Published:Updated:

`மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள்; உங்களையல்ல!’ - மோடியைச் சீண்டும் சித்தார்த்

`மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள்; உங்களையல்ல!’ - மோடியைச் சீண்டும் சித்தார்த்
`மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள்; உங்களையல்ல!’ - மோடியைச் சீண்டும் சித்தார்த்

''நமது பாதுகாப்புப் படையையே மக்கள் நம்புகிறார்கள்; உங்களைத்தான் நம்பவில்லை' என பிரதமர் மோடிக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்திருக்கிறார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுவருகிறது. அதேநேரம், இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில், இந்திய விமானப்படையின் மிக் 21 பைசான் ரக விமானம் தாக்கப்பட்டது. அந்த விமானத்தை இயக்கிய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன. எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆளும் கட்சியினர் பேசிவருகின்றனர். குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

``ரஃபேல் விமானங்கள் நம்மிடம் இருந்திருந்தால், தாக்குதல் சம்பவத்தின்போது நமது விமானங்கள் ஒன்றைக்கூட நாம் இழந்திருக்க மாட்டோம். அதேநேரம், எதிர்நாட்டு விமானங்கள் ஒன்றைக்கூட மிச்சம்வைக்காமல் வீழ்த்தியிருக்கலாம் என்று நான் கூறினேன். ஆனால், அதை சித்திரித்து, தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பிவருகின்றன. நமது பாதுகாப்புப் படைகள்மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இயற்கை. இருப்பினும், சிலர் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள்குறித்து கேள்வி எழுப்பிவருவது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை’’ என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். 

மோடிக்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், ``நமது மக்கள் பாதுகாப்புப் படையினர்மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களைத்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் இல்லை. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.