Published:Updated:

`தே.மு.தி.க. தானாகக் கூட்டணிக்கு வரும்!'- மோடி ப்ளானும் உளவுத்துறையின் ரிப்போர்ட்டும் 

`தே.மு.தி.க. தானாகக் கூட்டணிக்கு வரும்!'- மோடி ப்ளானும் உளவுத்துறையின் ரிப்போர்ட்டும் 
`தே.மு.தி.க. தானாகக் கூட்டணிக்கு வரும்!'- மோடி ப்ளானும் உளவுத்துறையின் ரிப்போர்ட்டும் 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தானாக வரும் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க-வினரும் அ.தி.மு.க-வினரும் உள்ளனர். கூட்டணிக்காக பக்கா ப்ளானை பிரதமர் மோடி வகுத்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும் உள்ளனர். தே.மு.தி.க. நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்தை திருநாவுக்கரசர் தொடங்கி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், ரஜினி, சரத்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனால் தே.மு.தி.க.வுக்கு மவுசு ஏற்பட்டது. கூட்டணிக் கதவுகளைத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திறந்துவைத்திருந்தன. 

தி.மு.க. கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி இறுதி செய்யப்படாத காரணத்தால் விஜயகாந்த், பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற அதிக வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு மூன்று தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அரசியல் பரப்பான சூழ்நிலையில் தே.மு.தி.க. தொடர்ந்து கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. 

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்று கூறினார். நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தே.மு.தி.க. கூட்டணி விஷயத்தில் தெளிவாக இருக்கிறது என்று கூறினார். நிருபர்களின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு விஜயகாந்த் ஸ்டைலில் பிரேமலதா பதிலளித்தார். தே.மு.தி.க. ராணுவ கட்டுப்பாடுடன்கூடிய கட்சி என ஜெயலலிதாவைப் போல பிரேமலதா கூறினார். 

இதற்கிடையில், மாநில உளவுத்துறை தே.மு.தி.க-வின் மீட்டிங் தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், கோயம்பேடு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஏழு மாவட்டச் செயலாளர்கள், தற்போதுள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தி.மு.க. அல்லது டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி தொடர்பாக பேசுவோம் என்று கூறியுள்ளனர். அதற்கு பிரேமலதா, `கேப்டனின் மனம் நொந்துபோகும் அளவுக்கு யாரும் பேச வேண்டாம்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு நிர்வாகிகள் அமைதியாகிவிட்டனர். இருப்பினும் கூட்டத்திலிருந்து வெளியேறிய மூன்று மாவட்டச் செயலாளர்கள், தங்களின் மன ஆதங்கத்தை குமுறியுள்ளனர். அந்தத் தகவலும் கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட் தொடர்பாக அ.தி.மு.க. கட்சி தலைமையில் ஆலோசனை நடந்துள்ளது. அதுபோல மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டிலும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைப்பது பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதொடர்பாக. பா.ஜ.க.வும் ஆலோசித்துள்ளது. 

இதையடுத்து, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதோடு தே.மு.தி.க.விடம் எழுத்துபூர்வமாக ஒரு வாக்குறுதியைப் பெற அ.தி.மு.க. தலைமை விரும்புகிறது. அதாவது, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது அ.தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுதொடர்பான ஆலோசனையில் தே.மு.தி.க. ஈடுபட்டுவருகிறது. இடைத்தேர்தலிலும் தே.மு.தி.க.வுக்கு சீட்கள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விஜயகாந்த் வைத்துள்ளார். ஆனால், அதற்கு அ.தி.மு.க. தலைமை சம்மதிக்கவில்லை. இதுதான் இழுபறிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

தனித்துப் போட்டி அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதுதான் தே.மு.தி.க.வுக்கு தற்போதைய சாய்ஸ். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கத்தான் தே.மு.தி.க.வின் கட்சித் தலைமை விரும்புகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடமே தே.மு.தி.க. தேர்தல் பங்கீட்டுக் குழுவினர் ஓப்பனாக கூறியுள்ளனர். அதுதொடர்பாக பிறகு ஆலோசிப்போம். முதலில் மோடி கூட்டத்துக்கு வாருங்கள் என்று அமைச்சர் பியூஸ் கோயல் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தே.மு.தி.க-வினர் பிடிவாதமாக இருந்ததால் கடைசி நேரத்தில் விஜயகாந்த்தின் கட்அவுட், படம் கூட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.

சென்னையில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்காத காரணத்தைக் கேட்ட பிரதமர் மோடி அப்செட் ஆகியுள்ளார். அதன்பிறகு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடனும் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளுடனும் ஆலோசித்த பிரதமர் மோடி, `தே.மு.தி.க. தானாக கூட்டணிக்கு வரும். வெயிட் அண்ட் சி' என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். புதுச்சேரியில் விஜயகாந்த்தின் உறவினருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. அந்தக் கல்லூரி தொடர்பான கோப்புகள் டெல்லியில் உள்ளன. அதை தூசி தட்டி எடுக்கப் போகும் தகவல்கள் தே.மு.தி.க.வுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் தெரிந்ததும்  தே.மு.தி.க. தரப்பில், பிடிவாதத்தை தளர்த்திவிட்டு கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டனர். அதோடு விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரனின் பேச்சுக்கும் பிரேமலதா கடிவாளம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜயபிரபாகரன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தலையீடுவதில்லை. அதோடு தே.மு.தி.க.வின் தலைமை அனுமதியில்லாமல் எதுவும் அவர் செய்வதில்லையாம்.