Published:Updated:

`இது இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்’ - எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் மாரி செல்வராஜ்

`இது இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்’ - எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் மாரி செல்வராஜ்
`இது இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்’ - எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் மாரி செல்வராஜ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எழுவர் விடுதலைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தும் இன்னும் ஆளுநர் இது தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உள்ளதால் அவர்களின் விடுதலையில் தாமதம் நிலவுகிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள், சுற்றுப் பயணம், மனு அளித்தல் போன்றவற்றை செய்து வருகிறார். தற்போது  7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகின்ற 9-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனிதச் சங்கிலி பேரணி அறிவித்துள்ளார். இவரின் பேரணிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்படப் பல பிரபலங்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள `பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், `நான் சிறுவனாக இருக்கும்போது தொடங்கிய வழக்கு இது. ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென முதலில் என் அப்பா போராடினார், பிறகு என் அண்ணன், தற்போது இந்த போராட்டத்தில் நான் பங்கேற்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இந்த 28 ஆண்டுகளும் கவிதைகள், பேரணி, சுற்றுப் பயணம், மனு அளித்தல் போன்ற பல்வேறு வழிகளில் போராடியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர்களின் விடுதலை ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து நிற்கிறது.

ஆளுநரின் கையெழுத்தை வேண்டி, எழுவரின் விடுதலைக்கான இறுதிக்கட்ட போராட்டமாக வரும் 9-ம் தேதி தமிழகத்தின் முக்கிய 7 நகரங்களில் மாபெரும் மனிதச்சங்கிலி நடைபெறுகிறது. இதில் மக்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு 28 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுத்து இதற்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும். நான் சேலம் மாவட்டத்தில் நடக்கும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளேன். நீதியை எதிர்த்து நடக்கும் இந்தப் போராட்டத்தில் தயவுசெய்து கலந்துகொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.