Published:Updated:

`நாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்' - குமரியில் மோடி பேச்சு!

`நாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்' - குமரியில் மோடி பேச்சு!
`நாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்' - குமரியில் மோடி பேச்சு!

இந்தியாவின் 130 கோடி மக்கள்தான் என் குடும்பம். நான் அவர்களுக்காக வாழ்வேன், அவர்களுக்காக வீழ்வேன். நான் எந்தக் குடும்பத்துக்காகவும் அரசியல் செய்யவில்லை எனப் பிரதமர் மோடி பேசினார்.

கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது வணக்கம் எனத் தமிழில் கூறியபடி மோடி பேசுகையில், ``நான் இன்று கன்னியாகுமரிக்கு வந்திருப்பதில் பெருமை அடைகிறேன். முதலில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் புகழ் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறேன். அவர் தமிழகத்துக்கு செய்துள்ள திட்டங்கள் தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும். நமது பாதுகாப்புத்துறையில் முதல் பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர். விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் அமைதிக்கான காந்திய விருது பெற்ற கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

விவேகானந்தா கேந்திராவின் சமூக சேவை பாராட்டுக்குரியது. சில சமயத்துக்கு முன்பாக ரயில்வே, நெடுஞ்சாலை போன்ற திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். மிக அதிவேகமான தேஜஸ் ரயிலை மதுரையில் இருந்து சென்னைக்கு தொடக்கி வைத்திருக்கிறேன். மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரயிலாகும். ராமேஷ்வரம் தனுஷ்கோடியில் 1964-ல் ஏற்பட்ட புயலில் ரயில் தண்டவாளம் அழிக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தாமதமானாலும் பரவாயில்லை, இப்போது விரைவில் பாம்பன் ரயில் பாலத்தை பார்க்க இருக்கிறீர்கள். 

உலக அளவில் இந்தியா வேகமாக வளர்ந்துவரும் நாடு. வருங்கால தலைமுறைக்கான உள் கட்டமைப்புகளை துரிதமாக ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கான மிகப்பெரிய காப்பீடுத் திட்டமான ஆயுஸ்மான் பாரத் எனத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம். 21-ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டில் விவசாயிகள் கவுரவ நல நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு முதற்கட்டமாகப் பணம் செலுத்தப்பட்டுவிட்டது. இந்தத்திட்டத்தை அறிவித்து 24 நாளில் 24 மணிநேரமும் உழைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். எப்படி லீப் ஆண்டு 4 வருடத்துக்கு ஒருமுறை வருகிறதோ, உலக கால்பந்து நான்காண்டுக்கு ஒருமுறை வருவதுபோன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆண்டுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றிய சிந்தனை வரும். 

காங்கிரஸின் விவசாயக்கடன் சில விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடையும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கவுரவ நிதித்திட்டம் அனைத்து விவசாயிககுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி விவசாயிகளுக்குக் கிடைக்கும். அரிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைப் பற்றிக்கொண்டு அரியச் செயல் செய்ய வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையில் ஆட்சிக்கு வந்தோம். துணிச்சலாக, கடுமையாக உழைக்கக்கூடிய அரசை மக்கள் தேர்வு செய்தார்கள். மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். குடும்ப அரசியலையும், கொள்கை முடக்கங்களையும், தடைகளையும், வாக்குவங்கி அரசியலையும் மக்கள் விரும்பவில்லை. இங்குள்ள மீனவர்கள் உழைத்து முன்னுக்குவர விரும்புகிறார்கள். 

மீனவர்களுக்காக இந்த அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய அரசு மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. விவசாயக் கடன் அட்டைத் திட்டம் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்காக ஒதுக்கியிருக்கிறோம். மீனவர்கள் கடலில் இருந்து விண்வெளி தகவல்களைப் பெறுகிறார்கள். உள்ளூர் மொழியிலும் தகவல் பெறுகிறார்கள். தட்பவெப்ப காலநிலையையும் அந்த கருவிகள் மீனவர்களுக்கு அளிக்கிறது. மீன்பிடி கட்டமைப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய அரசு மீனவர்களின் வாழ்க்கை நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது. 2014 முதல் 1900 மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவித்துள்ளது இந்த அரசு. தே.ஜ.கூட்டணி அரசு கடல்சார் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது. துறைமுகங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாகர்மால திட்டம் மூலம் புதிய திட்டங்கள் வரும் தலைமுறையை கருத்தில்கொண்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

முன்னாள் பாதுகாப்புப்படை அதிகாரிகளின் ஆக்கபூர்வமான கருத்தின் அடிப்படையில் ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை அமல்படுத்தினோம். நம் நாடு பயங்கரவாதம் என்ற பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. நாம் இப்போது முன்புபோல் இல்லை. 2004 முதல் 2014 வரை பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், மக்கள் எதிர்பார்த்ததை அப்போதைய அரசு செய்யவில்லை. அக்டோபர் 26-ல் மும்பை குண்டுவெடிப்பு நடந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. உரியில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோதும் நமது ராணுவம் துணிச்சலான நடவடிக்கை எடுத்தது. ராணுவத்தின் விழிப்புதான் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ராணுவத்தினருக்கு நான் தலை வணங்குகிறேன். ஒருகாலத்தில் தாக்குதல் நடந்தபோது நமது விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த விரும்பியது. அதை அன்றைய அரசு மறுத்துவிட்டது. 

இப்போது நீங்கள் என்ன செய்தி படிக்கிறீர்கள். ராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பி கொடுக்கப்படும். கடந்த சில நாள்களாக நடந்துவரும் நிகழ்வுகள் மூலம் நமது ராணுவத்தின் பலம் தெரிந்துள்ளது. சாதாரண மக்களிடமும் அசாதாரணமான ஆதரவு ராணுவத்துக்குக் கிடைத்துள்ளது. அது நம் நாட்டு மக்களை ஒருங்கிணைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாகச் சிலர் மோடி எதிர்ப்பை நாட்டின் எதிர்ப்பாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை உலகமே பாராட்டுகிறது. ஆனால், வெறுப்பின் காரணமாக சில நம் நாட்டின் ராணுவ செயல்பாட்டை சந்தேகிக்கிறார்கள். இதுமாதிரியானவர்களின் இந்த அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. அவர்களது அறிக்கையைப் பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும், பாகிஸ்தானின் ரேடியோவிலும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறார்கள். நீங்கள் நம் ராணுவத்தை ஆதரிக்கிறீர்களா, சந்தேகிக்கிறீர்களா. 

நமது மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை ஆதரிக்கிறீர்களா. மோடி வரலாம் போகலாம், இந்த நாடு எப்போதும் இருக்கும். உங்கள் அரசியலைப் பலப்படுத்த இந்த நாட்டைப் பலவீனப்படுத்திவிடாதீர்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் பலமாகிக்கொள்ளலாம். ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தைப் பற்றிப் பேசுவோம். நான் ஒரு ரூபாய் அனுப்பினால் 15 பைசா மக்களைப் போய்ச் சேருகிறது என்றார் முன்னாள் பிரதமர் ஒருவர். அவர்களுக்கு வேண்டுமானால் ஊழல் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருக்கலாம். ஆனால், நான் அதை அனுமதிக்கமாட்டேன். தே.ஜ.கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுத்துள்ளது. போலி கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற ரீ கவுண்டிங் அமைச்சர், அவரது கட்சித் தலைமையின் குடும்பத்தைப் போலவே தனது குடும்பத்துக்கும் பெயிலுக்காக நீதிமன்றத்தில் நிற்கிறார். 

நேர்மையாக வரி செலுத்துபவர்களையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம். 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளோம். இதற்கு முன்பு சாதாரண மக்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் அரசு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆதாயமான பொருளாதார திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. காங்கிரஸில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜி மட்டும்தான் சாதாரண மக்களுக்கு ஆதரவான பொருளாதாரத்தை குறித்துச் சிந்தித்தார். இன்று அதை எங்கள் அரசு செய்துவருகிறது. தொழில் செய்ய சிறந்த நாடுகளில் நம் நாடு 77-வது இடத்துக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 142வது இடத்தில் இருந்து 65 இடங்கள் முன்னேறி இப்போது 77-வது இடத்துக்கு வந்துள்ளோம். நம் நாட்டில் 59 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிவிட முடியும். இங்கிருந்து சென்னை செல்வதற்குள் கடன் பெற்றுவிடலாம். இளைஞர்களின் திறமையை அறிந்து முத்ரா வங்கித் திட்டத்தில் கடன் வழங்கியுள்ளோம். இதுவரை 15 கோடி மக்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். 

எதிர்க்கட்சியினருக்குச் சமூக நீதியில் எந்த நிலைப்பாடும் கிடையாது. அம்பேத்கரை இரண்டுமுறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ். அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது, பாராளுமன்றத்தில் படம் திறந்தது ஆகியவற்றை எங்கள் ஆட்சி செய்துள்ளது. இப்போது செயல்படும் அரசு எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு மிகக் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் இரண்டு பிரதான பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் நம்முடைய பலம் மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டவர்கள். மறுபுறம் பலவீனம் மற்றும் தாக்குதலுக்குள்ளாவது, குறிக்கோள் இல்லாதவர் உள்ளனர். அவர்கள் ஊழல் செய்வதில் வெட்கப்படமாட்டார்கள். 2009-ல் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையை அவர்கள் பகிர்ந்துகொண்டது எப்படி என உங்களுக்குத் தெரியும். பொதுவாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாதவர் தொலைபேசியின் மூலம் இலாகாவைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்தியாவின் 130 கோடி மக்கள்தான் என் குடும்பம். நான் அவர்களுக்காகவே வாழ்வேன், அவர்களுக்காகவே வீழ்வேன். நான் பொது வாழ்வில் இருப்பது எந்தக் குடும்ப அரசியலையும் முன்னுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்காக உங்கள் ஆதரவையும், ஆசியையும் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த கூட்டத்துக்கு வந்து ஆதரவளித்தமைக்கு நன்றி" என்றார்.