Published:Updated:

90 கோடி பேருக்கு வாக்குரிமை! - உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் #Elections2019

90 கோடி பேருக்கு வாக்குரிமை! - உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் #Elections2019
90 கோடி பேருக்கு வாக்குரிமை! - உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் #Elections2019

மத்தியில் தற்போது நடைபெற்றுவரும் பா.ஜ.க ஆட்சி, வரும் ஜூன் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு, அதற்கான தேதிகளும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதன்படி, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல், மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  பெரும்பாலான  கட்சிகள் தங்களின் கூட்டணிகளை அறிவித்துவிட்டன. தற்போது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதன்பிறகு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், வரும் 17-வது மக்களவைத் தேர்தல்தான் புவியிலேயே மிகப்பெரிய தேர்தல் (எண்ணிக்கையின் அடிப்படையில்) எனக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2017-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இங்கு 133.97 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதன் அடிப்படையில், வரும் தேர்தலில்தான் அதிக மக்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில், இந்தியா முழுவதும் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற 2014-ம் ஆண்டு தேர்தலில், 85 கோடியே  50 லட்சம் பேர் வாக்களித்த நிலையில், தற்போது அவர்களில் 5 கோடியே  50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.  இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டபோது,  17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தனர்.

இந்தியாவில், மொத்தம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள், 18 முதல் 19 வயது பெற்றவர்களாக உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், 35 வயதுக்கும் கீழ் உள்ளனர். மேலும், 38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் வரவுள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த, சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 3,626 கட்சிகள் உள்ளன. இவற்றில் 1,841 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தில் முறையாக அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகின்றன. 

குற்றவியல் பதிவுகள்கொண்ட 186 பேர், 2014 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த தேர்தலின்போது நடந்த சோதனையில், சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான பணமும், 16 மில்லியன் மதுபான பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், 17,000 கிலோ அளவிலான சட்ட விரோத போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.