Published:Updated:

"எந்தக் காலத்திலும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக ஆகிவிட முடியாது!" -கரு.பழனியப்பன்

"எந்தக் காலத்திலும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக ஆகிவிட முடியாது!" -கரு.பழனியப்பன்
"எந்தக் காலத்திலும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக ஆகிவிட முடியாது!" -கரு.பழனியப்பன்

வழக்கறிஞர் தி.லஜபதிராய் எழுதிய நூல் வெளியீட்டு விழா, மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாக அரங்கில் நடைபெற்றது. தமிழக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நூலை வெளியிட்டார். 

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தனது வாழ்த்துரையில், "முகநூலில் எனது பதிவுகள் பலவற்றைப் பார்த்து, 'வரலாற்றை மீண்டும் கிளறுகிறீர்கள்' என்று சாடுகின்றனர். பழைய வரலாற்றை எப்போதும் மறந்து கடந்துவிடக் கூடாது" என்றார். "சமூக வலைதளங்களில், நமது கருத்துகளைப் பதிவிடலாம். கமென்ட்டுகளைப் பார்ப்பதில் நேரத்தை வீண்செய்யக் கூடாது" எனத் தனது சிறப்புரையைத் தொடங்கிய இயக்குநர் கரு.பழனியப்பன், "என்னை சாதிய அடையாளத்துக்குள் தேடுகிறார்கள். நான் சாதி மதம் தேசம் ஆகியவற்றை மறுத்து திருமணம் செய்துகொண்டவன்" என்று கூறினார்.

தொடர்ந்து, "ஹெல்மெட் போடாதவனைப் பிடிக்கிற அரசாங்கம்தான், காட்டை அழித்து நடிகைகளோடு ஆட்டம் போடும் சாமியாரை வேடிக்கை பார்க்குது. வரலாறுகள் எல்லாமே எதிர்காலத்தைக் காட்டித்தான் செல்கின்றது. கவனிக்கத் தவறிவிடுகிறோம், நாம். பழைய ரதயாத்திரை புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். டிரைவராக அத்வானியும், டிரைவர் கனவுடன் ஓரமாய் இருக்கும் கிளீனரைப் போல மோடியும் அமர்ந்திருப்பார்கள்" என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், "பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல், தமிழிசையும் பொன்.ராதாகிருஷ்ணனும்தான். எந்தக் காலத்திலும் தமிழிசை, நிர்மலா சீத்தாராமனாய் ஆகிவிட முடியாது. பொன்.ராதாகிருஷ்ணன், சுப்ரமணியசுவாமியாய் ஆகிவிட முடியாது. லயோலா கல்லூரியை மூடக் கோருவது உள்ளிட்டவற்றைச் செய்கின்ற பா.ஜ.க-வினர்தான் ஆன்டி இந்தியன்" என்றார்.

வாழ்த்துரை வழங்கிய இயக்குநர் அமீர், "ரமலான் காலத்தில் கோவை சர்ச்சை தொடர்பாக நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் திட்டமிட்டே என்னையும் அழைத்திருந்தனர். இந்தத் திட்டத்திற்கு ஊடகங்களும் உதவிபுரிந்தன. பிறகு, உடனிருந்தவர்கள் சமரசம் செய்துவைத்தனர். தி.மு.க, சாதி பார்த்து தொகுதிப் பங்கீட்டைச் செய்கிறது. இதனாலேயே, கூடவே இருந்த மனிதநேய மக்கள் கட்சியைக் கைவிட்டனர்" என்றார். மேலும், "காவியை எதிர்க்கும் இடமெங்கும் நானும் நிற்பேன். படேலுக்கு சிலை வைப்பது பா.ஜ.க-வுக்கு அரசியல் அவசியமாய்ப் படுகிறது. ஆனால், காந்தியின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் அனுசரிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. அப்போதுதான், அவரைச் சுட்டவனின் வரலாற்றைப் பேசமுடியும். வடநாட்டில் வரட்டும்... ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க வேண்டாம்" என்றார்.