Published:Updated:

`தென் சென்னைத் தொகுதி குஷ்புவுக்கு...' - காங்கிரஸில் யார் யாருக்கு சீட்?

`தென் சென்னைத் தொகுதி குஷ்புவுக்கு...' -  காங்கிரஸில் யார் யாருக்கு சீட்?
`தென் சென்னைத் தொகுதி குஷ்புவுக்கு...' - காங்கிரஸில் யார் யாருக்கு சீட்?

தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தென் சென்னை அல்லது திருச்சி குஷ்பு, காஞ்சிபுரம் சுமதி அன்பரசு, கன்னியாகுமரி ஊர்வசி அமிர்த ராஜ் எனப் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. 

 தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லிக்கு அனுப்பியுள்ளது. அதில், 5 பெண்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. 

 இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ``கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்த ஆலோசனை நடந்துவருகிறது. ஏற்கெனவே, தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தலைமையிடம் கொடுத்துவிட்டோம். அதில் கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்சி, ஈரோடு அல்லது திருப்பூர், சேலம், தேனி, விருதுநகர் என 7 தொகுதிகள் முடிவாகிவிட்டன. மீதமுள்ள தொகுதிகளும் இன்னும் சில தினங்களில் இறுதி செய்யப்பட்டுவிடும். 

இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் டெல்லி லாபி மூலம் சீட்டுகளைப் பெற முயன்றுவருகின்றனர். செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு, தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், சென்னையில் உள்ள தொகுதிகளில் தி.மு.க போட்டியிட முடிவுசெய்துள்ளதால், குஷ்புவுக்கு தென் சென்னை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் அவருக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி தொகுதியைப் பெற முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் முயன்றுவருகிறார். 

 திருச்சி தொகுதியை குஷ்பு தேர்வு செய்ததற்கு சில காரணங்கள் உள்ளன. அவர், முன்னணி நடிகையாக இருந்த சமயத்தில் திருச்சி ரசிகர்கள்தான் குஷ்புவுக்கு கோயில் கட்டினர். மேலும், திருச்சியில் அவர் போட்டியிட்டால், வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தலைமைக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனால், திருச்சி தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

 இதையடுத்து, விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும், தேனி தொகுதியில் ஆரூண் அல்லது அவரின் மகன் அசன் ஆருணும் போட்டியிட வாய்ப்புள்ளது. ஈரோடு அல்லது திருப்பூர் தொகுதியில் போட்டியிட இளங்கோவன் காயை நகர்த்திவருகிறார். 

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட 13 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், வசந்தகுமார், ராபர்ட் புரூஸ், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்த ராஜ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இளைஞர் காங்கிரஸில் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக ராகுல்காந்தியிடம் நல்ல பெயரை வாங்கிய ஊர்வசி அமிர்தராஜ், தொகுதியைப் பெற கடுமையாக முயற்சி செய்துவருகிறார். இளைஞர் காங்கிரஸிற்கு கண்டிப்பாக ஒரு தொகுதி என்பதால், அது அசனுக்கா அல்லது ஊர்வசி அமிர்தராஜுக்கா என்ற போட்டி நிலவுகிறது.   

தமிழகத்தில், மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியைப் பெற பெண் நிர்வாகிகள் கேட்கின்றனர். அந்தப் பட்டியலில்  அனைத்திந்திய மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளரான ஹசீனா சையத்,  மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, சுமதி அன்பரசு, ராணி, ஜான்ஸி ஆகியோரின் பெயர்கள் உள்ளன.  சென்னை அல்லது அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும். இதனால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை ஹசீனா சையத் குறி வைத்துள்ளார். சுமதி அன்பரசு, காஞ்சிபுரம் தொகுதியைக் கேட்டுள்ளார். தனித் தொகுதிகளான   திருவள்ளூர், விழுப்புரம்,  தென்காசி ஆகிய  தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இந்தத் தொகுதிகளில் போட்டியிட ராணி, ஜான்ஸி, செல்வப்பெருந்தகை உள்பட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் ஒதுக்கப்பட்டால், விக்டரி ஜெயக்குமார் போட்டியிட வாய்ப்புள்ளது என்றனர். 

 இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``வேட்பாளர் பட்டியல் தேர்வுசெய்யும்போது, குறிப்பாக இரண்டு நடைமுறைகளைப் பின்பற்ற ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதில், செயல் தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும், இரண்டு முறை  எம்.பிதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் ராகுல் காந்தி உறுதியாகக் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், சிலருக்கு வாய்ப்பு கிடைக்காது" என்றார்.