Published:Updated:

மோடிக்கு வைகோ கறுப்புக்கொடி எதிர்ப்பு - பா.ஜ.க கல் வீச்சால் நிலவிய பதற்றம்!

மோடிக்கு வைகோ கறுப்புக்கொடி எதிர்ப்பு -  பா.ஜ.க கல் வீச்சால் நிலவிய பதற்றம்!
மோடிக்கு வைகோ கறுப்புக்கொடி எதிர்ப்பு - பா.ஜ.க கல் வீச்சால் நிலவிய பதற்றம்!

குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து வைகோ போராட்டம் நடத்தியபோது பா.ஜ-வினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

தமிழகத்துக்கு சுமார் 4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு நிகழ்ச்சி மற்றும் அரசியல் நிகழ்வு என இரு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட விவகாரம் ஆகியவற்றின் காரணமாக மோடி பங்கேற்க இருந்த அரசியல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கஜா புயலால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூடத் தெரிவிக்காத பிரதமர் மோடி, தமிழகத்தில் எந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் கறுப்புக்கொடி காட்டுவோம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவித்ததுடன், தொடர்ந்து அதன்படி கறுப்புக்கொடி காட்டிவருகிறார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்தார்.

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைகோ கறுப்புக்கொடி காட்டுவதற்கு குமரி மாவட்ட பா.ஜ-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், வாட்ஸ்அப், முகநூல் மூலமாக வைகோவின் செயலுக்கு எதிர்வினையாற்ற வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். அதனால் பதற்றமான சூழல் நிலவியது. இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர், வைகோவை மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

வேனில் இருந்தபடியே பேசிய வைகோ, தமிழகத்துக்கு மோடி செய்துள்ள பாதகமான செயல்களைப் பட்டியலிட்டார். முல்லைப் பெரியாறு விவகாரம், கர்நாடகாவில் மேக்கே தாட்டூ அணை கட்ட அனுமதி போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்ததாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதாகவும் புகார் கூறினார். 

அதைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியே கறுப்பு பலூன்களைப் பறக்க விட்டார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 10 பாரதிய ஜனதா தொண்டர்கள், வைகோவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியே கல்வீச்சில் ஈடுபட்டனர். அதனால் ம.தி.முக-வினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது ம.தி.மு.க-வினர் தாக்கியதில் நாகர்கோவில் நகர இந்து முன்னணி செயலாளரான வெங்கடேஷ், தோவாளையைச் சேர்ந்த பா.ஜ நிர்வாகியான சங்கர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. இருவரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்த பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சொந்த ஊருக்குச் சென்றார்கள். 

இந்தச் சமயத்தில், பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நெல்லையில் இருந்து மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தயா சங்கர் தலைமையில் சென்ற நிர்வாகிகள் காவல்கிணறு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றார்கள். இந்தச் சம்பவங்களால் அந்தப் பகுதியில் சிறிது நேரத்துக்குப் பதற்றமான சூழல் நிலவியது. காவல்துறை தென் மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லைச் சரக டி.ஐ.ஜி கபில்குமார் சாரட்கர், நெல்லை எஸ்.பி அருண்சக்திகுமார், சிவகங்கை எஸ்.பி-யான ஜெயச்சந்திரன், தேனி எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.