Published:Updated:

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி

சென்னை: காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும். இலங்கையில் சிங்கள பௌத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்?  இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா?

இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம்.

##~~##
தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி.
 
நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி உள்ளார்.