Published:Updated:

`உங்க கோஷ்டி பூசலைத் தாங்க முடியல; கூட்டணிக்கே தொகுதியைக் கொடுக்கிறோம்'- ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

`உங்க கோஷ்டி பூசலைத் தாங்க முடியல; கூட்டணிக்கே தொகுதியைக் கொடுக்கிறோம்'- ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.
`உங்க கோஷ்டி பூசலைத் தாங்க முடியல; கூட்டணிக்கே தொகுதியைக் கொடுக்கிறோம்'- ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

அ.தி.மு.க-வின் சிட்டிங் தொகுதியான ராமநாதபுரத்தில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.  தமிழகத்தில், ஏப்ரல் 18-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.  தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தலைமையில் கூட்டணிகளும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தேர்தலைச் சந்திக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை உள்ளன. அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க கைவசம் உள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. இந்தத் தொகுதியின் எம்.பி-யாக அன்வர் ராஜா இருக்கிறார். பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைந்தபோது, அன்வர் ராஜா கூறிய தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க-விலிருந்து அன்வர் ராஜா விலகுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அது வதந்தி என்று முற்றுப்புள்ளிவைத்தார் அன்வர் ராஜா. தற்போது அவர், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவராகவும் இருந்துவருகிறார். ஒரே நபருக்கு இரண்டு பதவிகளா என்ற கேள்வியை கட்சியினர் முன்வைத்துள்ளனர்.  

தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் அல்லது ராமநாதபுரம் தொழில் அதிபர் நவாஸ் கனி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்படும் பட்சத்தில், தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள, தகுதியான நபரை வேட்பாளராக நிறுத்த அ.தி.மு.க-வினர் ஆலோசித்துவருகின்றனர். ஆனால், கோஷ்டி பூசல் காரணமாக ராமநாதபுரத்தை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கும் சூழல் உள்ளது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை ராஜகண்ணப்பன்  இந்தத் தொகுதியைக் குறிவைத்து காயை நகர்த்திவருகிறார். யாதவ சமுதாய ஓட்டு வங்கியை நம்பி இவர் களத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில், நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான  ஜே.கே. ரீத்திஷ், தென்சென்னை இளைஞரணிப் பாசறையின் முன்னாள் நிர்வாகியும், சசிகலாவால் முதலில் நீக்கப்பட்டவருமான ஜெ.எம்.பஷீரை ராமநாதபுரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்துவருகிறார். 

 ராமநாதபுரம் தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம். கடற்கரைப் பகுதியில் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் உள்ளன. யாதவ சமுதாயத்திற்கு ஓரளவிற்கு ஓட்டு வங்கி உள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுகளைக் குறிவைத்துதான் தி.மு.க கூட்டணி சார்பில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பும் ஜெ.எம்.பஷீருக்கு, மாவட்ட அமைச்சர் மணிகண்டனும், மாவட்டச் செயலாளர் முனியசாமியின் ஆதரவும் இருக்கிறது. இதற்கிடையில், ராமநாதபுரம் தொகுதியை கட்சியின் சீனியரான தமிழ்மகன் உசேன் கேட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக, அவருக்கு சீட் கொடுக்க கட்சியில் சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ராஜ்ய சபா சீட்டை குறிவைத்து அன்வர்ராஜா காய் நகர்த்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தொகுதியில் அவர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கீர்த்திகா முனியசாமியும் ராமநாதபுரத்தில் போட்டியிட விரும்புகிறார். ராமநாதபுரம் தொகுதியில் 15 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். 

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``ராமநாதபுரம் தொகுதியில் அமைச்சர் மணிகண்டன் கோஷ்டி, மாவட்டச் செயலாளர் கோஷ்டிகளாகக் கட்சியினர் உள்ளனர். அமைச்சர் மணிகண்டனுக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையே நடந்த கோஷ்டி பூசல், கட்சித் தலைமைக்குத் தெரியும். அன்வர்ராஜா எம்.பி-க்கு சீட் கொடுக்க மாவட்டம் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ராஜகண்ணப்பனுக்கு சீட் கொடுக்க மாவட்ட நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அவருக்கு சீட் கொடுத்தால், பரமக்குடி இடைத்தேர்தலை கவனித்துக்கொள்கிறேன் என்று ராஜகண்ணப்பன் சார்பில் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தொகுதியில் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், ஜெ.எம்.பஷீர், உசேன் ஆகியோர்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், தொகுதியைக் கைப்பற்றும் ரேஸில் ராஜகண்ணப்பனும் இருக்கிறார். ஏற்கெனவே அன்வர்ராஜாவுக்கு இந்த முறையும் சீட் கொடுத்தால் உள்ளடி வேலையில் கட்சியினர் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கட்சித் தலைமைக்கு தகவல் வந்துள்ளது. இதனால், ராமநாதபுரத்தை கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கலாமா என்ற ஆலோசனையில் கட்சித் தலைமை உள்ளது. அந்த ஆலோசனையில், சிட்டிங் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், கோஷ்டிப் பூசலை சமாளிக்கும் வேட்பாளரைத் தேர்வுசெய்ய முடிவுசெய்துள்ளோம்" என்றார். 

முஸ்லிம் சமுதாயம் அதிகமுள்ள தொகுதிகளாக வேலூரும், ராமநாதபுரமும் உள்ளன. இந்தத் தொகுதியில்தான் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விரும்புவார்கள். அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை வேலூர் தொகுதியை புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர் தொகுதி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளதால், ராமநாதபுரம் தொகுதியைப் பெற அ.தி.மு.க-வில் உள்ள முஸ்லிம்கள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. ராமநாதபுரம் தொகுதியையும் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்தால், நாங்கள்  எங்கு நிற்போம் என்ற கோரிக்கையை கட்சித் தலைமைக்கு அ.தி.மு.க-வில் களம்காண இருக்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் நிலவும் கோஷ்டி பூசலால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.