Published:Updated:

`மோடி இன்ஸ்பிரேஷன்; கையில் பல திட்டங்கள்' - அரசியல் களத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!

`மோடி இன்ஸ்பிரேஷன்; கையில் பல திட்டங்கள்' - அரசியல் களத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!
`மோடி இன்ஸ்பிரேஷன்; கையில் பல திட்டங்கள்' - அரசியல் களத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவாபா பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். குஜராத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், குஜராத் விவசாயத்துறை அமைச்சர் ஃபால்டு முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். முன்னதாக கட்சியில் சேர வந்த அவருக்கு பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் இவரது காரில் மோதிய போலீஸ் கான்ஸ்டபிளை அடித்ததால் பரபரப்பாக பேசப்பட்டார் ரிவாபா. அதன்பிறகு கடந்த அக்டோபர் மாதம் கர்ணி சேனா என்ற அமைப்பில் இணைந்திருந்தார். இந்த அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவர் தலைவராக இருக்கும்போதுதான் தீபிகா படுகோனின் பத்மாவத் படத்துக்கு எதிராக இந்த அமைப்பு போராட்டம் நடத்திப் பிரபலமானது. 

இந்த நிலையில்தான் அதிலிருந்து விலகி தற்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய ரிவாபா, ``பிரதமர் மோடியே எனக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் பா.ஜ.க-வில் இணைகிறேன். தனியாக என்னால் எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது. அதேநேரம் பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளதன் மூலம் சிறந்த மக்கள் சேவையை அளிக்க முடியும் என நம்புகிறேன். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான். அவர்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளவும், ஆண்கள் இல்லாத நிலையில், தங்களை உயர்த்திக்கொள்ளக்கூடிய அளவுக்கு அதிகாரம் பெற்றுத் தர வேண்டும். இதுவே எனது முதன்மையான குறிக்கோளாக இருக்கும். ஏனென்றால் இது மாதிரியான விஷயங்களை என் வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சமூகத்துக்கு என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன். நமது நாட்டுக்குத் தேவையான நல்ல பல திட்டங்கள் என்னிடம் உள்ளது. தற்போது என் கவனம் முழுவதும் மக்கள் பணியிலேயே இருக்கும்.

என் கணவரை இந்தியாவின் பெருமையாகப் பார்க்கிறேன். அவர் இளைஞர்களின் அடையாளமாக இருப்பதன் மூலம் இளைஞர்களிடம் என்னை அதிகம் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். இருப்பினும் பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளதால் எனக்கென்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்க இயலும். இதன்மூலம் பல பெண்களுக்கு உதாரணமாகத் திகழ முடியும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கலாம். ஆனால், இப்போது சேர்ந்ததை ஒரு குறுகிய எண்ணத்துடன் பார்க்கக் கூடாது. என்னுடைய தற்போது எண்ணம், கட்சிக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்பதே. இதைத் தவிர இந்த மேடையில் பேசுவதற்கு இல்லை" எனக் கூறியுள்ளார்.