Published:Updated:

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

மக்களவையில் பெண் குரல்சுகிதா சாரங்கராஜ்

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

மக்களவையில் பெண் குரல்சுகிதா சாரங்கராஜ்

Published:Updated:
மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

2019 மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றமின்றி மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக 78 பெண்கள் இந்த முறை மக்களவைக்குள் செல்கின்றனர். கடந்த 2014 தேர்தலில் 64 பேர் பெண் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 

மக்களவையில் ஒலிக்கவிருக்கும் தமிழகப் பெண்களின் குரல்கள்

தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மக்களவைக்குள் மீண்டும் நுழைகிறது. அதில் மூன்று பேர் பெண்கள். கனிமொழி, தமிழச்சி தங்கப் பாண்டியன், ஜோதிமணி ஆகிய இந்த மூன்று பெண்களுமே எழுத்தாளர்கள். முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று பேருமே பொறுப்போடு சமூகநீதி தளத்தில் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொள்கிறவர்கள்.

இரண்டு முறை மக்கள் பிரதிநிதிகள் மூலம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட கனிமொழி, முதன்முறையாக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்குள் நுழைகிறார். மாநிலங்களவையில் தனது உரையின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தைப் பலமுறை ஈர்த்த கனிமொழியின் குரல், இனி மக்களவையிலும் ஓங்கி ஒலிக்கப்போகிறது.  மாநிலங்களவையில் ஆற்றிய பணிக்காகச் `சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என்கிற அங்கீகாரத்தைப் பெற்றதும் மக்களவையில் கனிமொழிக்குக் கைகொடுக்கும்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது  தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலகம் முதல் உள்கட்டமைப்புப் பணிகள் வரை பலவற்றைச் செய்திருக்கிறார் கனிமொழி. தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தைத் தத்தெடுத்து பணியாற்றியிருக்கிறார். முத்து நகரமான தூத்துக்குடி மக்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் கனிமொழிக்கு அளித்திருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல... நமது நம்பிக்கையையும் காப்பாற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

கனிமொழியை எதிர்த்து களம்கண்ட மற்றொரு பெண் வேட்பாளரும் சாதாரண மானவர் இல்லை. மத்தியில் ஆண்ட, மீண்டும் ஆளும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்தான் அவர்.

தி.மு.க-வின் தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஆங்கில இலக்கியப் பேராசிரியரான சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியனின் இலக்கிய ஆளுமையும் சேர்ந்து டெல்லியில் வீறுகொண்டு ஒலிக்கப்போகிறது. கரிசல் மண்ணிலிருந்து (விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றிலிருந்து) முதல் பெண் எம்.பி-யாக டெல்லி நோக்கிப் பயணிக்கிறது தமிழச்சி தங்கப்பாண்டியனின் கால்கள்.

காந்தியக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட தோடு, அதன்படியே எளிமையான வாழ்வை வரித்துக்கொண்டு தீவிர காங்கிரஸ் தொண்டராக வலம்வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே எப்போதும் நிற்பவர் ஜோதிமணி. இவரின் அரசியல் வாழ்வில் ஏற்றப்பட்டிருக்கும் ஒளி,  சமூகநீதிக்காக  கரூரில் ஏற்றி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட ஒளியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் கட்சியின் நடவடிக்கைகள் கொள்கை முரணை அடைந்தபோதும் நெறிபிறழாமல் உறுதிப்பாட்டோடு எதிர்த்து நின்றவர் ஜோதிமணி. இப்போது மக்களவையில் அதே நேர்கொண்ட பார்வைகொண்ட ஜோதிமணியை எதிர்பார்ப்பது இயல்பானதே.

ஜோதிமணியின் வெற்றி என்பது, ஆறு முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த முறை மக்களவை துணை சபாநாயகராக டெல்லியில் அதிகாரத்தோடு வலம்வந்த தம்பிதுரைக்கு எதிரான வெற்றி. ஆக, அரசியலில் படிப்படியாக மேலெழுந்த ஜோதிமணியின் வெற்றியின் சுவை சற்று கூடுதலாகவே  இருக்கும்.

724 பெண் வேட்பாளர்கள்

2019 மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களையும் பா.ஜ.க 53 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது. நான்கு திருநங்கைகள் உட்பட 222 பெண் வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு திருநங்கை வேட்பாளரை நிறுத்தியது.

33 சதவிகித இட ஒதுக்கீட்டை கட்சியில் கொண்டுவந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஆறு பெண்கள் எம்.பிக்களாக ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். திரிணாமூல் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 11 பெண் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சோனியா காந்தி. அவர் எப்போதும் போட்டியிடும் ரேபரேலியில் வெற்றிபெற்றார். அமேதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு ராகுலை வீழ்த்திய பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வெற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்கது. நேருவின் குடும்பத் தொகுதிகள் என்று உத்தரப்பிரதேசத்தில் அழைக்கப்படும் அமேதி, ரேபரேலியில் காங்கிரஸுக்கு எதிராக முலாயம் சிங்கும் மாயாவதியும் வேட்பாளரையே நிறுத்தவில்லை. அப்படியான ராகுலைத் தோற்கடிப்பது என்பது மிகப் பெரும் சவால்தான். கடந்த தேர்தலில் ராகுலிடம் தோற்ற ஸ்மிருதி இரானி நியமன உறுப்பினர் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். விட்ட இடத்தைப் பிடிக்கும் வகையில் திட்டமிட்டு வேலைபார்த்து, அமேதியின் காங்கிரஸ் கோட்டையை உடைக்க ஸ்மிருதி அமைத்த அடித்தளம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

அமேதியில் வாக்குப்பதிவுக்குச்  சில நாட்களுக்கு முன்னர் வயலில் தீப்பற்றி எரிந்தபோது கிராம மக்களோடு மக்களாக  நின்று தண்ணீர் குழாயில் தண்ணீர் அடித்து  தீயை அணைக்க உதவிய ஸ்மிருதி இரானியின் வீடியோ காட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் உலா வந்தன. இப்படி அமேதியில் தன்னுடைய இருப்பை உணர்த்திக்கொண்டே இருந்த ஸ்மிருதி, ராகுலைத் தோற்கடித்ததில் வியப்பேதுமில்லை. ஸ்மிருதியின் வெற்றி, புதிய வரலாற்றை அமேதியில் உருவாக்கியிருப்பதோடு நேரு குடும்பத்தின் பெருமைகளையும், ராகுலின் அரசியல் ஆளுமையையும் சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது. 

ஸ்மிருதியைப் போன்று கர்நாடகாவில் முன்னாள் பிரதமர், இன்னாள் முதல்வரின் மகனைத் தோற்கடித்திருக்கிறார் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா. குடும்ப அரசியல் ஓங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் இப்போதைய கர்நாடக முதல்வருமான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை மாண்டியா தொகுதியில் சுமலதா தோற்கடித்துள்ளார் .

ஆந்திராவில் நான்கு பெண் எம்.பிக்கள், கர்நாடகா, ஜார்கண்ட், பஞ்சாப்பில் தலா இரண்டு எம்.பிக்கள், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் தலா மூன்று, பீகார், மத்தியப்பிரதேசத்தில் தலா நான்கு, குஜராத், மகாராஷ்டிராவில் தலா ஐந்து, அஸ்ஸாம், கேரளம், தெலங்கானா, ஹரியானா, மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தலா ஒரு பெண் எம்.பி என மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டெல்லி உட்பட யூனியன் பிரதேசங்களில்  ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்ட 13 பெண் வேட்பாளர்களில் இரண்டு பெண்கள் மட்டுமே மக்களவைக்குச் செல்கின்றனர். `செவன் சிஸ்டர்ஸ்' என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு பெண் வேட்பாளர்கூட வெற்றி பெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

சாத்வியும் சங்கடங்களும்

மத்தியப்பிரதேசத்தின் போபால் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவராகக் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற இவரை வேட்பாளராக அறிவித்தபோதே கண்டனங்கள் எழுந்தன. அதேநேரத்தில் கமல் ஏற்படுத்திய காந்தி - கோட்சே சர்ச்சையின்போது ‘கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கூறி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கணக்காக  மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சாத்வி பிரக்யா. பிரதமரே சாத்வியின் இந்தக் கருத்தை ஏற்கவில்லை என்று சொன்னார். `மன்னிக்கவே முடியாது' என்றும் கூறினார். எல்லாம் பேச்சோடு மட்டுமே இருக்கிறது. சாத்வி மீது கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் இல்லை. அவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது; அவரது வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம்  நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டதோடு வெற்றியும் பெற்று நாடாளுமன்றத்துக்குள் செல்லும் இரண்டாவது பெண் சாத்வி என்ற பெருமையையும் பெற்றுவிட்டார் இவர். கடந்த முறை சாத்வி உமா பாரதி உ.பி-யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் இருந்து வந்தார்.

மீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா?

எம்.பி-யான பழங்குடி போராளி

சாத்வி தேர்வாகும் அதே காலகட்டத்தில், கேரளாவில் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் இருந்து ரம்யா ஹரிதாஸ் என்ற பெண், காங்கிரஸ் எம்.பி-யாக ஆலத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழங்குடியினத்தவர்களில் போராட்டங்களை முன்னெடுப்பதில் முதல் நபராக நிற்கும் ரம்யா, இசைக் கல்லூரியில் இளங்கலை முடித்தவர். காங்கிரஸ் திறனறியும் பயிற்சி முகாமில் தனது இசையால் ராகுலின் பாராட்டைப் பெற்று காங்கிரஸில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டவர். குன்னமங்கலம் பஞ்சாயத்துத் தலைவராக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ரம்யா, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்தார். ரம்யா வெற்றிபெற வேண்டும் என்று பிரத்யேகமாக பிரியங்கா காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அந்த அளவுக்கு ரம்யா தனது செயல்பாடுகள் மூலம் மேலிடத்து அபிமானி ஆனார். இந்த நிலையில் அவர் பெற்றிருக்கும் வெற்றி  கேரள மக்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக மக்களவையில் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பஞ்சாயத்தில் தொடங்கி...

பஞ்சாயத்து தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் அடுத்தடுத்த படிநிலைக்கு போகும் நிலை ரம்யாவைப் போன்று சிலருக்கு மட்டுமே உருவாகிறது. மற்றபடி உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 33% ஒதுக்கீடானது, பெருமளவிலான பெண்கள் அரசியல் உயர் பொறுப்பின் மேலடுக்குகளுக்கு வர உதவுவதே இல்லை. அதற்கான காரணம்... உள்ளாட்சி அமைப்புகளில் மற்றவர்களின் தலையீடு அதிகம் இருப்பதுதான் . இதுவரை 33% மூலம் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் கணவன் அல்லது உறவினர்கள் தாம் அந்தத் தொகுதியில் அதிகாரம் மிக்கவர்களாகவும் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும்  இருக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் கோப்புகள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே அந்தப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். கிராமப்புற பெண்களுக்கு போதிய அளவு அரசியல் அறிவு இல்லாதது, `பெண்கள் தலைமையின் கீழ் இருப்பதா?' என்பதான ஆண்களின் மனநிலை, கல்வி அறிவு இல்லாமை அல்லது உயர்கல்வி கற்காத பெண்களால் சிறப்பாகச் செயல்பட முடியாத நிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆண் உறுப்பினர்கள் தங்கள் அதிகாரத்தைப் பெண் உறுப்பினர்களிடம் காட்டுவது  உள்ளிட்டவை பெண்கள்  சந்திக்கும்  சவால்கள். இவை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு மேற்கொண்ட  ஆய்வில் கண்டறியப்பட்டவை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தேர்ந்தெடுக்கும்போது உயர்சாதிக்காரர்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலுக்குத் தள்ளப்படுகிறார்கள். பணி செய்யவிடாமல் தடுத்துவிட்டு அவர்களுடைய தகுதியை தரநிர்ணயம் மூலம் காலில் போட்டு மிதிக்கிறார்கள்.  பணி செய்யத் தெரியவில்லை என்று சொல்லி பல இடங்களில் பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதும் அரங்கேறுகிறது. 2008-ல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஆய்வில்தான் இவை அனைத்தும் கண்டறியப்பட்டன.

இந்தியாவில் 21% ஆண்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தங்கள் குடும்பப் பெண்களை மீண்டும் அமர்த்தும் பணியைச் செய்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் சட்டமன்றம், உள்ளாட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களைவிடச் சிறப்பாகவே பணியாற்றி இருப்பதாக ஆய்வுகள் சொல்வது ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், பல இடங்களில் பெண்கள் சுயசார்போடு செயல்பட முடிவதில்லை. பெண்களின் அதிகாரம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பலரை அவர்களது வீட்டில் உள்ள சக பெண்களே மதிப்பதில்லை. அப்படியான தருணங்களில் கடும் மன உளைச்சலுக்குப்   பெண் உறுப்பினர்கள் ஆளாகிறார்கள். சிறிய காரணங்களுக்கு எல்லாம் குற்றம் கண்டு `தலைவி என்கிற திமிரால்' செய்வதாக குற்றம்சாட்டுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினரை அவரின் வீட்டினரே மிக மோசமான முறையில் அணுகுவதும், வன்கொடுமை செய்வதும்கூட உண்டு. இவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் குறித்த ஆய்வில் அறியப்பட்ட தகவல்கள். அதே போன்றுதான் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு அவரவர் வீடுகளிலும் உறவுகளிலும் அதற்கான மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை.

சிறப்பாகச் செயல்படும் மகளிர் உறுப்பினர்களுக்கு விருதுகளோடு, அவர்களது பஞ்சாயத்துகளுக்குப் பரிசுத்தொகையும்  அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களை அரசியலில் ஆர்வத்துடன் முழு அளவில் ஈடுபடுத்த வைக்க முடியும் என்று பஞ்சாயத்துராஜ் சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்குப் பிந்தைய பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்  இப்போது பல ஊராட்சி  அமைப்புகளில் இயங்கும் உறுப்பினர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கு சரோஜினி நாயுடு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பரிசுத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வைத் தொடர் பிரசாரங்கள் மூலம் அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பெண்களுடைய எண்ணிக்கை சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் குறைவாக இருக்கும்போது அதிக எண்ணிக்கையில் உள்ள ஆண்கள் குரல்களும் கருத்துகளுமே மேலோங்குகின்றன. தொடர் பிரசாரம் மூலமே  பெண்களின் அரசியல் அதிகாரப் பரவலை கொண்டுவர முடியும். அதன் வலிமையை, பலனை சமூகம் அடைய விரும்பினால் இதற்கான பல திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் ஒதுங்கியிருக்கும் பெண்களும் அரசியலுக்கு வருவார்கள். இதெல்லாம் எளிதாகச் சாத்தியப்படும்போதுதான் மம்தாக்களும் மாயாவதிகளும் பிரதமராக முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism