Published:Updated:

``ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?” -நாஞ்சில் சம்பத் தாக்கு

``ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?” -நாஞ்சில் சம்பத் தாக்கு
``ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?” -நாஞ்சில் சம்பத் தாக்கு

”உலகம் சுற்றும் மோடியையே தனது வீட்டின் முன் நிற்கவைத்தவர் ஜெயலலிதா. ஆனால், அடித்த கொள்ளைக்குப் பாவ விமோசனம் தேடும் விதமாக இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் மோடிக்கு சேவகம் செய்துவருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?” என குற்றம் சாட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்து நகரில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வருகிறார் என விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில், 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு சூழல்களால் கனிமொழி கலந்துகொள்ளாத நிலையில், விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, நாஞ்சில் சம்பத்திற்கு தி.மு.க கொடி பதித்த துண்டை தி.மு.க தொண்டர் ஒருவர் தோளில் அணிய, அதை சிறிது நேரம் அணிந்த அவர்,  அதை எடுத்துவிட்டு தொடர்ந்து உரையாற்றினார். இதில் கவனமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எந்த இடத்திலும் குறைவாகப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் பிரதமர் மோடியைக் கடுமையாக விளாசினார்.

இறுதியாக, ”கடந்த ஓராண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நாடு சந்திக்கவேண்டிய காலத்தில் கலாசார பாசிச அராஜக ஆட்சியை அகற்ற நாஞ்சில் சம்பத்திற்கும் இடம் கிடைத்தது என்ற அடிப்படையில் வந்துள்ளேன்” எனக் கூறி பேச்சைத் தொடங்கினார். உலகம் சுற்றும் மோடியையே தனது வீட்டின் முன் நிற்கவைத்தவர் ஜெயலலிதா. ஆனால், அடித்த கொள்ளைக்குப் பாவ விமோசனம் தேடும் விதமாக, தற்போதைய முதல்வர் இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் மோடிக்கு சேவகம் செய்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா? தமிழகம் தற்போது, தனது பெருமையை இழந்து தவிக்கிறது.

இதே ஊரிலுள்ள நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 100 நாள்களாக மக்கள் போராட்டம் நடத்திவந்தபோதும், துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சூழலிலும், முதல்வர் என்கின்ற முறையில் ஒருமுறைகூட இ.பி.எஸ் நேரில் வந்து பார்க்கவில்லை. சமீபத்தில், ஆனந்த விகடன் சார்பில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு நம்பிக்கை விருதுவழங்கும் நிகழ்ச்சியில் அவர்களது குடும்பத்தினர் விட்ட கண்ணீரில் நான் கரைந்தேபோனேன். ஒகி புயலிலும், கஜா புயலிலும் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்த மக்களை நேரில் வந்தும் பார்க்கவில்லை. ஒரு ஆறுதல் செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், தேர்தலை மனத்தில் வைத்து தமிழகத்திற்குள் தைரியமாக நுழைகிறரே மோடி? மேக்கேதாட்டூவில் அணைகட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளித்துவிட்டு, தமிழகத்திற்குள் நுழையும் மோடியை தட்டிக்கேட்கத் துணிவுள்ளதா இந்த ஆட்சியாளர்களுக்கு?

அ.தி,முக தலைமையில் பா.ஜ.க-வும் பா.ம.க-வும் கூட்டணி வைத்துள்ளார்கள். இதை மெகா கூட்டணி என்கிறார்கள். இந்தியாவைக் கூறு போட முடிவுசெய்துள்ளனர் இந்தக் கூட்டணியினர். இந்தக் கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும்” என்றவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி, தனது நிதியில்  தொடங்கிவைத்த திட்டங்களைப் பட்டியலிட்ட பின் இறுதியாக, “நான் தி.மு.க-வில் இடம் தேடி வரவில்லை. என்மீது எழும் விமர்சனம் குறித்து எனக்குக் கவலை இல்லை” என்று கூறி முடித்தார்.