`அ.தி.மு.க-வினர் பைகளை நிரப்ப அரசு கருவூலப் பணமா?’ - கேள்வி எழுப்பும் ஆர்.எஸ்.பாரதி | R.S.Bharathi Slams ADMK Government Scheme

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (04/03/2019)

கடைசி தொடர்பு:17:55 (04/03/2019)

`அ.தி.மு.க-வினர் பைகளை நிரப்ப அரசு கருவூலப் பணமா?’ - கேள்வி எழுப்பும் ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்குச் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இவை தேர்தல் நோக்கில் அறிவிக்கப்படும் சலுகைகள் எனப் பொதுமக்களுக்கு தெரியும். இந்நிலையில்தான் ``தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த 2000 ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்”என தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைச் செயலாளருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கும் புகார் மனுவை அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதில், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆதாயத்திற்காகச் செய்யப்படுகிறது. அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்கு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில்தான், அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான வைகைச் செல்வன் பொதுக்கூட்டம் ஒன்றில் 28.2.2019 அன்று பேசியபோது, மாநில அரசால் வழங்கப்படும், தமிழக முதலமைச்சரால் தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதி உதவியான ரூ.2000 உட்பட ரூ.3,000 சுமார் 3 கோடி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 கோடி பேர் தங்களுடைய வாக்குகளை அ.தி.மு.கவுக்கு ஆதரவாக அளிப்பார்கள். எனவே தங்கள் கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பகிரங்கமாகப் பேசியுள்ளார். 

வைகைச்செல்வன்

எங்கள் கட்சி வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கு எதிரானது அல்ல. ஆனால், அந்தத் தொகை இப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று கவலை கொண்டுள்ளது. அத்தொகை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஆதரவாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2000 ரூபாய் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தூண்டுவதற்காகத்தான் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இது விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, இத்திட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்குப் பயன்படப் போவதில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேற்கண்ட அரசுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்தத் தொகை, மாநிலத்தின் கருவூல நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

எல்லா மாவட்டங்களிலும் அதற்கான படிவங்கள் எல்லாம் ஆளும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தத் தொகை ரூ.2,000 வழங்கப்படுவதற்கான நபர்களின் பெயர்கள் அவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று நாங்கள் அறிய வந்துள்ளோம். அரசு தன்னுடைய நிதியை அ.தி.மு.க. கட்சியின் நலனுக்காக, வாக்குகளை வாங்குவதற்காகவும், அ.தி.மு.க. தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்திட்டத்தில் உள்ள சட்ட விரோதச் செயல்களைப் பரிசோதித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


[X] Close

[X] Close