Published:Updated:

`முகிலன் எங்காவது ஒளிந்திருந்தால் என்ன செய்ய முடியும்?’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

`முகிலன் எங்காவது ஒளிந்திருந்தால் என்ன செய்ய முடியும்?’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
`முகிலன் எங்காவது ஒளிந்திருந்தால் என்ன செய்ய முடியும்?’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

`முகிலனை தேடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அவர் எங்காவது ஒளிந்திருந்தால் என்ன செய்ய முடியும்?’ என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா பூமி பூஜை கிருஷ்ணன்கோயில் அருகே இன்று நடைபெற்றது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அ.தி.மு.கவுக்கு நிகரான வாக்கு வங்கி தமிழ்நாட்டில் யாருக்கும் கிடையாது. ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க, இரட்டை இலையை முடக்க தொடர்ந்து செயல்படும் தினகரன் யோக்கியமானவரா?. எடப்பாடியும், ஓபிஎஸ்-ஸும்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள்; அவரது தளபதிகள். `நானும் ரவுடிதான்’ என சினிமாவில் வடிவேலுபோல கூறிக் கொண்டிருக்கிறார் தினகரன். ஆனால், அரசியலில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் என்பது அ.தி.மு.க, தி.மு.க அணிக்குத்தான். இது மகாபாரத யுத்தம். நாங்கள் பாண்டவர் அணி; தி.மு.க கௌரவர் அணி. கிருஷ்ண பரமாத்வாவின் பரிபூரண ஆசி எங்களுக்கு உண்டு. பாண்டவர் அணிதான் வெற்றி பெறும்.

தி.மு.க தனித்து நிற்கத் தயார் என்றால், அ.தி.மு.கவும் தனித்து நிற்கத் தயார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் தனித்துதான் போட்டியிட வேண்டுமென்றால் அ.தி.மு.கதான் காலம் முழுவதும் ஆளும். தி.மு.கவையும், தி.மு.க தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்த வைகோவுடன் அந்தக் கட்சி கூட்டணி வைத்துள்ளது. ஆனால், ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் அரசியல்ரீதியாக எங்களை விமர்சனம் செய்துள்ளனரே தவிர தரம்தாழ்த்தி விமர்சனம் செய்யவில்லை.

அம்மா என்ற ஆளுமை இப்போது இல்லை. நாங்கள் பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். பா.ம.க, ராமதாஸ் பின்னால் உள்ளது. எங்கள் கூட்டணி முழுவதும் வெற்றியை நோக்கியே உள்ளது. டெல்லியில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவை இரண்டாம் இடத்துக்குக் கொண்டு வருவோம். மத்தியில் மோடி தமிழகத்தில் எடப்பாடி ஆள வேண்டும் என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க ஜல்லிக்கட்டு காளை; தி.மு.க. சவலைக்காளை. தேர்தல் களத்தில் முட்டி மோதும். யாரும் நெருங்க முடியாது.

இங்கே ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் இரண்டு நாள்களில் காவல்துறையினர் கண்டுபிடித்துவிடும். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு போலீஸ்’’ என தெரிவித்தார்.

அப்போது `முகிலன் காணாமல்போய் 10 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, ``முகிலன் எங்காவது ஒளிந்திருக்கலாம். அவரைக் கண்டுபிடிக்கும் பணியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. நல்லகண்ணு தலைமையில் நடக்கும் போராட்டத்தை புரிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். நீதிமன்றத்தில் அவர் ஒப்படைக்கப்படுவார்’’ எனத் தெரிவித்தார்.