Published:Updated:

சீட் கிடைக்காததற்கு துரைமுருகன் காரணமா?- ஜவாஹிருல்லா ஓப்பன் டாக்

சீட் கிடைக்காததற்கு துரைமுருகன் காரணமா?- ஜவாஹிருல்லா ஓப்பன் டாக்
சீட் கிடைக்காததற்கு துரைமுருகன் காரணமா?- ஜவாஹிருல்லா ஓப்பன் டாக்

தி.மு.க கூட்டணியில் ஒரு தொகுதியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்தக் கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். செயற்குழுவில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா காத்திருந்தார். ஆனால், அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் ஒதுக்க முடியவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதனால் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் மனித நேய மக்கள் கட்சியினர் உள்ளனர். விழுப்புரத்தில் வரும் 9-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடத்தி முடிவை அறிவிக்கப் போவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்ற தகவல் வெளியானதும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள், சமூக வலைதளங்களில் தி.மு.க.வுக்கும் துரைமுருகனுக்கும் எதிரான விமர்சனங்களை வைத்துவருகின்றனர். 

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதுபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் ஒரு தொகுதியை திரும்பக்கொடுத்துவிட்டு 4 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தோம். 

தற்போது கட்சியின் தலைமையில் நிலவும் உள்கட்சி பூசலின் எதிரொலியே தி.மு.க.வில் இடம் கிடைக்கவில்லை என்ற கருத்து தொண்டர்களிடம் நிலவுகிறது. தொண்டர்களைப் பொறுத்தவரை டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமையோ டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்தால் அதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வெற்றி பெற காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. அதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கதான் செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதில் மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கப்படும்" என்றனர். 

இதுகுறித்து மமகவின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டதற்கு ``தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்ற அறிவிப்பு தொண்டர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித நேய மக்கள் கட்சியினருக்கும் அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தமிழகம் முழுவதும் பங்கேற்றுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் இடம் கிடையாது என்று தி.மு.க. கூறியதை ஜீரணிக்க முடியாத சூழல் உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து எங்களுக்கு கூட்டணிக்கான அழைப்பு வந்துள்ளது. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை கோட்பாடு அடிப்படையில் செயல்படுகிறது. 2009-ல் இருந்து சொந்த சின்னத்தில்தான் தேர்தலைச் சந்தித்துள்ளோம். நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால்தான் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளோம்" என்றார். 

துரைமுருகனால் கூட்டணியில் இடமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, `கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. கூட்டணியில் இடம் இல்லை என்று சொல்வதற்கு துரைமுருகன் காரணம் இல்லை' என்றார்.

மு.க.ஸ்டாலின் உங்களிடம் என்ன கூறினார் என்று கேட்டதற்கு, `மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும், அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அதை மக்களிடமும் நிர்வாகிகளிடமும் சொல்ல முடியாது. பதிவு செய்யப்பட்ட கட்சி தேர்தலில் களம் காண வேண்டும்' என்றார்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,  ``கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒரே ஒரு தொகுதியைத்தான் கேட்டோம். ஆனால் அதைக்கூட தி.மு.க. தரவில்லை. இறுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க. முன்வந்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் சட்டசிக்கல்கள் உள்ளன. டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கூட்டணி சேர தொண்டர்கள் விரும்பினாலும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் ம.ம.க தலைமை உள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம் பெறுவோம்" என்றார். 

டி.டி.வி. தினகரனுடன் கூட்டணியா அல்லது தி.மு.க.வுக்கு ஆதரவா என்ற முடிவை எடுக்கும் வரை மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் மதில் மேல் பூனையாக தங்களின் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர். அதில் இடம் பிடிக்கும் ஒவ்வொரு வாசகமும் தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இடம் பிடித்துள்ளன.