பண்ருட்டி அருகே கோஷ்டி பூசலில் அ.தி.மு.க அலுவலகம் சூறை! - நிர்வாகி மீது தாக்குதல் | ADMK office ransacked neat panruti

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:05 (04/03/2019)

பண்ருட்டி அருகே கோஷ்டி பூசலில் அ.தி.மு.க அலுவலகம் சூறை! - நிர்வாகி மீது தாக்குதல்

பண்ருட்டியில் அ.தி.மு.க-வினரிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலில் அக்கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. கைகலப்பு ஏற்பட்டதில் நிர்வாகி ஒருவர் காயமடைந்தார். 

அலுவலகம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி புதுப்பேட்டை உறையூர் கிராமத்தில், அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை ஒட்டி, பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தொழில் துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி சம்பத் தனியாகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி-யுமான அருண்மொழித்தேவன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம்  ஆகியோர் ஒரு அணியாகவும் செயல்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக அமைச்சர் சம்பத் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்  எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் யாரும் கலந்துகொள்வது இல்லை. தொடர்ந்து புறக்கணித்துவருகின்றனர். அது அரசு நிகழ்ச்சியாக  இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் இன்று, பண்ருட்டி உறையூர் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன் கலந்துகொண்டுள்ளார். அப்போது அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவாளர்கள் அவரிடம் கட்சி நிகழ்ச்சிக்கு எங்களுக்கு அழைப்பு  தரவில்லை, நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு  அழைப்பு கொடுத்தால் நீங்கள் வருவதில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். பின்னர் சமாதானம் அடைந்து அனைவரும் கலைந்துசென்றுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த ராமசாமி

அதன்பின்பு, பண்ருட்டி செல்லும் வழியில் உள்ள தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க அலுவலகத்தில், எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அலுவலகத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த கட்சி நிர்வாகிகளையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், தொகுதியின் முன்னாள் செயலாளர் ராமசாமி என்பவர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அமைச்சர் சம்பத் ஆதரவாளர் ராமசாமி பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள்மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதேபோல் ராஜா என்பவரும் அமைச்சர் ஆதரவாளர்கள்மீது புகார் கொடுத்துள்ளார். அ.தி.மு.க
கோஷ்டி பூசலில், அ.தி.மு.க அலுவலகம் மற்றும் நிர்வாகிகள்மீது நடந்த தாக்குதல் சம்பவம், பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close