Published:Updated:

ட்வென்டி 20 - நிறைவுபெற்றது தி.மு.க-வின் தொகுதிப் பங்கீடு

ட்வென்டி 20 - நிறைவுபெற்றது தி.மு.க-வின்  தொகுதிப் பங்கீடு
ட்வென்டி 20 - நிறைவுபெற்றது தி.மு.க-வின் தொகுதிப் பங்கீடு

தி.மு.க கூட்டணியில், ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணி இறுதி வடிவம் எட்டியுள்ளது. தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதேபோல, கொங்கு ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்களும், ஐ.ஜே.கே கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறிது நேரத்துக்கு முன்பு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க-வுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீட்டுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு நிறைவு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் தி.மு.க 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 7 -ம் தேதியில் இருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்குவது என துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும். 

மனித நேய மக்கள் கட்சிக்கு, இந்த முறை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பில்லை" என்றவரிடம், கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ``எங்கள் யோசனையை, வேண்டுகோளை கூட்டணி கட்சிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம். இதில் அவர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அதன்பிறகு, இது குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.