``தே.மு.தி.க போனால் போகட்டும்’’ - ஸ்டாலினின் பிளான் B | What is Stalin's plan B after DMDK's departure?

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (01/03/2019)

கடைசி தொடர்பு:19:58 (01/03/2019)

``தே.மு.தி.க போனால் போகட்டும்’’ - ஸ்டாலினின் பிளான் B

``தே.மு.தி.க போனால் போகட்டும். அவர்கள் வாக்கை வேறுவழியில் நாம் சரி செய்துகொள்ளலாம்!’’

``தே.மு.தி.க போனால் போகட்டும்’’ - ஸ்டாலினின் பிளான் B

'தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும்’ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனால், தே.மு.தி.க. தங்கள் அணிக்கு வராமல் செல்வதைப் பற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அலட்டிக்கொள்ளவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும், பி.ஜே.பி-க்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளன. இந்தக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் இணையும் என்று ஆரம்பத்தில் உறுதியாக நம்பப்பட்டது. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்தை மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது `கடந்த தேர்தலில் எங்களுக்கு அதிக அளவில் சீட் கொடுத்தீர்கள். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக எங்களுக்கே அதிக சீட் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தத் தகவலை அ.தி.மு.க தரப்பிடம் தெரிவித்தார் பியூஷ் கோயல். ஆனால், '5 சீட் வரை மட்டுமே அதிகபட்சமாக தரமுடியும்’ என்று அ.தி.மு.க தரப்பு சொல்லியது. 

தே மு தி க தலைவர் விஜயகாந்துடன் பியூஷ் கோயல்

இந்த நிலையில் விஜயகாந்த்தை, அவரின் வீட்டில் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், “தி.மு.க கூட்டணிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். தி.மு.க தரப்பில் ஸ்டாலின் மருமகன் சபரீசனும் தே.மு.தி.க தரப்பில் சுதீஷும் திரைமறைவில் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை முதலில் தி.மு.க-வுக்குச் சாதகமாகவே சென்றது. 4 சீட் என்று தி.மு.க தரப்பில் எண்ணிக்கை கொடுக்கப்பட்டது. தே.மு.தி.க தரப்பில் 5 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 4 சீட்டோடு ஜூலை மாதம் காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டில் ஒன்றையும் வழங்குவது குறித்து தி.மு.க தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்து தே.மு.தி.க தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையால் தி.மு.க. தரப்பு முழுமையாக அப்செட்டாகிவிட்டது. குறிப்பாக, `தே.மு.தி.க போட்டியிடும் இடங்களில் முழுசெலவையும் தி.மு.க ஏற்றுக்கொள்ள வேண்டும்; கேப்டன் டி.வி-யை நடத்துவதில் இப்போது பெரும் சிக்கல் உள்ளது. எனவே, அதற்கு நிதி உதவியை தி.மு.க தரப்பிலிருந்து செய்ய வேண்டும்’ என்று தே.மு.தி.க எதிர்பார்த்தது. இதனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டமுடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் பி.ஜே.பி தரப்பு, எப்படியும் தங்கள் அணிக்குள் தே.மு.தி.க-வை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது.

தி.மு.க தரப்பிடம் தே.மு.தி.க வைத்த கோரிக்கைகள், பி.ஜே.பி தரப்புக்கு எட்டின. அவர்கள் அ.தி.மு.க-விடம் 'மீண்டும் தே.மு.தி.க-விடம் பேச்சுவார்த்தையை வேகப்படுத்துங்கள்’ என்று சொல்லியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பிலிருந்து 2 தினங்களுக்கு முன் சுதீஷிடம் முக்கியப் பிரமுகர் ஒருவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சவார்த்தையின்போது, `ராஜ்யசபா சீட் குறித்து இப்போது எந்த உறுதியும் கொடுக்க முடியாது. 5 சீட் உறுதியாகத் தருகிறோம். நீங்கள் கேட்ட கரன்சி உதவியைத் தாராளமாகவே தருகிறோம்’ என்று சொல்லியதும் தே.மு.தி.க மதில் மேல் பூனையாக இருந்து வந்தது. அதோடு. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் உங்களுக்கு உண்டு என்று சொல்லியதையும் தே.மு.தி.க சீரியஸாக எடுத்துக்கொண்டது.

மு.க. ஸ்டாலின் - ராகுல் காந்தி

அதேநேரம், தி.மு.க தரப்பிலிருந்து தொடர்ந்து பேசியதற்கு, 6 சீட் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள் தே.மு.தி.க-வினர். இந்தத் தகவல் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டதும், `6 சீட்டில் நாமே நின்று அவர்களுக்குச் செலவு செய்யும் பணத்தை தி.மு.க-வுக்காகச் செலவு செய்து வெற்றிபெறலாம். ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு 2 சீட்கள்வரை வழங்கலாம். வடமாவட்டங்களில் வி.சி.க மூலமும், கொங்குமண்டலத்தில் கொங்கு ஈஸ்வரன் மூலமும் தே.மு.தி.க-வின் வாக்குவங்கியை நாம் உடைத்தெறியலாம்’ என்று புதிய ப்ளானை ஸ்டாலின் சொல்லியுள்ளார். மேலும், பா.ம.க-வுக்குச் செக் வைக்கும் விதமாக வேல்முருகனை தி.மு.க அணிக்குள் கொண்டுவந்து அவரை வைத்து, பிரசாரத்தைப் பலப்படுத்தலாம் என்று ப்ளான் B-யை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். தே.மு.தி.க போனால் போகட்டும், அவர்கள் வாக்கை வேறுவழியில் நாம் சரி செய்துகொள்ளலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அவர்.

மேலும் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம், ``சனிக்கிழமை அன்று கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து சீட் எண்ணிக்கையை அறிவித்துவிடலாம். அ.தி.மு.க அணிக்கு முன்பாக, நாம் கூட்டணி வியூகத்தை வேகப்படுத்திவிடுவோம்” என்று சொல்லியுள்ளார் ஸ்டாலின். தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணிக்குள் இணையும் முன்பே தி.மு.க தனது கூட்டணியை முழுமைப்படுத்தி சீட் எண்ணிக்கையை  அறிவித்துவிடும் என்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close