Published:Updated:

ஓகே ஆனது கூட்டணி? - மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்! 

ஓகே ஆனது கூட்டணி? - மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்! 
ஓகே ஆனது கூட்டணி? - மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்! 

தே.மு.தி.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்று அறிவிக்கிறது. இதற்காகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் அ.தி.மு.க தான் அவர்களுக்கான வாய்ப்பாக உள்ளது. இதனால் அ.தி.மு.க-வுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வண்டலூர் அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று மதியம் அவர் சென்னை வரவுள்ளார். 

முன்னதாக இந்தப் பொதுக்கூட்டத்துக்காக நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த விளம்பரங்களில் அ.தி.மு.க கூட்டணியில் இதுவரை இணைந்துள்ள பா.ம.க, பா.ஜ.க, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி மோடி, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோருடன் ராமதாஸ், அன்புமணி, ரங்கசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் படங்களும், பெயர்களுடன் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள கிளாம்பாக்கம் மேடையில் தற்போது தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க.வும், த.மா.காவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவர் புகைப்படமும் மேடையில் இடம்பெற்றிருப்பதன் மூலம் இருவரும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவது உறுதி ஆகியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.