Published:Updated:

`விஜயகாந்த் வந்துட்டாரா?, நாளை வரைதான் கெடு' - ஓ.பி.எஸ்ஸிடம் கறார் காட்டிய மோடி

எஸ்.மகேஷ்
`விஜயகாந்த் வந்துட்டாரா?, நாளை வரைதான் கெடு' - ஓ.பி.எஸ்ஸிடம் கறார் காட்டிய மோடி
`விஜயகாந்த் வந்துட்டாரா?, நாளை வரைதான் கெடு' - ஓ.பி.எஸ்ஸிடம் கறார் காட்டிய மோடி

சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போது, `விஜயகாந்த் வந்துட்டாரா' என்ற கேள்வியை பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளார். 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க.வுக்குத்தான் அதிகம் இருக்கிறது. சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் விஜயகாந்த்தின் படம் இடம்பிடித்திருந்தது. ஆனால், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி ஏற்பட்டதால் பேனரிலிருந்து விஜயகாந்த் படம் அகற்றப்பட்டது. அதோடு விஜயகாந்த்தின் கட்அவுட்டை அகற்றிவிட்டு அதில் தமிழிசை சௌந்தரராஜன் கட்அவுட்டும் வைக்கப்பட்டது. 

தே.மு.தி.க.வுடன் அமைச்சர் பியூஸ்கோயல்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார். பிரதமர் நரேந்திமோடி சென்னை வந்திறங்கிய சமயத்தில் அமைச்சர் பியூஸ்கோயல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எப்படியாவது கூட்டணிக்குள் தே.மு.தி.க. வந்துவிடும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திரமோடியிடம் அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தெரிவித்திருந்தனர். 

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்கச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விஜயகாந்த் வந்துவிட்டாரா என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அப்போது ஆங்கிலத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்ட பிரதமர் நரேந்திரமோடி மார்ச் 8-ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்துவிடுங்கள். வேண்டுமென்றால் ஒரு ராஜ்ய சபா சீட்டை தே.மு.தி.க.வுக்கு பா.ஜ.க கொடுக்கத் தயார் எனக் கூறியுள்ளார். 

இதையடுத்து கூட்டம் முடிந்து சென்னையைவிட்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன், கண்டிப்பாக விஜயகாந்த் கூட்டணிக்கு வரவேண்டும் என்று தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று நடந்த அ.தி.மு.க. கூட்டணி பரபரப்பில் தே.மு.தி.க. ஒரே நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது வெட்ட வெளிச்சமானது. தற்போது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு கொடுக்க தொகுதிகள் இல்லை என துரைமுருகன் கூறிவிட்டார். இதனால் தே.மு.தி.க.வின் ஒரே கூட்டணி சாய்ஸ் அ.தி.மு.க மட்டும்தான். அதுதொடர்பாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். பிரதமர் கூட்டம் முடிந்ததும் துணை முதல்வர் ஓபிஎஸ் தேனிக்குச் சென்றுவிட்டார். பா.ஜ.க நிர்வாகிகள் மட்டும் தே.மு.தி.கவிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. நிச்சயம் தங்களின் கூட்டணிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினர் உள்ளனர். மேலும் வரும் 8-ம் தேதிக்குள் (நாளை) தே.மு.தி.க.விடமிருந்து பதிலை அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தே.மு.தி.க. அறிவிக்கும் முடிவையடுத்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, `கூட்டணி தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்துவருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைய முடிவெடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில்தான் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதற்கு அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துவிட்டால் அடுத்த நிமிடமே ஒப்பந்தம் கையொப்பமாகிவிடும். இதற்கிடையில் தி.மு.க.வின் அரசியல் வெளிப்படையாக எங்களுக்குப் புரிந்துவிட்டது. இதனால் நாங்கள் ஏமாற மாட்டோம். நாளைக்குள் எங்களின் முடிவு அறிவிக்கப்படும்' என்றனர். 

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ``சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கூட்டணி தொடர்பான விவரங்களைச் சொல்லிவிட்டோம். தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் கடசித் தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடியும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். தே.மு.தி.க., எங்கள் கூட்டணியில் கட்டாயம் இடம்பெறும். கூட்டணிப் பேச்சுவார்த்தை என்றாலே இழுபறி இருக்கத்தானே செய்யும்'' என்றனர். 

தமிழக பா.ஜ.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``துணை முதல்வரிடம் பிரதமர் என்ன பேசினார் என்று எங்களுக்குத் தெரியாது.  என்றாலும் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இந்தத் தேர்தலை தே.மு.தி.க. சந்திக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். விரைவில் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்ற வேலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். எங்களின் மெகா கூட்டணியின் வெற்றியைப் பார்த்து பயந்ததால்தான் தி.மு.க.வினர் அரசியல் பரபரப்புக்காக அப்படிச் சொல்கிறார்கள்'' என்றார்.