Published:Updated:

`எடப்பாடியிடம் பி.ஆர்.ஓ வேலைக்குச் சென்றிருக்கிறார் ராமதாஸ்!’ - ஸ்டாலின் தாக்கு

`எடப்பாடியிடம் பி.ஆர்.ஓ வேலைக்குச் சென்றிருக்கிறார் ராமதாஸ்!’ - ஸ்டாலின் தாக்கு
`எடப்பாடியிடம் பி.ஆர்.ஓ வேலைக்குச் சென்றிருக்கிறார் ராமதாஸ்!’ - ஸ்டாலின் தாக்கு

சந்தர்ப்பவாத கூட்டணி தி.மு.க கூட்டணியா...அ.தி.மு.க கூட்டணியா எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.கவின் தென்மண்டல மாநாடு விருதுநகர் அருகே இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு வரவேற்றார். ஐ.பெரியசாமி முன்னிலை வகித்தார். 

மாநாட்டில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் விருதுநகரில் தி.மு.க மாநாடு நடந்தது. அந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதேபோல் மீண்டும் வரலாறு திரும்புகிறது. 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். நாம் சுட்டிக் காட்டும் ராகுல்காந்தி பிரதமராக ஆட்சி அமைப்பார். கொள்ளைக்கார எடப்பாடி ஆட்சிக்கும், பாசிச பா.ஜ.க ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே இந்தக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த மாவட்டம் 2 முதல்வர்களை தமிழ்நாட்டுக்குக் கொடுத்துள்ளது. தி.மு.க கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். தி.மு.க-காங்கிரஸ் என்பது இந்திராகாந்தி, சோனியாகாந்தி காலம் தொடங்கி இன்று ராகுல்காந்தி காலம் வரை தொடர்ந்து கூட்டணியில் உள்ளது. தேர்தல் களத்தில் மட்டுமல்ல.இந்தியாவுக்கு ஆபத்து நேரங்களில் எல்லாம் நாங்கள் கைகோத்துள்ளோம்.

குட்கா ஊழல், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கொடநாடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விவகாரங்களை வைத்து அ.தி.மு.கவை மிரட்டி நீங்கள் அமைத்துள்ள கூட்டணியை நாங்கள் எப்படி அழைப்பது. உங்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியா. நாடு முன்னேற நாங்கள் அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியா?.

ஜெயலலிதா உயிருடன் இருந்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்பது மிகப்பெரும் பொய். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் மோடியா?. தமிழ்நாட்டு லேடியா? என ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இன்று பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியின் தவறான கருத்துகளை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா?. எடப்பாடி பழனிசாமி சொல்லும் அவரது தொகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு அவர் வரட்டும். நானும் செல்கிறேன். அங்கே விலைவாசி குறைந்துள்ளது என யாராவது கூறினால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படுவதை நாங்கள் தடுக்கவில்லை. 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா?. ஏன் குறைக்கவில்லை?. 2014-ம் ஆண்டு பிரசாரத்துக்கு வந்த மோடி, தற்போது அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து சீன் காட்டுகிறார். சீன் காட்டும் அரசியல்வாதி பிரதமர் மோடி. 130 கோடி மக்களை, தன் குடும்பம் என்கிறார். ஆனால் ரூ.500 மற்றும் 1000 செல்லாது என ஒரே இரவில் கூறி 130 கோடி மக்களையும் நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளார். அதுதான் அவர் சாதனை. ஜி.எஸ்.டி வரியால் சிறு குறு தொழிலை அழித்தவர். தனக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை கொடுத்து இந்திய மக்களை தன் குடும்பம் என அவர் கூறுவது கடைந்தெடுத்த பொய்.

தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநர் பணிக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 1,600 பேர் வடமாநிலத்தவர். படித்த தமிழக இளைஞர்களுக்கு இது அதிர்ச்சி. என்.எல்.சி. வங்கி, வருமான வரி, ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே வடமாநிலத்தவர்களுக்கே வேலை வழங்குகிறது. தமிழக படித்த இளைஞர்களுக்கு மோடி பெரும் துரோகம் செய்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா அல்ல. அது நாடகம். நீட் தேர்வு விலக்கு? பேரறிவாளன் விடுதலை? கஜா புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கேட்ட ரூ.4000 கோடி நிதி. ஜி.எஸ்.டி. தொகை என்ன ஆனது? மேக்கே தாட்டு அணையை ஏன் தடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?. தமிழக மீனவர் கைது நிறுத்தப்பட்டதா?. பிரதமரால் பதில் சொல்ல முடியுமா?. எதுவும் செய்யாமல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக் கேட்க வருகிறார். அடுத்தமுறை பிரதமர் தமிழகம் வரும் போது அவர் பதில் சொல்ல வேண்டும்.

பதவியில் இருக்கும் போதே ஊழல் வழக்கில் 2 முறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. இதை மறக்க முடியாது. அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் கோட்டையில் இருந்திருக்க மாட்டார். சசிகலாவோடு சிறையில் இருந்திருப்பார். மோடியை எடப்பாடி ஐஸ் வைக்கிறார். எடப்பாடிக்கு மோடி ஐஸ் வைக்கிறார். இவர்கள் ஜாடிக்கேத்த மூடி.

தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே மோடியை எடப்பாடி பாராட்டுகிறார். பா.ஜ.க திட்டங்கள் அனைத்தும் தொடர் தோல்வி எனத் துணை சபாநாயகர் தம்பிதுரை சொன்னார். இன்று பா.ஜ.கவுடன் ஏன் கூட்டணி? ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க ஓபிஎஸ்ஸும், கொலை வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

எடப்பாடியிடம் பி.ஆர்.ஓ. வேலைக்குச் சென்றுள்ளார் ராமதாஸ். இதற்கு மொத்த சம்பளம் வாங்கியுள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க மதவாத, சாதியவாத, சந்தர்ப்பவாத, ஊழல் கூட்டணியாகச் சேர்ந்துள்ளன. அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது. அதிகாரத்தில் மூலம் கொள்ளையடிக்கும் கூட்டணி என மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.

காமராஜரை தீயிட்டுக் கொளுத்த நினைத்த கூட்டம் மோடிக் கூட்டம். அவரை பற்றிப் பேச மோடிக்கு உரிமை இல்லை. பொதுத்துறையை அழித்து தனியார் துறைக்கு தாரை வார்த்தவர் மோடி. மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து ஏழைகளைப் படிக்க வைத்தவர் காமராஜர். ஏழைகள் படிக்கக் கூடாது என நீட் தேர்வைக்கொண்டு வந்தவர் மோடி. காமராஜரை பற்றிப் பேசக் கூடாது. ஹிட்லரைப் பற்றிப் பேசுங்கள். இது அடியாட்கள் உள்ள அ.தி.மு.க. கொள்ளை, கொலை, கட்டப்பஞ்சாயத்து நடத்தும் எடப்பாடி ஆட்சி.

டெல்லிக்கான 40 மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கான 21-ம் நமதே. நம் கையில் மாநில அரசு. மத்தியில் நாம் கைகாட்டும் அரசு. சென்னைக் கோட்டையில் நம் ஆட்சி. டெல்லிக் கோட்டையில் நாம் கைகாட்டும் ஆட்சி’’ எனத் தெரிவித்தார். கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க நடத்திய இந்த மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்கள் பங்கேற்றனர்.