`ஒரு தொகுதி கொடுத்தால் 2 தொகுதிகளில் ஆபத்து!' - பாரிவேந்தர் வருகையால் உதறும் உடன்பிறப்புகள் | DMK cadres shocked over one seat allocated for IJK party

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:13 (16/03/2019)

`ஒரு தொகுதி கொடுத்தால் 2 தொகுதிகளில் ஆபத்து!' - பாரிவேந்தர் வருகையால் உதறும் உடன்பிறப்புகள்

இந்தத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் சேலம் மாவட்டத்துக்குள் வருகின்றன. சேலம் மாவட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவ்வளவு எளிதாக கள்ளக்குறிச்சியை வென்றுவிட முடியாது. களத்தில் கடுமையான போட்டி நிலவும்.

`ஒரு தொகுதி கொடுத்தால் 2 தொகுதிகளில் ஆபத்து!' - பாரிவேந்தர் வருகையால் உதறும் உடன்பிறப்புகள்

க்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது தி.மு.க. இதற்கான ஒப்பந்தம் இன்று கையொப்பமாகிவிட்டது. "கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் பாரிவேந்தர். ஒரு தொகுதியில் அவர்கள் போட்டியிட்டால், 2 தொகுதிகளில் தோற்கப் போகிறோம் என அர்த்தம்" என விளக்கம் கொடுக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

பாரிவேந்தர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்குள் கூட்டணி ப்ளஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன அரசியல் கட்சிகள். இன்று தி.மு.க கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் வி.சி.க, சி.பி.ஐ, ம.தி.மு.க, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் கையொப்பமிட்டுவிட்டன. ஐ.ஜே.கே தலைவரும் பாரிவேந்தரின் மகனுமான ரவி பச்சமுத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கள்ளக்குறிச்சி தொகுதியை விருப்ப தொகுதியாகக் கேட்டுள்ளதாகவும் ஐ.ஜே.கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `உதய சூரியன் சின்னத்தில் எந்த இடத்திலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம்' எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் ரவி பச்சமுத்து. 

பாரிவேந்தர்

ஐ.ஜே.கே போட்டியிடுவது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க அழைப்புக்காகக் காத்திருந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை பாரிவேந்தருக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பை தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் ரசிக்கவில்லை. `பணம் இருக்கிறது என்பதற்காக எங்களையெல்லாம் புறம்தள்ளிவிட்டு அவருக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கலாமா?' என்ற ஆதங்கக் குரல்களும் எழுந்தன. பா.ம.க-வோடு மோதல் நீடிப்பதால்தான், அ.தி.மு.க அணிக்குள் ஐ.ஜே.கே செல்லவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஐ.ஜே.கே நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாரிவேந்தர்

கள்ளக்குறிச்சி தொகுதி முழுக்க வன்னியர்கள் நிறைந்துள்ளனர். அங்கு பாரிவேந்தர் போட்டியிடுவதன் மூலம் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் சேலம் மாவட்டத்துக்குள் வருகின்றன. சேலம் மாவட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவ்வளவு எளிதாக கள்ளக்குறிச்சியை வென்றுவிட முடியாது. களத்தில் கடுமையான போட்டி நிலவும். இது பாரிவேந்தருக்கு மைனஸாகத்தான் முடியும். 

பாரிவேந்தர்

அ.தி.மு.க அணியின் சார்பாக வன்னிய சமூகத்தினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிலைமை இன்னும் சிக்கல்தான். உடையார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வன்னிய மக்கள் ஓட்டுப் போடுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. உள்ளூர் தி.மு.க-வினரும் இந்தத் தொகுதியை ஐ.ஜே.கே-வுக்கு விட்டுத் தர விரும்பவில்லை. `அவருக்கு ஒரு தொகுதியைக் கொடுப்பதன் மூலம் 2 தொகுதிகளில் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்பு பாதிக்கும்' எனத் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். இன்று நடந்த தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் அவர் வரவில்லை. இதுகுறித்துக் கேட்டபோது, `அவருக்கு உடல்நலமில்லை' எனப் பதில் கொடுத்தனர். இந்த நிலை நீடித்தால் அவரால் எப்படி முழுவேகத்தில் பிரசாரம் செய்ய இயலும். தவிர, பெரம்பலூரிலும் போட்டி வலுவாக உள்ளது. இங்கு அ.தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தி.மு.க சார்பில் நட்சத்திர வேட்பாளரைப் போட்டாலும் களநிலவரம் கடுமையாக இருக்கும். இதையெல்லாம் கணக்குப் போட்டு தலைமை நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்" என்றார் உறுதியாக. 


[X] Close

[X] Close