Published:Updated:

``எனக்கு எதிராக சதி நடக்கிறது!” -சர்ச்சை ஆடியோவுக்கு விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கீதாஜீவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எனக்கு எதிராக சதி நடக்கிறது!” -சர்ச்சை ஆடியோவுக்கு விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கீதாஜீவன்
``எனக்கு எதிராக சதி நடக்கிறது!” -சர்ச்சை ஆடியோவுக்கு விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கீதாஜீவன்

``எனக்கு எதிராக சதி நடக்கிறது!” -சர்ச்சை ஆடியோவுக்கு விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கீதாஜீவன்

தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன், சாதிய மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், “எனது பல தொலைபேசி உரையாடல்களைத் திரித்து, பொய்யான வாட்ஸ்அப் செய்தி ஒன்று பரப்பப்பட்டுவருகிறது. இந்தப் பொய்யான வாட்ஸ்அப் தகவல்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்” எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி  தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கீதாஜீவன். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க செயலாளரான என்.பெரியசாமியின் மகளான இவர், தற்போது வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், ”சாதி மோதலை உருவாக்கும் விதமாகப் பேசுகிறார், கீதாஜீவன்” என்று குறிப்பிட்டு, அத்துடன் ஒரு ஆடியோவும் வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில், மதுரையைச் சேர்ந்த சைவ வேளாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கீதாஜீவனுடன் போனில், தேவேந்திரகுலத்தாருக்கு வேளாளர் என்ற பட்டத்தை எப்படி சேர்த்துக் கொடுப்பதாகக் கூறலாம்? எனத் தொடங்கி, தி.மு.க-விற்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என்பது வரை பேசுகிறார்.

அதற்கு கீதாஜீவன் பேசும்போது, அவருக்கு ஆதரவாகவும், பட்டியல் இனத்தினருக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கிறார். தொடர்ந்து, “இந்தக் கோரிக்கையை ஆதரித்து கோவில்பட்டிக்கு கனிமொழி வந்தபோதே சைவவேளாளர் அமைப்பைச் சேர்ந்த சிலர் மனு கொடுத்தார்கள். உங்களுக்கு அதில் விருப்பம் இல்லையென்றால், உங்களுடைய எதிர்ப்புக் கருத்தைப் பதிவுசெய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் அரசு குழுவிடம் மனு கொடுங்கள். அனைத்து கட்சித் தலைவர்கள், அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மனு கொடுங்கள். டாக்டர்.கிருஷ்ணசாமிக்கும் மனு அனுப்புங்கள். இது உங்களின் உரிமை! அதற்கு மரியாதை கொடுத்து, கேட்கவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை” என்று பேசுகிறார். அவரது இத்தகைய பேச்சுக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில், கீதாஜீவனை நாம் தொடர்புகொண்டு ஆடியோ விவகாரம் குறித்துப் பேசினோம், “நான் யாருக்கும் ஆதரவாகவோ யாருக்கும் எதிராகவோ பேசவில்லை. ஒரு சிலர் என்னிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியதால் பதில் அளித்தேன். ஆனால், என்னுடைய பேச்சை திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது” எனக் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து எம்.எல்.ஏ கீதாஜீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “நான் தி.மு.க குடும்பத்தைச் சார்ந்தவள். என் தந்தையார்  என்.பொரியசாமி, சாதி, மதம் பார்க்காமல் தி.மு.க கொள்கைகளை மட்டுமே பின்பற்றி அரசியலில் இருந்துவந்தார்கள். சிறு வயது முதல் நானும் எனது குடும்பத்தாரும் சாதி, மத உணர்வு இல்லாமல் அனைத்து சமுதாயத்தினரிடமும் சகோதர, சகோதரியாகத்தான் பழகி  வருகிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், 7 பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து,  தேவேந்திரகுல வேளாளர்  என அறிவிக்க, கடந்த 2.2.2011-ல் நீதியரசர்  ஜனார்த்தனம் தலைமையில் அரசுக்கு ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்தார்.  அதன்பின்  ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான  ஸ்டாலின் அவர்கள், ஊராட்சி கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளார் பெண்ணின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது, தி.மு.க ஆட்சி ஏற்பட்டவுடன் தேவேந்திர குல வேளாளர்  மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகப் பதில் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 20 நாள்களாக சில சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், அவர்களது எதிர்க் கருத்தை தொலைபேசியில் என்னிடம் பேசினார்கள். என்னுடைய பல தொலைபேசி உரையாடல்களைத் திரித்து,  பொய்யான வாட்ஸ்அப் செய்தி ஒன்று பரப்பப்பட்டுவருகிறது. இந்தப் பொய்யான வாட்ஸ்அப் தகவல்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். ஒரு பெண்ணாகிய எனக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படுத்திடவும், தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்  விதமாகவும், தி.மு.க. தலைமையிடம் கெட்டப் பெயர்  ஏற்படுத்திட வேண்டும் என்றும் தொடர்ந்து சதி செய்யப்பட்டுவருகிறது. தி.மு.க வழியில் சாதி, சமய உணர்வுகளைக் கடந்து, தொடர்ந்து செயல்படுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு