Published:Updated:

`தலைமை முடிவுசெய்தால் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்’ - தமிழிசை!

`தலைமை முடிவுசெய்தால் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்’ - தமிழிசை!
`தலைமை முடிவுசெய்தால் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்’ - தமிழிசை!

``கூட்டணி கட்சியிடம் பா.ஜ.க போட்டியிடத் தூத்துக்குடி தொகுதியைக் கேட்டுள்ளோம். தலைமை முடிவு செய்தால் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்” எனப் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக, மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கட்சிக்  கொடியேற்றி வருகிறார். இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களில் பா.ஜ.க சார்பில் கொடியேற்றப்பட்டு வருகின்றன. மாநிலத் தலைவர் என்ற முறையில், நான் தூத்துக்குடிக்கு வந்துள்ளேன். தமிழகத்தில் நல்ல ஒரு கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியைப் பார்த்து மற்ற கட்சிகளை மிரட்டி, பா.ஜ.க கூட்டணி அமைத்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். நல்ல கட்சிகளைத் திரட்டிதான்  நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். அதைப் பார்த்து அவர் மிரண்டுள்ளார். தன் பேச்சு, அறிக்கைகளில், தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்வோம் எனக் கூறுகிறாரா? 

முந்தைய 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு என்னென்ன செய்தார் எனச் சொல்கிறாரா. எதிர்க்கட்சிகளை விமர்சனம் மட்டுமே செய்கிறார். பா.ஜ.க-வையும் பிரதமர்  மோடியையும் விமர்சனம் செய்கிறார். ஊழலுக்காக ஆட்சியை இழந்தவர்கள் அவர்கள். ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்கள் மீது  விசாரணை நடைபெற்று வருகிறது. ஏழை எளிய மக்கள் விவசாயிகளுக்கான மாநில அரசின் 2,000 ரூபாய்  திட்டத்தையும் மத்திய அரசின் 6,000 ரூபாய் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள்.

5 முறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க-வுக்கு தமிழகப் பிரச்னையில் பங்கே இல்லையா. வழக்காடு மன்றத்தில் தமிழ் மொழியை ஏன் கொண்டுவரவில்லை எனக் கேட்கிறீர்கள். கலைஞர் அவர்கள் கனிமொழியை வளர்த்த அளவுக்கு தமிழை வளர்க்கவில்லை. அதனால்தான் பெயர் பலகைகளில்கூட தமிழ் இல்லை. உயர்கல்வி வரையில் தமிழே படிக்காமல், உயர்கல்விக்கு வரும் நிலையை இவர்கள்  வைத்துள்ளார்கள். ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் பா.ஜ.க-வை குற்றம் சொல்கிறார்கள். கூட்டணிக் கட்சியில், தூத்துக்குடி தொகுதியை பா.ஜ.க-வுக்குக் கேட்டுள்ளோம்” என்றவரிடம், தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால் நீங்கள் போட்டியிடுவீர்களா” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தலைமை முடிவு செய்தால் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.