Published:Updated:

`ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து வாக்கு வாங்க மோடி முயற்சி செய்கிறார்!’ - சஞ்சய் தத் கடும் தாக்கு

`ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து வாக்கு வாங்க மோடி முயற்சி செய்கிறார்!’ - சஞ்சய் தத் கடும் தாக்கு
`ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து வாக்கு வாங்க மோடி முயற்சி செய்கிறார்!’ - சஞ்சய் தத் கடும் தாக்கு

``நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த மறைந்த ராணுவ வீரர்களின் உயிரை வைத்து வாக்கு வாங்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். கஜா புயல் பாதிப்பின்போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் நேரம் என்றவுடன் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து அரசியல் செய்கிறார்’’ என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் விமர்சித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இதில் பேசிய சஞ்சய் தத், ``பாரதிய ஜனதா கட்சியின் இந்த ஆட்சி பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்காக மட்டுமே நடக்கிறதே தவிர,  ஏழை மக்களுக்காக அல்ல. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க அரசையும், தமிழக அ.தி.மு.க அரசையும் குற்றம்சாட்டி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தேர்தல் கூட்டணி வைத்திருப்பது நியாயமல்ல.  ஊழல் செய்வதற்காகவே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பல்வேறு பொய்களைக் கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான தமிழக அரசு, மத்திய பா.ஜ.கவால் ஆட்டுவிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்குத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் பிரதமர் மோடி குஜராத் மாநில வளர்ச்சிக்குக் கொண்டு சென்று விட்டார். நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த மறைந்த ராணுவ வீரர்களின் உயிரை வைத்து வாக்கு வாங்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்.

கஜா புயல் பாதிப்பின்போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் நேரம் என்றவுடன் மதுரை, கன்னியாகுமரி என அடிக்கடி தமிழகத்துக்கு வந்து அரசியல் செய்கிறார். அவருக்கு தற்போதுதான் தமிழகம் கண்ணுக்குத் தெரிகிறதா. காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி பாரம்பர்யக் கூட்டணி. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க நாம் அனைவரும் வீதிவீதியாக சென்று களப்பணியாற்ற வேண்டும்’’ என்றார்.