Published:Updated:

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!
அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். அன்றைய தினமே, காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றார். இதனையடுத்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள இரு பெரிய கட்சிகளும் தேசியக் கட்சிகளுடனான தங்களின் கூட்டணியை அறிவித்துவிட்டன.

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வும், பா.ம.க-வும் இணைந்துள்ளன, அதேபோல தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க மற்றும் இதர சிறிய கட்சிகளும் இணைந்துள்ளன. இந்த இரு கூட்டணியும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுவிட்டன. இன்னும் எந்தத் தொகுதியில் யார் போட்டியிட உள்ளனர் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டும். அது முடிந்தால், இந்த இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள்.

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஆனால், தே.மு.தி.க-வைப் பொறுத்த வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. முன்னதாக, அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவல் வெளியாகி நீண்ட நாள்கள் ஆகியும் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் பா.ம.க மற்றும் பா.ஜ.க உடனான தங்களின் கூட்டணியை அறிவித்தது அ.தி.மு.க. இதற்கிடையில், தி.மு.க-வுடன்  தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், தி.மு.க-வுடன் சொந்த விஷயம் தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது; கூட்டணி இல்லை என சுதீஷ் அறிவித்தார். இதனையடுத்து, துரைமுருகனின் கருத்தை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்தார். இதனால், தே.மு.தி.க-தி.மு.க இடையே கூட்டணி இல்லை என உறுதியானது.

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்நிலையில் இன்று, சென்னையில் அ.தி.மு.க உடனான தே.மு.தி.க கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் பங்கேற்றனர். அ.தி.மு.க தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ், தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.
 

அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தே.மு.தி.க-வுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க  ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.