Published:Updated:

`விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி உறுதி!' - தொகுதி அறிவிக்கும் முன்பே பேசிய சஞ்சய்தத்

`விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி உறுதி!' - தொகுதி அறிவிக்கும் முன்பே பேசிய சஞ்சய்தத்
`விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி உறுதி!' - தொகுதி அறிவிக்கும் முன்பே பேசிய சஞ்சய்தத்

'விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்' எனத் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ``பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என 5 ஆண்டுகளில் பா.ஜ.க-வும் நரேந்திரமோடியும் மக்களை வஞ்சித்துள்ளனர். அவர்களின் திட்டம் அனைத்தும் மக்கள் விரோத திட்டங்கள். அனைத்து தரப்பு மக்களும் அதிக ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர். நலத்திட்டங்கள் இன்றி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பா.ஜ.க எம்.எல்.ஏ., எம்.பி-க்களாலேயே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். `விலைவாசி குறைக்கப்படும், சமையல் எரிவாயு விலையைக் குறைப்போம்’ என வாக்குறுதி அளித்தனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.

இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டுசென்றுள்ளது. நடைபெற உள்ள தேர்தல் என்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையோ, இந்தியாவின் எதிர்காலத்தையோ நிர்ணயிக்கும் தேர்தல் அல்ல. ஒவ்வொருவரின் எதிர்காலத்தை, குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் நல்லவர்கள். மோடி கொடுத்த போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டனர். 2009-ம் ஆண்டு, விருதுநகர் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர் மாணிக்தாகூர். எதிர்கால சிந்தனை, தொலைநோக்குப்பார்வை கொண்டவர் அவர். இந்தத் தேர்தலிலும் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெறும்.

ராணுவ வீரர் பிரச்னையை வைத்து மற்ற பிரச்னைகளை மறைக்கப் பார்க்கிறார் மோடி. இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. ஆனால், பா.ஜ.க அந்தத் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறது. புல்வாமா ராணுவ வீரர்களின் மரணத்தால் பா.ஜ.க-வுக்கு சாதக அலை வீசும் என எடியூரப்பா கூறுகிறார். இந்த மரணத்தை அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க பயன்படுத்துகிறது. தாக்குதல் நடைபெறும் என உளவுத்துறை முன்பே தகவல் தெரிவித்திருந்தபோதும்கூட, அதனைத் தடுக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்தபோது, மோடி அரசியல் கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். ராணுவ வீரர்களின் மரணத்திற்காக, மோடி தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

புல்வாமா தாக்குதலின்போது, மோடி அதைப்பற்றி கவலைப்படாமல் பூங்காவில் சுற்றிக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். இது மோசமான செயல். தமிழக வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் பிணைக்கைதியாக இருந்தபோது, பா.ஜ.க கூட்டத்தில் மோடி பரப்புரையாற்றிக்கொண்டிருந்தார். மோடி, தன் விளையாட்டை காங்கிரஸிடம் காட்ட வேண்டாம். ராணுவம் என்பது நாட்டுக்குச் சொந்தம். பா.ஜ.க-வுக்கு சொந்தமல்ல. ராணுவ வீரர்களின் தியாகத்தைக்கொண்டு பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது’’ எனத் தெரிவித்தார்.