையில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துகிடக்கிறது. மாநிலமோ கடன் சுமையில் தள்ளாடுகிறது. தொழில்வாய்ப்புகள் துவண்டுவிட்டன.முதலீடுகள் சுருங்கிவிட்டன.வேளாண்மை-சிறுதொழில்கள்-தொழிற்சாலைகள் அனைத்தையும் பா.ஜ.க-வும் அ.தி.மு.க -வும் தங்கள் ஆட்சியில் சீரழித்துவிட்டன. இளைஞர்கள்,மாணவர்கள்,பெண்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்காலமும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.  மக்களை மறந்த இத்தகைய மோசமான ஆட்சியாளர்களை இந்தியாவும் தமிழ்நாடும் இதுவரை சந்தித்தது இல்லை. 
    
பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவின் மொழி,பண்பாடு,உணவுப் பழக்கம் உள்ளிட்ட அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. தன்னிச்சையான அரசு நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக்கப்படுகின்றன. உள்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத ஆட்சியாளர்கள், அர்ப்பணிப்பு மிக்க ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களை அரசியலாக்கி, தேர்தல் களத்தில் லாபம் பெற முடியுமா என சூழ்ச்சிக்கணக்கு போடுகிறார்கள். எத்தனை தகிடுதத்தங்கள் செய்தாலும், ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் தீர்ப்பளிக்கப்போகும் பொதுமக்கள், இந்த ஆட்சியாளர்களை இனி எந்நாளும் நம்பப்போவதில்லை. 

‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' - தொண்டர்களுக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் மெசேஜ்

தமிழ்நாடு மிகத் தெளிவான முடிவெடுக்கும் தருணம் எப்போது வரும் என்று காத்திருக்கிறது. அது தரப்போகும் தேர்தல் தீர்ப்புதான் இமயம் வரை  எதிரொலிக்கப்போகிறது. 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிட, தொண்டர்கள் அயராது உழைத்திட வேண்டும். ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களைத் தகர்த்தெறிந்து, மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியை உறுதிசெய்திடும் வகையில் செயலாற்ற வேண்டும். 
    
'எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' என்பார்கள். அதுபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் தயவில் காலம் தள்ளுகிற மாநில ஆட்சியாளர்களும் அவர்களாகவே வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும், 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் மாநில ஆட்சியும் மாற்றம் காணும். மக்கள் விரும்புகிற அந்த மாற்றத்தை உருவாக்கித் தரவேண்டிய பெரும் பொறுப்பு நம் கைகளில் இருக்கிறது.  ஓயாத உழைப்பும் தளராத உறுதியும்கொண்ட அந்தக் கரங்களால் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்துத் தாருங்கள். அதுவே உங்களில் ஒருவனான எனக்கு நீங்கள் தருகிற ஒப்பற்ற - விலைமதிப்பில்லா பிறந்தநாள் பரிசாக அமையும். நீங்கள் தரப்போகும் அந்தப் பரிசை, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் காலடியில் காணிக்கையாக்கிடுவேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு