Published:Updated:

‘நோயைவிட பிரிவே அதிகம் வலிக்கிறது’ - பேரறிவாளனின் தந்தை உருக்கம்

‘நோயைவிட பிரிவே அதிகம் வலிக்கிறது’ - பேரறிவாளனின் தந்தை உருக்கம்
‘நோயைவிட பிரிவே அதிகம் வலிக்கிறது’ - பேரறிவாளனின் தந்தை உருக்கம்

முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து நிற்கிறது. 

தன் மகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நீண்ட காலமாகப் போராடி வருகிறார். கட்சிகளுடன் இணைந்து போராட்டம், மக்களிடம் ஆதரவு கேட்டு சுற்றுப்பயணம் போன்ற பல வழிகளில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துவருகிறார். இதன் அடுத்தகட்டமாக, இன்று மாலை 4 முதல் 6 மணி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, புதுவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளார். இதில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் போன்ற பலர் கலந்துகொள்ள உள்ளனர். 

இது தொடர்பாகப் பேசியுள்ள பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ‘என் மகன் பேரறிவாளனை சிறையில் பறிகொடுத்து 28 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. முதுமையில் பல்வேறு நோய்களுடன் போராடிக்கொண்டிருப்பதைவிட, என் மகனை எண்ணி ஏங்கிக்கொண்டிருப்பதும், தவித்துக்கொண்டிருப்பதும்தான் அதிகம். அதுவே அதிகமாக வலிக்கிறது. மனத்தளவிலும், உடலளவிலும் நான் மிகுந்த வேதனையில் உள்ளேன். இன்று, தமிழகத்தின் ஏழு நகரங்களில் என் மகன் உள்பட ஏழுபேரின் விடுதலையைக் கோரி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. 

இதில், மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழக அரசின் பரிந்துரையில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.  என்னால் இரண்டு நிமிடங்கள்கூட  ஓர் இடத்தில் நிற்க முடியாது. இருந்தும் இன்று சேலத்தில் நடக்கும் மனிதச் சங்கிலியில் கலந்துகொள்ள உள்ளேன். இந்தப் போராட்டத்துக்கு உங்களின் ஆதரவை தெரிவித்து, என் மகன் உள்பட ஏழு பேரை விடுதலைசெய்ய உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.