Published:Updated:

'தேர்தலுக்காக லீவு போட்டாச்சு; தினமும் 50 கி.மீ சைக்கிள் பிரசாரம்!' - பொதுமக்களைக் கவரும் காளியப்பன்

காளியப்பன்

'தேர்தலுக்காக லீவு போட்டாச்சு; தினமும் 50 கி.மீ சைக்கிள் பிரசாரம்!' - பொதுமக்களைக் கவரும் காளியப்பன்
'தேர்தலுக்காக லீவு போட்டாச்சு; தினமும் 50 கி.மீ சைக்கிள் பிரசாரம்!' - பொதுமக்களைக் கவரும் காளியப்பன்

அ.தி.மு.க - பா.ஜ.க ஆகிய கூட்டணி கட்சிக் கொடிகளுடன் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் காளியப்பன் தினமும் 50 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (59). தனியார் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வரும் அவர் புதிய தமிழகம் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டதுமே மகிழ்ச்சியடைந்த காளியப்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக தன் பிரச்சார பயணத்தையும் தொடங்கிவிட்டார்.

தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதியோ, வேட்பாளரோ அறிவிக்கப்படாத நிலையில் காளியப்பன் ஊர் ஊராகச் சைக்கிளில் சென்று தன் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

அதிமுக, பாஜக, புதிய தமிழகம் கட்சிகளின் கொடிகளுடன் கூடிய சைக்கிளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத் தெருக்களில் உலா வந்த அவரை சந்தித்து பேசினோம். “மார்ச் 1-ம் தேதி எங்க ஊரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினேன். ஒரு நாளைக்கு 50 கி.மீ. தூரமாச்சும் பிரசாரத்துக்காக பயணம் செய்தால் தான் எனக்கு அன்னக்கி பொழுதே முடியும். தேர்தல் முடிக்காமல் வேலைக்கு போறதில்லை. பிரசாரத்துக்காக தேர்தல் முடிகிற வரைக்கும் லீவு போட்டாச்சு. இப்போதைக்கு கட்சியை ஜெயிக்க வைக்கிறது தான் என்னுடைய முதல் வேலை. காலையில் 4 மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துகிட்டு பிரசாரம் பண்ணத் தொடங்கிடுவேன். போற வழியில கட்சிக்காரர்கள் யாராச்சும் செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். அதுதான் என்னுடைய சாப்பாட்டு செலவுக்கு உதவும். யார்கிட்டயும் நானா எதுவும் கேட்க மாட்டேன். சோப்பு, சீப்பு, கண்ணாடி, குவலை எல்லாத்தையும் எடுத்திட்டு வந்தாச்சு. ஆங்காங்கே இருக்கிற எதாச்சும் ஒரு சாவடியில் இரவு தூங்கிடுவேன்.

வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோயில், இராஜபாளையம், கழுகுமலை பகுதிகளில் பிரசாரம் முடிந்தது. 500 கிலோ மீட்டருக்கு மேல் நான் போயிருப்பேன். சில இடங்களில் பாஜகவுக்கு எதிராகவும், எங்க கூட்டணிக்கு எதிராகவும் சிலர் பேசறாங்க. அவங்க அவங்களுக்கு பிடித்த கட்சிக்காக பேசறாங்க. எல்லா விமர்சனங்களையும் தாண்டி தான் பிரசாரம் செய்றேன். எங்க கட்சிக்கு தென்காசி தொகுதி தான் ஒதுக்குவார்கள். கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அல்லது அவரது மகள் தான் போட்டியிடுவார்கள். அவங்களை ஜெயிக்க வைக்கிறது தான் என்னுடைய முதல் வேல. தென்காசி தொகுதி முழுவதும் பிரசாரம் செய்வேன். இடையில் எப்போவாச்சும் வீட்டுக்குப் போவேன். இந்த தொகுதியில் எங்க கட்சி ஜெயிச்சாதான் எனக்கு நிம்மதி என காளியப்பன் தெரிவித்தார்.

தங்கள் கட்சிக்காக வெயில், மழையையும் பொருட்படுத்தாது உழைக்கும் தொண்டர்கள் எல்லா கட்சிகளிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.